அக்டோபர் 14, 2016

அழுக்காறு

என்னுடைய நெருங்கிய நண்பன் ஒருவன் சினிமா ஹீரோ ஆகிவிட்டால் எனக்கு எவ்வளவு பொறாமையாக இருக்கும்? அவனுக்குக் கிடைக்கும் புகழ், பணம், பெண் நட்பு எல்லாமே என்னைக் கடுப்பேற்றும். அவ்வளவுதூரம் போகவேண்டியதில்லை சமீபத்தில் ஒரு எழுத்தாளர் இன்னொரு இளம் நண்பனின் கதைகள் நன்றாக இருப்பதாக சொன்னபோதே பொறாமை பொத்துக்கொண்டு வந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்குபிறகு அந்தப் பொறாமையின் சுவடு மறைந்துவிடும். நான் பொறாமைப்படும் மனிதனை கவனித்து அவனிடமிருக்கும் அறிவை,திறமையைக் கண்டுணர்ந்தால் அவனைப் பாராட்டுவதோடு அவனிடமிருந்து கற்றுக்கொள்ளவும் முயல்வேன்.  மனித இயல்பான பொறாமையைத் தாண்டி, ஒரு நடிகன் ஆக நண்பன் எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பார்க்கிறபொழுது அவை பாராட்டத்தக்கவை என்கிற உணர்வு நமக்கு வரவேண்டும். அவன் அதற்காக உழைத்திருக்கிறான் ,நாம் அப்போது என்னசெய்துகொண்டிருந்தோம் என்று யோசிக்கவேண்டும்.

ஒருவன் ஒரு தேர்விற்கு மாதக்கணக்கில் உழைத்து தன்னை தயார் செய்துகொண்டிருப்பான். அதைப் பற்றிய தகவல் எப்படியாவது வெளியே கசிந்து நண்பர் குழாமிற்கு தெரிந்திருக்கும். ஒரு நான்குபேர் ஃபோன் செய்வார்கள்.
" மச்சி, டி.என்.பி.௭ஸ்ஸி அப்ளை பண்றியா?"
" ஆமாண்டா"
"எனக்கும் அப்ளை பண்ணி விடுடா"
அது என்ன தேர்வு, எவ்வளவு இடங்கள், என்ன படிக்கவேண்டும் எதுவும் தெரியாது. அதிலும் அவர்கள் விண்ணப்பிக்கவும் மாட்டார்கள். நாம்தான் செய்துகொடுக்கவேண்டும். அதற்குப் பிறகு அதற்கு என்ன படிக்கவேண்டும் என்று நம்மை நச்சரிப்பார்கள். தப்பித்தவறிக்கூட வேலைக்கான ஃநோட்டிபிகேஷனை படிக்க மாட்டார்கள்.

"நோட்டிபிகேஷன் பெருசா இருக்கு மச்சி. சுருக்கமா சொல்லேன்"

அந்த அறிவிப்பையே முழுதாகப் படிக்கமுடியாதவன் எப்படித் தேர்விற்கு படிக்க முடியும்?

" இந்த எக்ஸாம் கொஞ்சம் கஷ்டம்டா. ஒரு ஆறுமாசம் தொடர்ச்சியாப் படிச்சாதான் கிடைக்கும்"

" ஒரு லக்ல கிடைச்சுருச்சுன்னா மச்சி"

அது எப்படி ஐயா ஒன்றுமே தெரியாத ஒரு தேர்வில் நீங்கள் லக்கில் வெற்றிபெறுவீர்கள்? இதுகூட கொடுமையில்லை. தேர்வு முடிவுகள் வரும்போது ஒரு ஃபோன் வரும்.

" என்ன மச்சி பாஸாயிட்ட போல. உனக்கு லக் இருக்குடா"

எப்படியாக உழைப்பைக் கொச்சைப்படுத்துகிறார்கள்? "அவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு அதான் ஹீரோ ஆயிட்டான்" நீங்கள் குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்த இரவுகளில் அவன் தூக்கமின்றி அவன் உள்ளுணர்வை நிறைவேற்றப் போராடிக்கொண்டிருந்தான். அவன் முயற்சிகளை அதிர்ஷ்டம் என்று அவமானப்படுத்தாதீர்கள்.

ஜெயமோகன் தளத்தில் என்னுடைய ஒரு கடிதம் வந்திருக்கிறது. பத்து கடிதம் எழுதினால் இரண்டிற்குதான் பதில் வரும். இதற்கு ஒரு நண்பன் கேட்கிறான் " ஒரு கடிதம்போட்டு பதில் வர்லைனா இன்னொரு கடிதம் போட்றியே, வெக்கமா இருக்காதா? " ஐயா, நான் அறிந்துகொள்ளும் ஆவலில் இருக்கிறேன். ஜெயமோகனிடம் மதம், மரபு, தத்துவம், இந்திய இலக்கியம் என்று அறிந்துகொள்ளலாம். சாரு நிவேதிதாவிடம் உலக சினிமா, உலக இலக்கியம் என அறிந்துகொள்ளலாம். அறிய விரும்புகிறவன் சுயத்தைக் கழற்றிவைத்துவிட்டு கற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அவர்கள்மேல் எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் அவர்கள் என்னைவிட நன்றாக அறிந்தவர்கள் அவர்களைப் புறக்கணிக்கமுடியாது. அவர்களின் எல்லாக்கருத்துகளையும் கேட்டு உள்வாங்கி அவர்களின் பாதங்களில் விழுந்து கிடப்பதல்ல இது. அவர்கள் சொல்லும் சிந்தனைத்தளங்களை யோசித்து நமக்கான புது சிந்தனையை சுய அறிவின்மூலம் எட்டுவது. ஜெயமோகன் இலங்கையில் நடந்தது போர் அல்ல என்று எழுதியபோது மனிதர்களின் உணர்வுகளுக்கு நீங்கள்  மதிப்பளித்திருக்கலாம் என்று கடிதம் எழுதியவன்தான் நான். ஆனால் சுயதேவைகள் வரும்போது காலில் விழவேண்டும் என்று சொன்னால்கூட விழுவோம். அறிவார்ந்த தகவலை அறிதல் என்பது பணம் சம்பாதிக்கும் செயல்பாடல்ல எனும்போது " வெட்கமா இல்லியா" என்ற கேள்வி அகங்காரத்தோடு எழுகிறது.

மென்பொருள் நிறுவனத்தில் வேலைசெய்திருக்கும் நண்பர்களுக்குத் தெரியும். புதிதாக வேலைக்குச் சேர்ந்தவனுக்கு Ms-officeல் டாக்குமென்ட் தயாரிக்கும் பணியோ அல்லது Ms-excelல் ஏதாவது குறித்து வைக்கும் பணியோவே பெரும்பாலும் கிடைக்கும். கணினி நிரல்கள் எழுதிக்கொண்டிருக்கும் சீனியரை ஆசையோடு பார்த்துக்கொண்டிருப்போம். ஒரு இரண்டுமாதம் போனபின்பு சீனியர் முன்னால் போய் நிற்போம்.

" அண்ணா, நீங்கப் பண்றது எப்படினு சொல்லித்தரீங்களா?"

சீனியர் நம்மை மேலும், கீழும் பார்ப்பான். அவன் இருத்தலையே கேள்விக்குள்ளாக்கும் கேள்வி இது. பயபுள்ள நம்மளவிட நல்லபேர் வாங்கிடுமோ என்றொரு எண்ணம் சீனியருக்குத் தோன்றி மறையும்.

" இப்போ பண்ற வர்க் ஒழுங்கா பண்ணு. அப்பறம் இதக் கத்துக்கலாம். வந்த உடனே எல்லாம் தெரிஞ்சிக்க முடியாது. போ"

நாம் அமைதியாக எக்செல் நிரப்ப ஆரம்பிப்போம். ஆறுமாதம் போகும். ஒருநாள் சீனியர் கூப்பிடுவான்.

" இந்த வர்க் முடிச்சிடு"

" அண்ணே, இது எனக்குத் தெரியாதுண்ணே"

" நீ வந்து எவ்வளவு நாள் ஆச்சு"

"ஆறு மாசம்"

"ஆறுமாசமா என்ன புடுங்கிட்டு இருந்த? கேட்டுத் தெரிஞ்சிக்க மாட்டியா? "

"ஒரு தடவக் கேட்டேன்"

" ஒரு தடவக் கேட்டா .. ஓ கணக்கு சொல்ற.. சரி நீயே போய் முடி ..தெனாவட்டாப் பேசறியா"

" அண்ணே பிளீஸ்ணே, சொல்லிக் குடுங்க.காலுல கூட விழறேன். டீம் லீட் திட்டுவாருண்ணே"

எங்கே போனது நண்பனே நம் வெட்கம்? உண்மையில் ஒரு ஆறாம் வகுப்பு சிறுவனிடம் நாம் அறியாதது கிடைத்தாலும் கற்றுக்கொள்ளலாம். அவன் உழைப்பின்மூலம் அதை அறிந்துகொண்டவன். அவன் பொறாமைக்குரியவனல்ல. மரியாதைக்குரியவன்.