அக்டோபர் 07, 2016

கவனம் பெறுதல்

நேற்று கவனம் பெறுதல் பற்றிய இரண்டு பதிவுகளைப் ஃபேஸ்புக்கில் பார்க்கமுடிந்தது. முதல் பதிவு எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் தனது பதிவுகளை யாரும் கவனிப்பது இல்லை என்றும் திட்டமிட்டு தான் புறக்கணிக்கப்படுவதாகவும் எழுதியிருந்த பதிவு. கௌதம சித்தார்த்தன் என்று ஒரு எழுத்தாளர் இருக்கிறார் என்றே ஒருமுறை நீயா நானா பார்த்துதான் தெரியும். அவர் குறிப்பிட்டதுபோலவே அவரை வேறு யாரும் குறிப்பிட்டும் நான் பார்த்தது இல்லை. இரண்டாவது பதிவு அவ்வப்பொழுது கவிதைகள் எழுதும் தியாகராஜன் என்ற நண்பர் அவரது கவிதைகள் கவனம் பெறாததால் தான் மன உளைச்சல் அடைவதாகக் குறிப்பிட்ட பதிவு.

கொஞ்சம் அகங்காரத்தோடு அல்லது நிரம்பவே அகங்காரத்தோடு ஒரு விஷயம் சொல்லவேண்டுமென்றால் தமிழில் இருபத்தி நான்கு வயதில் நான் எழுதுபவை மிக மிக முக்கியமான சிந்தனைகள். தமிழின் முக்கியத்துவம் வாய்ந்த இளஞ்சிந்தனையாளனாக நான் பெறவேண்டிய கவனமும் பத்தோ, பதினைந்தோ லைக் அல்ல. இதைவிட அதிகமாகவே நான் சமகால இளைஞனிடம் கவனம்பெற வேண்டியவன். சமகாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் எனக்குத் தெரிந்த நண்பர்கள் எவருமே போதுமான கவனம் பெறவில்லை. கல்குதிரை, சிலேட் இதழ்களில் சிறுகதை எழுதியிருக்கும் Ashok Ramaraj, விகடன் தடத்தில் கவிதை எழுதியிருக்கும் விஷ்ணு குமார், கணையாழியில் சிறுகதை எழுதியிருக்கும் கிருஷ்ண மூர்த்தி, கவிதையில் புதிய வடிவங்களை பரீட்சித்து நிறைய இதழ்களில் எழுதிவரும் Surya Vn,  சிறுகதைகள் தொடர்ந்து எழுதிவரும் தூயன் என எவருமே தேவையான கவனத்தை அடையவில்லை. கவனம் என்பது இலக்கியவாதிகள் புதிதாக எழுதவருபவனை கவனிப்பதைக் குறிப்பதல்ல. சக இளைஞன் இன்னொரு இளைஞனின் எழுத்தை எவ்வாறாக கவனிக்கிறான் என்பதைக் குறிப்பது.

இரண்டு விதமான காரணங்களை கவனம் பெறாததற்கு முக்கியமாகச் சொல்லலாம். அராத்து துவக்கத்தில் டிவிட்டரில் எழுதிவந்தவை மிக அற்புதமான, கவித்துவமான டிவீட்கள். அவற்றை ஃபேஸ்புக்கிலும் பகிர்வார். அவை பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பதினைந்து லைக்தான் வாங்குவார். அவர் கண்டுகொள்ளப்படவே இல்லை. ஆனால் தற்கொலைக் குறுங்கதைகள் என்ற மொண்ணையான கதைகள் வந்தபோது அவர் ஆச்சரியப்படத்தக்கவிதம் கொண்டாடப்பட்டார். அது ஏன் அவ்வாறு நிகழ்ந்தது, அதன் பின்னுள்ள அரசியல் என்ன
என்பதை யோசித்தால் ஏன் கவனம் பெறவேண்டியவர்கள் சரியான நேரத்தில் கவனம் பெறவில்லை என்பது விளங்கும்.

இரண்டாவது ,தமிழ் சூழலில் இளைஞர்கள் கண்டுகொள்வதென்பது மிக எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய மொண்ணைத்தனங்களை. எந்த ஒரு படு மொண்ணையான குறும்படத்திற்கு கீழேயும் நீங்கள் சூப்பர் என்ற ஐம்பது கமெண்டுகளைக் காணலாம். அவன் அதுமுதல் டைரக்டர் என்று அழைக்கப்படுவான். ' பூ என்றால் புய்ப்பம். உன்மேல் மட்டும்தான் எனக்கு விருப்பம்' என்று எழுதுகிறவன் கல்லூரியில் அத்தனைபேரும் விரும்பும் கவிஞன். இப்படிப்பட்ட ரசனைத்தளத்தில் புதிய சிந்தனைகள் எப்படிக் கண்டுகொள்ளப்படும்? மனுஷ்யபுத்திரனுக்கு ஐந்தாயிரம் நண்பர்களும் அறுபதாயிரம் பாலோவர்களும் இருக்கிறார்கள். அவர் கவிதைகளுக்கு வாங்கும் லைக் எண்பது. ஒருபோதும் முன்னூறைத் தாண்டாது. இதுதான் இங்கே தமிழ் ரசனை.

என்னைப் பொறுத்தவரையில் எழுதுகிற துடிப்புடைய இளைஞன் சூழலில் தன்னை நிரூபிக்க வேண்டிய எந்தத் தேவையும் கிடையாது. புகழுக்கு ஆசைப்படவில்லையென்று பொய் சொல்ல விரும்பவில்லை. ஆனால் எழுவதென்பது புகழுக்கானது மட்டுமல்ல. வாழ்வின் வெறுமையைப் போக்கவே பெரும்பாலும் எழுதுகிறேன். ஒரு ஆறு மாதத்தில் சுற்றியும் நண்பர்குழாம் சூழ, காதலிக்க ஒரு பெண்ணும், நல்ல வேலையும் கிடைத்துவிட்டால் எழுதுவேனா என்று தெரியவில்லை.ஆனால் இந்தத் தனிமையில் எதையாவது எழுதிக்கொண்டுதான் இருப்பேன். அது ஒரு மனத்திருப்தி. சமீபத்தில் ஒரு தோழி நீ எழுதுபவை பிடித்திருக்கிறது. பொதுவில் லைக் போட முடியவில்லை என்று சொன்னாள். இதுபோன்ற கவனிப்புகளே எனக்குப் போதுமானவை.

ஒருநாள் ஜெயமோகனோ, சாரு நிவேதிதாவோ எழுதுவதை நிறுத்திவிட்டால் அவர்களுடைய ரசிகர்கள் தயவுசெய்து எழுதுங்கள் என்று இரண்டு நாள் சொல்லிப்பார்ப்பார்கள். அதைக் கேட்காவிட்டால் வேறொருவரை ஜெ ஆகவோ, சாருவாகவோ மாற்ற ஆரம்பித்து அவர்களைப் பின்தொடர்வார்கள். ஆக எழுதுகிறவனுக்கான என்றில்லை உலகில் எல்லா மனிதர்களுக்கான முக்கியத்துவமும் கொஞ்சம் குறைவுதான். ஒருவன் போனால் இன்னொருவன் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருப்பான். எவனும் கவனிக்கமாட்டைங்கறான் எழுத மாட்டேன் என்று சொன்னால் நஷ்டம் நமக்குதானே தவிர இன்னொருவனுக்கு அல்ல.