செப்டம்பர் 29, 2016

நான் என்ன செய்ய முடியும்?

கவர்ச்சி நடிகையின் தொடையை
கலர் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருக்கும்
தாத்தாவை இளமையின் பெருமிதத்தோடு பார்ப்பதைத் தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்?

காதலியின் தோள்மீது சாய்ந்துகொண்டே தூங்க முயலும் என்னை வெறுப்பாகப் பார்த்து பேருந்தின் ஜன்னல் கண்ணாடியில் சாய்ந்துகொள்ளும் சக இளைஞனை பரிதாபத்தோடு பார்ப்பதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்?

லெமன் ஜூஸ் குடித்துகொண்டே ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் என்னை வெறித்துப் பார்க்கும் ஒரு குழந்தையின் பார்வையைத் தவிர்ப்பதைத் தவிர நான் வேறு என்னதான் செய்ய முடியும்?

நான் என்ன செய்ய முடியும்? நான் என்ன செய்ய முடியும் என்று சிந்தித்துக்கொண்டே சாலையில் சாகப்போகையில் "ரோட்டப் பாத்துப் போடா ங்கோத்தா" என்று சொல்லும் போலிஸ்காரனிடம் சரிங்க சார் என்று சொல்லிவிட்டு யாரையோ சொன்னதுபோல் அத்தனை பேரிடமும் பாவனை செய்வதைத் தவிர நான் என்னதான் செய்ய முடியும்.

அத்தனை கோபத்தையும் சாப்பாட்டு மேசையில் வெறுமனே உலாத்திக்கொண்டிருந்த எறும்பை நசுக்கும்போது காட்டலாமென்றால் அது பாதி நசுக்கலிலே தப்பித்துப்போய்விட்டால் என்னதான் செய்ய முடியும்?

அது பிழைக்குமா? சாகுமா? யாருக்குத் தெரியும்?
அதைத் தேடி எடுத்து வைத்தியமா பார்க்க முடியும்?