அக்டோபர் 12, 2016

எதுவோ ஒன்று ஆதல்

சிறு குழந்தைகளாக இருக்கிறபொழுது நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு ஆசிரியர் ஆகவேண்டும் என்று ஆசை வரும். அந்த வயதில் நமக்குத் தெரிந்த பெரும் ஆளுமை ஆசிரியர்தான். ஆசிரியரைப் பார்த்து  நம்முடன் படிக்கும் குழந்தைகளும், நாமும்       பயப்படுவோம்.அதனால் ஆசிரியர் ஆவதுதான் நாம் பெரிய ஆள் ஆவதற்கான வழி என்று நமது சுயம் முடிவெடுத்துக்கொள்ளும். திடீரென்று ஒருநாள் காய்ச்சல் வந்துவிடுகிறது. டாக்டர் பெரிய ஊசி ஒன்றை எடுத்து குத்த வருகிறார். ஆசிரியரின் அடியைவிட ஊசி வலி பெரிதாக இருக்கிறது. நம் சுயம் ஆசிரியரிலிருந்து டாக்டருக்கு தாவும். மற்றொருநாள் டிவி பார்க்கும்பொழுது ஒரு போலிஸ்காரர் ரவுடிகளையும், பொதுமக்களையும் அத்தனை பேரையும் பயமின்றி அடிப்பதைப் பார்க்கும்பொழுது டாக்டரவிட போலிஸ்தான் பெருசு என்று நம் சுயத்திற்கு எட்டும். போலிஸ் ஆவது நம் லட்சியமாக மாறும். இந்த லட்சியங்களை உடைய குழந்தைக்கு ஆசிரியரின், மருத்துவரின், காவலரின் தேவையும் அவர்கள் சேவையும் என்னவென்று தெரியாது. அதைச் சிந்திப்பதற்கான திறன் அந்த சிறு குழந்தைக்குக் கிடையாது. அந்த வேலையின் கவர்ச்சியும் அதன் மூலம் கைவரும் அதிகாரமுமே அதற்குத் தெரியும். அந்தக் குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும் அதற்கு விஷயங்கள் பிடிபட ஆரம்பித்து அதனால் அதன் திறனைக் கொண்டு எதுவாக ஆக முயலுமோ அதுவாக ஆகும்.

ஆனால் நம் சூழலில் பிரச்சனை என்னவென்றால் சிலவேளைகளில் குழந்தையாக இருந்தபோது என்ன அறிவு இருந்ததோ அந்த அறிவு நிறையப்பேருக்கு மேம்படாமலே போய்விடும். குழந்தைகளின் அறிவோடே இறுதிவரை இருப்பார்கள்.   அரங்கம் ஒலிக்க கைதட்டல் வாங்கும் ஒரு பேச்சாளனின் பேச்சைப்பார்த்துவிட்டு அடுத்தநாள் முதல் நான் ஒரு பேச்சாளனாக வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருப்பார்கள். நான்கு காதல் கவிதைகளைப் படித்துவிட்டு நான் கவிஞனாக வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருப்பார்கள். அது அந்த கணத்தில் ஏற்பட்ட இயல்பான உணர்வு நிலை என்று உணராமல் தப்பும்தவறுமாக ஏதாவது கிறுக்கி கவிதை என்பார்கள். அதை இதுவரைக் கவிதையே வாசித்திராத நான்கு பேர் கவிதையின் உச்சம் என்பார்கள். அதை அந்த நான்கு பேரோடு வைத்துக்கொண்டால் பரவாயில்லை அதைப் பொதுவெளியில் வைத்துவிட்டு ஒரு மிகச்சிறந்த காவியத்தை தமிழுக்கு தந்துவிட்ட அளவிற்கு தன்னை நினைத்துக்கொள்வார்கள். சமீபத்தில் ஒரு இளைஞன் இவ்வாறான கவிதைகளை எழுதுவது கண்டு அவனிடம் நான் தமிழின் முக்கிய கவிஞர்களின் புத்தகங்களைக் கொடுத்து படித்துப்பார்க்கச் சொன்னேன். அதற்கு அவன் எதையும் படிக்க வேண்டிய அவசியமில்லையென்றும்  மனதிலிருந்து வெளிவருவதை யாரையும் படிக்காமலேயே கவி புனையும் ஆற்றல் அவனுக்குண்டு என்றும் சொல்லிவிட்டான். தமிழின் கவிதைகளை அறியும் பெருவாய்ப்பை அவனுக்கு அளித்த என்னை அவன் அவ்வாறு சொன்னதைக்கூடப் பொறுத்துக்கொண்டேன்.ஆனால் மீண்டும் ஒரு மொண்ணையான காதல் கவிதை எழுதிவிட்டு அது எனக்குத் தரும் உணர்வு என்ன என்று அவன் கேட்டபோது என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. பின்னொருநாள் சினிமா வசனகர்த்தா ஆகும் ஆசையை அவன் சொன்னபோது அவன் தொடர்பைத் துண்டித்துக்கொண்டேன்.சிறுவயதில் எவனும் கவிஞனும், பேச்சாளனும் ஆக விரும்புவதில்லை. போலிஸ் ஆகி அதிகாரம் பெறுவது சாத்தியப்படாமல் போகும்போது புகழ் என்கிற விஷயமாவது கிடைக்கட்டுமே என்று கவிஞர் ஆகத் துடிக்கிறது மனித மனம். அது நிச்சயமாகத் தவறல்ல. ஆனால் அதற்கான முயற்சிகளை எடுக்காமலே இருந்துவிட்டு நான் ஏன் அது ஆகவில்லை என மன உளைச்சல் அடைவதாக பாவ்லா செய்வதையும் மிகச்சிறிய முயற்சியை நான்குபேர் பாராட்டும்பொழுதே நம் கனவுகளை நிஜமாக்கிக்கொண்டதாகக் கனவு காண்பதையும்தான் தவறென்று சொல்கிறேன்.

இந்த கவிஞர்களைவிட மோசமான ஒரு குழு எதுவென்றால் குறும்பட இயக்குநர்கள். சமீபத்தில் என் முன்னாள் நண்பன் ஒருவன் இயக்கிய விழி என்றொரு குறும்படம் பார்த்தேன்.  கண் தெரியாததுபோல் நடித்து ஒருவன் பிச்சை எடுத்து வாழ்கிறான். ஒருநாள் உண்மையிலேயே கண்தெரியாத ஒருவன் உழைத்துவாழ்வதைப் பார்க்கும்போது மனம்திருந்தி இவனும் உழைத்துவாழ ஆரம்பிக்கிறான். இதுதான் கதை. ஒரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவனைக் கூப்பிட்டு இந்தக் கதையைச் சொன்னால் துப்பிவிட்டுப்போய்விடுவான். இத்தனைக்கும் நண்பரின் ஏழாவதோ எட்டாவதோ குறும்படம் இது. உண்மையில் பரிதாபமாக இருக்கிறது. இதுபோன்ற மொண்ணைப்படத்தைக் குறும்படப் போட்டிக்கு அனுப்பிவிட்டு பரிசு கிடைக்கவில்லை என்று புலம்பும்போது கஷ்டமாக இருக்கிறது. இல்லாத திறமையை இருப்பதாக நினைத்துக்கொண்டு இந்த மொண்ணைதனங்களுக்கு அங்கீகாரம்தேடி கோடம்பாக்கத்தின் கதவுகளைத் தட்டப்போகிற நண்பனுக்கு உண்மையை யார் சொல்வது? இம்மாதிரிப் படங்களை எடுத்து நம்மை எரிச்சலூட்டுவதோடு நில்லாமல் தன் வாழ்வையே சினிமாவிற்கு அர்ப்பணிக்க நினைக்கும் நண்பனிற்கு எல்லாரும் எல்லாமும் ஆக முடியாது என்று யார்தான் சொல்வது? புகழ், அதிகாரம் இவற்றையெல்லாம்தாண்டி மகிழ்ச்சியாக வாழ்வது முக்கியமானது. இல்லாத திறமைக்காக ஒருமுறையே கிடைக்கும் வாழ்வை அழித்துக்கொள்ளும் நண்பனைப் பார்க்கிறபொழுது சகமனிதனாக மிகவும் வருத்தமாக இருக்கிறது.