அக்டோபர் 05, 2016

ஒரு தலைமுறையின் தனிமை

நமக்கு முந்தைய தலைமுறை எத்தனைக் காதலை, நட்பை தகவல்தொடர்பு சாதனங்கள் இவ்வளவு வளர்ச்சி அடையாததால் இழந்திருக்கும்? ஒரு கடிதம் எழுதிவிட்டு பதிலுக்கான பரிதவிப்போடு காத்திருந்த மனிதர்கள் எத்தனை? ஒரு பொதுத்தொலைபேசி ரிசீவரை காதில் வைத்துக்கொண்டு அன்பிற்குரியவருக்காய் காத்துக்கொண்டிருந்த இதயங்கள் எத்தனை? இன்று அந்தப் பரிதவிப்பும், பரவசமும் இல்லை. கடைசியாக ஒரு நண்பன் எனக்கு வாட்ஸ் அப்பில் அவனாக என்னோடு பேச வேண்டுமென்று விரும்பி ஒரு குறுந்தகவல் அனுப்பி எத்தனை நாட்களாயிற்று? நிறைய மாதங்கள் ஆகிவிட்டது. 'நிறைய' என்பது எவ்வளவு காலம் என்று தெரியவில்லை. மிகச் சரியாக கணக்கிட்டு கூற இயலாத காலம். நான் இவ்வாறான தனிமைக்குள் சிக்கிக்கொள்வேன் என்று நினைக்கவேயில்லை. நான் முன்னொரு காலத்தில் தனிமையாக உணர்ந்தவனும் அல்ல. சுற்றிலும் நண்பர்கள் சூழ சிரித்துக்கொண்டிருந்தவன். இன்னும் கொஞ்ச நேரம் என்னுடனே இரேன் பேசுவோம் என்று சொன்ன தோழர்கள் எங்கே? உன்னை சத்தியமாக என்னால் மறக்கவே முடியாது என்று சொன்ன தோழிகள் எங்கே? அவர்களுக்கு என்ன ஆயிற்று? ஏன் பெருந்தனிமை என்னை சூழ்ந்தது? இது எனக்கான பிரச்சனை என்று நினைத்துக்கொண்டு சில பேரிடம் கேட்டபோதுதான் தெரிந்தது, இது எனக்கான பிரச்சனையல்ல , இது இந்தத் தலைமுறையில் பெரும்பாலானவர்களின் பிரச்சனை.

சத்தியமாக மறக்கவேமாட்டேன் என்று சொன்ன தோழிக்கு நிகழ்ந்தது என்ன? அவள் சூழல் மாறிவிட்டது. அது அந்த கணத்தில் அவளுக்குத் தோன்றியது. அந்த மகிழ்ச்சியான அல்லது துயரமான கணத்தில் அவளுக்கு தோன்றிய ஒரு சிந்தனை. ஆக வாழ்நாள் முழுமைக்குமாக அவள் அதைச் சொன்னதாக எடுத்துக்கொள்வது நம் தவறு. இதை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவள் வேறு யாரையாவது மறக்கவே மாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால் மறக்கவே மாட்டேன் என்று சொல்லி மறக்காதவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் நாம் அவர்கள் வாழ்வில் ஏற்படுத்திய தொடர் நிகழ்வுகளின் தாக்கத்தால் அவ்வாறானவர்கள்.  அவர்களுக்கும் நமக்குமான சூழல் பொதுவானதாக இல்லாத பட்சத்தில் அவர்கள்களிடம்கூட நம்மால் தொடர்ந்து உரையாட முடியாது. நல்லாருக்கியா? சாப்டியா? என்று கேட்கலாம், பிறகு கடைசியாகப் பார்த்த சினிமா பற்றிப் பேசுவதுதான் அதிகபட்ச உரையாடல்.

ஆனால் நம்மை விரும்புகிறவர்களைப் புறக்கணித்துவிட்டு, நாம் விரும்புகிறவர்களைத் தேடிப் போகிறபொழுதும் தனிமை உண்டாகிறது. தரப்படாத அன்பினால் விளையும் அந்தத் தனிமை பெரும் மன உளைச்சல் தருவது, ஆபத்தானது. நம் சூழலில் காதல் என்பது தனிமையைப் போக்கிக்கொள்வதற்கான மிகச் சிறந்த வழி. விடிய விடிய பேசிக்கொண்டிருக்கலாம் தனிமையே இருக்காது. ஆனால் அது எல்லோருக்கும் அமைவது இல்லையே.

காதல் இல்லாத பெரும்பாலான இளைய தலைமுறை நண்பர்களுக்கு தனிமை இருக்கிறது. ஏன் எல்லாருக்கும் காதல் வாய்ப்பது இல்லை? எல்லாருக்குமே அழகிகளும், அழகன்களும்தான் வேண்டுமென்றால் அமையாது. ஒரே காதல் அதுவும் கல்யாணத்தில் முடியவேண்டும் என்ற புனிதக்காதலை தவிர்த்தால் அமையலாம். கொஞ்சம் இறங்கி வந்தால் அமையலாம். ஆனால் அதுவும்கூட இருபுறமும் அவ்வாறான எண்ணம் வந்தால்தான் உண்டு. ஒருபுறம் நாம் இறங்கிவந்து மறுபுறம் இருப்பவர் சுமார்தானே என்று ஓவர் தன்னம்பிக்கையில் இருந்தால் மறுபுறம் இருப்பவர் நம்மை ரொம்ப சுமார் என்று நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது. ஆக இதுகொஞ்சம் வெற்றிவாய்ப்பு குறைவான பரிசோதனைதான். தனிமையைப் போக்குகிறேன் என்று இதை செய்தால் தனிமையோடு, காதல் தோல்வியும் வந்துவிடும்.

என்ன செய்யலாம் என்றால் நமக்கு பிடித்தவற்றை விவாதிக்க,புதிதாக அறிந்துகொள்ள  ஒரு நண்பர்கள் குழு அமைக்கலாம் அல்லது நமக்கு பிடித்த ஏதாவதொன்றை செய்யலாம். நான் எப்படி இந்தப் பத்தியை தட்டச்சு செய்கிறேனோ அப்படி ஏதாவது. எதையாவது எழுதுவது எனக்கு தனிமையிலிருந்து விடுபட பெரிய அளவில் உதவுகிறது. ஏதாவது படம் பார்க்கலாம், பாட்டு கேட்கலாம், புத்தகம் படிக்கலாம், ஓவியம் வரையலாம், பயணம் செய்யலாம் அப்படி ஏதாவது. அது மட்டும்தான் வெறுமையைப் போக்க ஒரே வழி. உண்மையைச் சொன்னால் கல்லூரி எல்லாம் முடித்தபிறகு வாழ்க்கையே பெரும் வெறுமைதான். அதனால் ஒரு லட்சியத்தை வைத்துக்கொண்டு அதி தீவிரமாக அதை அடைய முயலலாம். அதை அடைந்தால் வேறொன்றை அடைய முயலலாம். சினிமா ஹீரோ அல்லது ஹீரோயின் ஆக முயலலாம். ஹீரோ ஆகிவிட்டால்  "அன்னைக்கு ஹாய் அனுப்பனப்ப ரிப்ளை பண்ணவே இல்ல. இப்போ என்னத்துக்கு பேசற" என்று சுய அகங்காரத்தை திருப்பிக் காட்டலாம். என்ன செய்யக்கூடாதென்றால் நமக்குப் பிடித்தவரிடம்போய் என்னோடு கொஞ்ச நேரம் பேசுகிறாயா என்று கேட்கக்கூடாது. நம்மோடு பேசுவதென்பது நம்மை ஒருவருக்குப் பிடித்து அதுவாகவே நிகழல் வேண்டும். இத்தனை தகவல் தொழில்நுட்பத்துக்கு மத்தியில் Feeling alone என்று பதிவு போடக்கூடாது. மனிதர்களின் இயல்பு அதுதான் எனப் புரிந்துகொண்டு முன்னகர வேண்டும். உயிர் போகும் தனிமை என்று நீங்கள் மிகையுணர்ச்சி காட்டினாலும்  வாழ்வதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது என்கிற உண்மையை உணர்ந்து கொண்டால் இந்தப் பிரச்சனையின் தீவிரம் குறையும்.