செப்டம்பர் 23, 2016

சுவாதிகளுக்கும், வினுப்பிரியாக்களுக்குமாக

ஒருவரின் அந்தரங்கம் வெளிச்சத்திற்கு வருவதென்பது மிகவும் துரதிஷ்டவசமானது. அவ்வாறான ஒரு சூழலை ஆண் தாங்கிக்கொள்ளுதலே கடினம் என்கிற நிலையில் பெண் உடலரசியல் சார்ந்த சமூகத்தில் ஒரு பெண் படுகின்ற மன வேதனையை, அவளுக்கு பல தரப்புகள் எந்தத் தரவும் இன்றிப் போகிற போக்கில்  கொடுக்கிற விமர்சனங்களினால் அவள் அடைகிற மன அழுத்தத்தை நம்மால் விவரித்துவிட முடியாது. இப்படி ஒரு பெண் பாதிக்கப்பட்டால் அவளைச் சுற்றி இருப்பவர்கள், பெற்றோர்கள்,உறவினர்கள், தோழிகள், தோழர்கள் அந்தப் பெண்ணிற்கு ஆறுதலாக இருப்பது மிக முக்கியத் தேவை. ஆனால் சமூக சூழல் அவ்வாறாக இல்லை என்பது வருத்தத்திற்குரியது. எந்தத் தவறும் செய்யாமலே மிகவும் மோசமான விமர்சனங்களை ஒரு பெண்ணை நோக்கி வீசுகிற பொழுது மனதளவில் உடையும் ஒருத்தி நிச்சயம் மரணம் நோக்கிதான் செல்வாள். அவ்வாறான ஒரு மனமுதிர்ச்சியின்மைதான் இங்குள்ளது. ஒருவேளை பெண்ணின் பக்கம் சில தவறுகள் இருந்தாலும் இது போன்ற சூழல்களில் அவற்றை மையப்படுத்தி அவளை விமர்சிப்பது என்பது தேவையற்றது. காரணம் ஒவ்வொருவருக்கும் இங்கே உயிர்வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. அந்த உரிமையை தனிப்பட்ட குற்றச்சாட்டுகளாலும் விமர்சனங்களாலும் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.

தொண்ணூறுகளுக்குப் பிறகு பிறந்தவர்களிடத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் , நகரமயமாதலாலால் ஆண்-பெண் நட்பு விகிதம் மிக அதிகளவில் அதிகரித்தது. பள்ளியிலும், கல்லூரியிலும் மனப்பாடம் செய்வது மட்டுமே பெரும் பணி என்பதால் ஒரு ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும் எப்படிப் புரிந்துகொள்வது என்பதை அறியாதவர்களாகவே இருபத்தியோராம் நூற்றாண்டு இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆண்-பெண் உறவுமுறை குறித்த நல்ல வழிகாட்டுதல்கள் இங்கே பெயரளவிற்குக்கூட இல்லை. வெறும் ஜடங்களாக உலாவிக்கொண்டிருக்கும் இந்த இளைஞர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்ற அறிதலே இல்லாமல் மனப்பிறழ்வு நிலையில் இருக்கிறார்கள். சுவாதி கொலையிலும், வினுப்பிரியா தற்கொலையிலும் இதைப் பொருத்திப் பார்த்தால் நாம் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தை நம்மால் உணரமுடியும். ஆனால் இந்த சம்பவங்கள் மதரீதியிலும், சாதிய ரீதியிலும் திசை திருப்பப்படுவது துரதிஷ்டவசமானது.

இதுபோன்ற அற்பத்தனமான காரியம் செய்திருக்கும் ஒருவனை கடுமையாக தண்டிக்கவும் அதற்காக சட்டங்கள் எழுப்பவும் குரல் கொடுக்காமல் பெண்களை உங்கள் புகைப்படங்களை எங்கேயும் பகிராதீர்கள் எனச் சொல்வது உங்களுக்கு எல்லாம் வெட்கக்கேடாகத் தெரியவில்லையா? கடுமையான சட்டங்களோடு, ஆண்-பெண் உறவுமுறைகள் சார்ந்த நன்னெறிக்கல்வியை அளிப்பதுதான் இதற்கான முதன்மைத் தீர்வாகும். எவ்வளவு சட்டம் வந்தாலும் மனமாற்றம் வரவில்லையென்றால் அவ்வளவும் வீண்தான். ஆசிட் வீச்சில் உயிரிழந்த வினோதினி ஒரு பேட்டியில் ஆசிட் வீசியவனுக்கு என்ன தண்டனை கிடைக்கவேண்டும் என்று கேட்டபோது அவன் முகத்திலும் ஆசிட் வீச வேண்டும் என்று சொன்னார். அதுபோன்ற சட்டங்கள் இங்கே வரவேண்டும் என்று தோன்றுகிறது. என்னைக் கேட்டால் இதுபோன்ற காரியங்கள் செய்பவனின் பிறப்புறுப்பில் ஆசிட் வீச வேண்டும் என சொல்வேன்.