அவனும் இவனும்

அவனும் இவனும் ஒரே நாளில்தான் பிறந்தார்கள்

அவன் பொய்சொல்வதே பாவம் என்றெண்ணிக் கொண்டிருந்த நாளில் இவன் பிக் பாக்கெட் அடித்துக்கொண்டிருந்தான்

அவன் கல்யாணம் பண்ணிக்கொண்டபொழுது இவன் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்தான்

அவன் வக்கீலுக்கு படிக்கப் போனபோது இவன் ஒரு மஞ்சள் பத்திரிக்கையை எழுத்துக்கூட்டி படிக்க முயற்சி செய்துகொண்டிருந்தான்.

அவன் நிறவெறிக்கெதிராய் குரல் எழுப்பியபோது இவன் நல்ல நிறமான விபச்சாரியைத் தேடி புணர்ந்து கொண்டிருந்தான்

அவன் விவசாயிகளுக்காய் சட்டை துறந்தபோது இவன் புது சட்டை போட்டு கல்யாணம் பண்ணிக்கொண்டான்

அவனை எல்லாரும் மகாத்மா என்று அழைத்தபோது இவனுக்கு எரிச்சலாய் இருந்தது. இவன் மனைவியை நாலு மிதி மிதித்து இவனையும் அவள் மகாத்மா என்று அழைக்க வேண்டுமென்று கட்டளையிட்டான்.

அவன் உண்ணாவிரதம் இருந்த நாட்களில் சோறில்லாமல் இவனும் உண்ணாமல்தான் இருந்தான்.

அவன் அகிம்சை பேசும்போதெல்லாம் இவன் புதிய முதலாளியிடம் அடிவாங்கிக் கொண்டிருந்தான்.

அவன் ஒரு கட்சியின் தலைவனானபோது இவன் அடி தாங்காமல் மீண்டும் பிக்பாக்கெட் அடிக்க ஆரம்பித்திருந்தான்.

அவனால் நாட்டிற்கு சுதந்திரம் வந்தபொழுது இவன் கோவிலுக்கு வெளியில் நின்று கும்பிட்டுக் கொண்டிருந்தான்.

அவன் பேத்தியோடு நிர்வாண சோதனைகள் செய்தபோது இவன் பேத்திக்கு கால் வெளித்தெரியா ஆடை தைத்துக்கொடுத்தான்.

அவன் சுட்டுக் கொல்லப்பட்டபோது இவன் மனைவி இவனை விட்டு ஓடிப்போயிருந்தாள்.

அவனுக்காய் அனைவரும் அழுதார்கள். இவனுக்கு யாருமில்லையென்று இவன் அன்றிரவே தற்கொலை செய்துகொண்டான்.

இவன் அவனுக்காய் தற்கொலை செய்துகொண்டதாய் அத்தனைபேரும் பேசிக்கொண்டார்கள்.

அவனும் இவனும் மக்கிப்போனார்கள்.

அவன்கள் பிறந்துகொண்டே இருந்தார்கள். இவன்களும் பிறந்துகொண்டே இருந்தார்கள்.

அவன்கள் அவனைப் பற்றிப் பேசினார்கள் இவன்களைப் பற்றி எவனும் பேசவில்லை.

அவன் பேசியதே இவனைப்பற்றிதான் என்று அவன்களுக்கும் தெரியவில்லை இவன்களுக்கும் புரியவில்லை.

பின்னொருநாள் அவன்கள் அவன் சிலைக்கு மாலை சார்த்தும்பொழுது இவன் மகன் பிக்பாக்கெட் அடித்துக்கொண்டிருந்தான்.