செப்டம்பர் 29, 2016

பால்யத்தை சிதைத்தல்

எந்த ஒரு விஷயத்திலும் வெற்றிபெறுவதோடு அது முடிந்துவிடுவதில்லை. வெற்றிபெற்ற பிறகுதான் அதனை நிலைநிறுத்திக் கொள்ளுதல் என்ற பெரிய பணி துவங்குகிறது. வெற்றியை நிலைநிறுத்துதல் என்பது மிகக் கடினமான பணி. ஒரு பாட்டுப் பாடும் போட்டியிலோ, ஆட்டம் ஆடும் போட்டியிலோ  வெற்றிபெறும் குழந்தை அதன் வெற்றியை வாழ்நாள் முழுக்க நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அல்லது ஏற்படுத்தப்படுகிறது. அது தொடர் பயிற்சி வேண்டுவது. மிகுந்த மன உளைச்சல் தருவது. இதையெல்லாம் செய்வதற்கான ஆற்றல் அந்தப் பிஞ்சு மனத்திற்கு இருக்குமா? அது அதன் மிக முக்கியமான குழந்தைப் பருவத்தையே இழந்துவிட்டு பெரியவர்களாகத் துடிக்கிறது அல்லது அந்த துடிப்பு மூளைச்சலவை மூலம் ஏற்றப்படுகிறது.

ஒரு பிரபலமான குழந்தை பெரும்பாலும் தன்னை மற்ற குழந்தைகளிலிருந்து தனித்துணரும். சுய அகங்காரத்தை அது சீக்கிரமே தலைமேல் ஏற்றுகிறது. பிற குழந்தைகளோடு இயல்பாய் உரையாடி, விளையாடி மகிழ்தல் அதன் மூலமாக வளர்தல் என்கிற செயல்பாடே அந்தக் குழந்தைக்கு அந்நியமாகிப் போகும். அது தன்னைப் பெரியவனாக உணர்கிறது. தான் செய்வது எப்போதுமே சரி என்ற எண்ணத்திற்கு ஆட்படுகிறது. எப்போதும் தன்னை மற்றவர்கள் கவனிப்பது அறிந்து இயல்பாய் இருப்பதே என்னவென்று அறியாமல் போய்விடுகிறது. ஆனால் இவை எதுவுமே அதன் சுய அறிவோடு செய்யப்படுவதல்ல , மூன்றாம் நபரின் சுய நலத்திற்கு இரையாகிப் போகிறது குழந்தைப் பருவம்.

குழந்தைகளின் உரிமையை அப்பட்டமாக மீறும் செயல்பாடு இது. ஒரு குழந்தை பள்ளிக்கல்வியை முடிக்கிறவரை அது சமூகத்தின் அங்கமே அல்ல. அதற்கு சமூகம் சார்ந்த எந்தத் தாக்கமும் கொடுக்கப்படக்கூடாது. குழந்தைப்பருவத்தை சிதைப்பதென்பது ஒருவனின் வாழ்வையே தடம் மாற்றுவது. இதற்கு கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டுமென்பேன்.