அக்டோபர் 15, 2016

நெருங்கி அறிதல்

காதல் தோல்வியை எதிர்கொள்ள எளிதான வழி என்னவென்றால் காதலித்த பெண் அல்லது ஆணுடைய முகத்தை வெகு அருகில் வைத்து ஐந்து நிமிடம் உற்றுப்பார்ப்பதுதான். தழும்புகளும், கொப்புளங்களும் என நாம் ஆராதித்த அழகியல் ஒன்றுமில்லாமல் நம் முன்னால் அழியும். தழும்புகளும், கொப்பளங்களும் இல்லையென்றாலும் அதே கதிதான். நெருங்கி அறிதல் அவ்வளவு ஆபத்தானது. இதைப் பற்றிய ஒரு கதை உண்டு. ஒருவன் ஒரு காதலியையும், காதலனையும் நிர்வாணமாக கட்டிவைத்துவிடுவான். இருவரும் நாள் முழுக்க இன்னொருவரின் நிர்வாணத்தைப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். கடைசியில் கட்டிவைத்தவன் விடுவிக்கும்போது இருவரும் துணியைத் தூக்கிக்கொண்டு தனித்தனியே ஓடிவிடுவார்கள். நெருங்கி அறிகிற எதுவொன்றும் சலிப்பு தருவது. இருபது வயது பையனின் காமம் அறுபது வயது தாத்தாவிற்கு சலிப்பு தருவது. தாத்தாவால் காமம் நெருங்கி அறியப்பட்டது. தாத்தா காமத்தில் உழன்று சலித்துப்போனவர். இளைஞன் அப்படியல்ல.

தூரத்தில் இருக்கும் எதுவும் அழகியல் உடையது. அழகான பெண், அழகான ஆண்,அழகிய நட்பு. நெருங்கி அறிகையில் நீ அதப் பண்ணாத, இதப் பண்ணாத என நம்மை அடிமையாக்கும் பெண். அடிமையாக்கும் ஆண். நம் சுயம் அடிபடுகிறது. ஆனால் நமக்கு அவள் வேண்டும்.  சுயம் அடிபடலைத்தாண்டி நமக்கு அவன் வேண்டும். அடிமையாக்குதலைத் தாண்டி விரியும் அன்பல்ல அது. அவளை/அவனை எப்படியாவது அடைந்துகாட்டுவேன் என்கிற அகங்காரம். சுயத்தை திருப்திப்படுத்த வேண்டும். சுற்றியிருக்கும் நண்பர்களிடம் நம் சுயம் ஜெயிக்கவேண்டும். சுயத்திற்கான தீனி அது. திருமணத்திற்குப் பின் அவளையோ, அவனையோ திருப்பி அடிமையாக்கும் போது சுயம் மகிழும். அடிபடும் இன்னொரு சுயம் தாக்குதலுக்கான நேரம் பார்க்கும். சுயங்கள் மோதும். மனங்கள் உடையும். உறவு கசக்கும். இன்னொரு சுயத்தை குற்ற உணர்விற்கு உள்ளாக்க ஒரு உடல் தற்கொலை செய்யும் அல்லது விட்டுப் பிரியும். நம் சுயம் காயம்படும். மீண்டும் அடிமையாக அது விரும்பும். தொடர் நிகழ்வாய் இது நிகழும். அடிமைத்தனம் நமை இறுக்கி அழிக்கும்.

தூரத்தில் அழகிய நட்பு, நெருங்குகையில் என்னோடு மட்டும் பேசு என ஆதிக்கம் செலுத்தும். தன் சிந்தனைகளை நமதாக்கும். பிரிய நினைத்தால் துன்பவியல் நாடகத்தால் நமை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும். " என் ஒரே ஃபிரண்ட் நீதானே" என்று நம் சுயத்தை பரிதாபத்துக்குள்ளாக்கும். தொடர் நிகழ்வாய் இது நிகழும். மீண்டும் ஆதிக்கத்தின் வேர்கள் நம்மேல் பரவும்.

மாட்டாமல் தப்ப வேண்டும். நாம் ஞானி அல்ல. எவனாலும் எவனையும் முழுமையாய் சகிக்க முடியாது. நெருங்கியறிதல் அவ்வளவு ஆபத்து. எவனையும், எதுவொன்றையும் எப்போதும் நெருங்கி அறியாதே. இணைந்திரு, முத்தமிடு ஆனால் சுயத்தோடு தனித்திரு என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன் .இது சுயநலமல்ல. நம்மை இழந்துவிடாமல் காப்பாற்றிக்கொள்ளுதல். இது தவறல்ல. இது ஒரு வாழ்வியல்.