அக்டோபர் 12, 2016

வடிவேலு என்னும் பெருங்கலைஞன்

வெகுஜன மக்களுக்கான நகைச்சுவை என்பது பார்ப்பவனிடமிருந்து எவ்வகை உழைப்பும் பெரும்பாலும் தேவைப்படாததாய் , மிக எளிதில் புரிந்துகொள்ளத்தக்கதாய் இருக்க வேண்டும். கிரேஸி மோகனின் வசனங்கள் நல்ல பகடியைத் தன்னகத்தே கொண்டிருப்பவை. ஆனால் அவை புரிந்துகொள்வதற்காக கொஞ்சம் உழைப்பை நம்மிடமிருந்து எடுத்துக் கொள்பவை. எனவே வெகுஜன மக்களுக்கான நகைச்சுவையாக மாறும் தகுதியை அவை இழந்துவிடுகிறது. சுயத்தை அழித்து சுய பகடி செய்வதுதான் தமிழில் பெரும்பாலும் வெற்றிகண்டிருக்கிற நகைச்சுவை. தொண்ணூறுகளுக்குப் பிறகு தமிழின் மிக முக்கிய நகைச்சுவையாளர்களாக விவேக்கையும், வடிவேலுவையும் சொல்லலாம். இவர்களின் அறிவிக்கப்படாத போட்டியில் மிக நிச்சயமாக வென்றவர் வடிவேலுதான். விவேக் ஒரு படித்த இளைஞரின் தோற்றத்தை தொடர்ந்து முன்னிறுத்தும் வேளையில் வடிவேலு தன்னை சாமானியனாக, பாமரனாக முன்னிறுத்துகிறார். எனவே தங்களிலிருந்து ஒருவனாக வடிவேலுவை வெகுஜனம் ஏற்கத் துவங்குகிறது.விவேக்கின் நகைச்சுவைகள் பெரும்பாலும் சமூக சீர்திருத்த நோக்குடையவை . எனவே விவேக் தான் காண விரும்பிய மாற்றத்தை பிரச்சாரம்போல் முன்வைக்குகிறார். இதன்மூலம் நகைச்சுவை, கலையாகுதல் என்பதிலிருந்து தவறி வெறும் கருத்தாக நின்றுவிடுகிறது. மறுபுறத்தில் வடிவேலு தனது உடல்மொழிகளின் மூலமும், ஒவ்வொரு படத்திலும் மாற்றம் காணும் தோற்றம் மூலமும், குரல் வேறுபாடுகள் மூலமும் ரசிகனைக் கவர்ந்திழுப்பதன் ஊடாக மறைபொருளாக சமூகம் சார்ந்த தனது கருத்தியல்களை தொடர்ந்து முன்வைக்கிறார். அது நேரடியான பிரச்சார உத்தியைக் கொண்டிராமல் நமக்கு எப்போதும் நினைவிலிருக்கும் நிகழ்வாகிப்போவதன் மூலமும் அதை நாம் தொடர்ந்து திரும்பத் திரும்ப உரையாடல்களில் சுட்டிக்காட்டுதல் மூலமும் மறைமுகமாக ஒரு சிந்தனை மாற்றத்தை சாமானியரிடம் உருவாக்குமிடத்தில் அது கலை ஆகிறது.

வீட்டின் காலிங்பெல்லை அடிக்க ஒரு குழந்தைக்கு உதவி மாட்டிக்கொள்வது, பலூனை ஊத உதவி ஒரு குழந்தையின் அப்பாவிடம் அடிவாங்குவது போன்ற இடங்களில் நம் தலைமுறையின் குழந்தை வளர்ப்பு முறையை சிந்தனைக்குள்ளாக்குவது, எவன் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்கு சாமி தெரியும் என வாழ்வின் பொய்த்தனங்களை கேலி செய்வது, வாத்தியாருக்கு சைக்கிள் ஓட்ட சொல்லித்தரும்பொழுது நல்லா பாத்து ஓட்றா என புதிதாகக் கைவந்த ஆதிக்கத்தின் ருசியைச் சுவைத்துப் பார்க்கும் மனித உளவியலை வெளிப்படுத்துவது, சர்வாதிகாரத்தின் மேலிருக்கும் மனித வெறியை நானும் ரவுடிதான் என்று வெளிக்காட்டுவது இறுதியில் அதன் இயலாமையை பில்டிங் ஸ்ட்ராங்க், பேஸ்மென்ட் வீக் என விறைப்பாக ஒப்புக்கொள்வது என தமிழ் திரை வரலாற்றில் என்றும் மறக்கமுடியாத, மறைக்கமுடியாத கலைஞனாக வடிவேலு  வீற்றிருக்கிறார். விவேக் , கலைஞருக்கு கவிதை எழுதிவிட்டு அம்மாவுக்கு விளம்பரம் நடித்துக்கொடுத்தபோது, தனது அரசியலை சுயநலங்கள் இருந்தாலும் நேர்மையோடு முன்வைத்து தன்னை அழித்துக்கொண்ட இடத்தில் வடிவேலு உயர்ந்து நிற்கிறார். அந்த சிம்மாசனத்தின் காலருகே இன்றைக்கு யோகிபாபு, சூரி போன்றோர் உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த சிம்மாசனம் எப்போதும் சந்தானத்திற்கு உரியதல்ல. காரணம் சந்தானம் சுய பகடி செய்வதில்லை, பிறரை மன, உடல் அளவில் சீண்டுதலையே செய்கிறார். அது நகைச்சுவையே அல்ல.