செப்டம்பர் 23, 2016

மூன்றாம் நதி

ஏரிகள்சூழ் இயற்கை நகரமாய் இருந்த பெங்களூரு தொழில் வளர்ச்சியாலும், நகரமயமாதலாலும் மக்கள் நெருக்கம் மிகுந்து குடியிருப்புகள் பெருகி எப்படி இடர்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை சமீபத்தில் ஒரு கட்டுரையில் படித்தேன். மூன்றாம் நதி என்ற இந்தக் குறுநாவலும் அது சார்ந்தே பேசுகிறது.

வா.மணிகண்டனின் சிறுகதைகளை நான் முன்னரே வாசித்திருக்கிறேன். அவைகளோடு ஒப்பிடும்போது அவரின் நடையும் வார்த்தைப் பிரயோகங்களும் இந்த நாவலில் மிகவும் மேம்பட்டிருக்கின்றன. பனியைவிட மென்மையாகப் பேசினாள் போன்ற இடையிடையே வரும் பிரயோகங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்த நாவல் இன்னும் பெரிதாகவே விரித்து எழுதுவதற்குச் சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும் தகவலை விரிக்காமால் தொடர்ச்சியாக அடுக்குவது நூறு பக்கங்களைத் தாண்டி எழுதுவது வாசிப்பவருக்கு சலிப்பைத் தரும் என்ற எண்ணத்தில் தவிர்க்கப்பட்டதாகத் தோன்றுகிறது. பெங்களூர் நகரம் எவ்வாறு நகரமயமாதலுக்கு உட்படுத்தப்பட்டது ,அதன் இயற்கை சமநிலை எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை அருமையாக விளக்க முயன்றிருக்கிறார் மணிகண்டன்.

காமம், காதல் போன்ற உணர்வு நிலைகளை பெரிய அளவில் விரித்து எழுதாததால் கதாபாத்திரங்களின் உணர்வு நிலைகளோடு பெரிய அளவில் ஒன்ற முடியவில்லை. பவானியின் பாத்திர வடிவமைப்பு பள்ளிப் பருவத்திலேயே படிப்பைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது எனக் கருதும் அளவிற்கு மனமுதிர்வுடன் இருப்பதாகச் சொல்லும் நாவலாசிரியர் எவ்வகை சூழ்நிலைகளால் அந்த மனமுதிர்வு  பவானிக்கு அந்த வயதிலேயே வந்தது என விளக்கவில்லை. அப்படிப்பட்ட மனமுதிர்வு இருக்கிற பெண் ஏன் வருணிடம் ஏமாறவேண்டும்? ரமேஷிடம் தெளிவாகப் பேசும் பவானி ,ஏன் வருணிடம் எனக்கு இன்னும் வயதும் உனக்கு பக்குவமும் வரவில்லை எனக் கூறவில்லை என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. பவானியின் பாத்திர வடிவமைப்பில் ஒருவகை குழப்பத்தன்மை இருக்கிறது. பவானியும் , லிங்கப்பாவும் பெங்களூரை விட்டு செல்லாமல் இருப்பதற்கு கூறப்படும் காரணமும் நம்பந்தகுந்ததாக இல்லை. அருக்காணியின் மரணமும் நம்பந்தகுந்ததாக இல்லை.

லிங்கப்பா ஏன் இறந்தான் என்கிற ஒற்றைக் கேள்வியோடுதான் நாவல் நகர்கிறது ஆனால் முடிவிற்கு முன்னாலே அதை ஊகித்துவிட முடிகிறது. மொத்தத்தில் முதல் நாவல் முயற்சி என்ற அளவிலும் பெருந்திரளென கட்டிடங்கள் ஆக்கிரமித்திருக்கும் பெருநகரத்தினுடைய சாதாரண மக்களின் வாழ்வியலை காட்டியிருப்பதற்கும் வா.மணிகண்டனைப் பாராட்டலாம். ஆனால் இதைவிடவும் சிறப்பாக அவரால் எழுத முடியமென்றே தோன்றுகிறது.