அக்டோபர் 16, 2016

தனிமை- ஒரு தொலைபேசி அழைப்பு

தலைமுறையின் தனிமை பதிவைப் படித்துவிட்டு ஒரு நண்பர் அழைத்திருந்தார். வெளியூரில் படிக்கும்பொழுதோ அல்லது வேலைசெய்துகொண்டிருக்கும்பொழுதோ தினமும் நம்முடைய பெற்றோர் அழைத்தால்கூட நம்மால் பேசமுடிவதில்லையே என்று ஆதங்கப்பட்டார். நான் சென்னையில் வேலைசெய்துகொண்டிருக்கும்பொழுது தினமும் இரவில் அம்மா அலைபேசியில் அழைப்பார். சாப்டியா? என்ன பண்ற? எனக் கேட்பார். எனக்கும் அதற்குமேல் எதுவும் பேசுவதற்கு இருக்காது. உரையாடல் முடிந்துவிடும். தினமும் ஃபோன் எடுத்து இதையே பேச வேண்டுமா என்றுகூடத் தோன்றும். இருபதாண்டுகளுக்கும் மேலாக நானும் அம்மாவும் ஒரே வீட்டில் வாழ்ந்தவர்கள். குறைந்தபட்ச உரையாடல் என்றாலும் அது அவர்களுக்கு இதுபோன்ற பிரிவுகளின்போது மன ஆறுதல் தருபவை. ஆகவே இவற்றை தவிர்க்கமுடியாது என்று நினைக்கிறேன். பிரிவு என்பது ஒருபோதும் உறவுகளை வலுப்படுத்தாது என்பது என் எண்ணம்.  திருமணமான ஒரு மாதத்தில் மனைவியை விட்டுப் பிரிந்து வெளிநாடு சென்றுவிடும் கணவன் என்ன உரையாடலைப் பிறகு மனைவியோடு நடத்துவான் என்று தெரியவில்லை. இந்த அன்பின் வலிமை எனக்கு ஆச்சரியம் தருகிறது. அது எப்போதுமே உண்மையான அன்பாக இருக்குமா என்றுகூட எனக்கு சந்தேகமுண்டு. இப்போது மூன்று,நான்கு மாதங்களாக வீட்டில் இருக்கிறேன். அம்மாவுடன் முன்பைவிட நன்றாக உரையாடுகிறேன். அருகில் இருக்கும்போது சுற்றி இருப்பவர்களைப் பற்றிப் பேச முடிகிறது, டிவி பார்த்துக்கொண்டு ஏதாவது பேச முடிகிறது, பத்திரிக்கை படித்துவிட்டு ஏதாவது பேச முடிகிறது, சொந்தக்காரர்களைப் பற்றிப் பேச முடிகிறது. தொலைபேசியில் பேசும்போது பொதுவான பேசுதளம் இல்லாமையால் அதே உரையாடல் நிகழாமல் போய்விடுகிறது. அம்மா டிவியில் பார்த்த படத்தை நான் பார்க்கவில்லை, நான் படித்த பத்திரிக்கை அம்மா படிக்கவில்லை அப்போது பொதுவான பேசுதளம் இல்லை. என்ன சாப்ட என்பதோடு உரையாடல் முடிகிறது. வெளியூரில் இருக்கும்போது சக அறைநண்பர்களோடு நீண்டநேரம் பேச முடியும். சேர்ந்து பார்த்த சினிமா, சேர்ந்து பார்த்த பெண்/ஆண், கிரிக்கெட் என்று பேசலாம். வீட்டிற்கு வரும்போது அந்த பொதுபேசுதளம் நண்பர்களோடு இல்லை. ஒருவேளை நண்பன் ஒரு பெண்ணைப் பற்றிப் பேசினாலும் நாம் அறியாத பெண் என்றால் என்ன சுவாரசியம் இருக்கும்? நலமாக இருக்கிறாயா என்பதோடு உரையாடல் தொக்கிநின்று அப்பறம், அப்பறம் என முடியும். உண்மையில் நாம் வெறுமையைப் போக்கிக் கொள்ள சூழலுக்கேற்ப நம்மைத் தகவமைத்துக்கொள்கிறோம் எனச் சொல்லலாம். இது ஒரு சுயநலம் என்றுகூடச் சொல்லலாம். நமக்கான தேவை என்று வரும்போது எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தொடர்புகொண்டு சிரித்து சிரித்துப் பேசுவோம் என்பதையும் இதோடு பொருத்திப் பார்க்கலாம். என் நண்பன் வெளிநாடு சென்றபோது மற்றொரு நண்பன் "அவன்கூட கான்டாக்ட்லயே இருக்கணும்டா.பின்னாடி யூஸ் ஆவான்" என்று காதில் சொன்ன ரகசியத்தையும் இதோடு பொருத்திப் பார்க்கலாம்.

எனக்கு ஐந்நூறுக்கு மேல் நண்பர்கள் இருக்கிறார்கள் அத்தனைபேரோடும் தொடர்பில் இருக்கமுடியுமா என்றால் அது சாத்தியமில்லை. அது திட்டமிட்ட புறக்கணிப்பு அல்ல. என்ன பேசுவதென்று தெரியாமையால் உருவாகும் ஒரு இடைவெளி. அது தவறல்ல. ஆனால் அந்த ஐந்நூறு பேரில் எவனாவது ஒருவன் உங்களோடு பேசும்போது எனக்கு இவனைப் பிடிக்காது, நான் பேச விரும்புகிறவன் இவனல்ல, நான் காதலிப்பவள் இவளல்ல  என ஒருவனை/ஒருவளைப் புறக்கணித்து நகர்வது தவறில்லையா? அது இன்னொருவரின் உணர்வை காயப்படுத்துவது இல்லையா? இந்த உரையாடல் நமக்குப் பிடிக்காதென்றாலும் அழைத்தவனுக்கு  அந்த அழைப்பு ஆறுதல் தருவதல்லவா?  தொலைவிலிருக்கும் அம்மாவிற்கு மகனின் குரல் ஆறுதல் தருதல்போல. அது நம்மால் செய்ய இயன்ற சிறு உதவி.

பொதுவாக நம் சூழலே பெரும்பாலும் உரையாடல் இல்லாதது. அம்மாவும், அப்பாவும் குடும்பம் தவிர்த்த பிற விஷயங்களை உரையாடும் குடும்பங்கள் எத்தனை? மிகக்குறைவு இல்லையா? திருமணத்திற்குப் பின் இளம்ஜோடிகள் எவ்வளவு காலம் உரையாடுகிறார்கள்? அழகாக இருப்பதையே  காதலுக்கான காரணியாக நாம் பார்க்கிறோம். ஆனால் மாறுபட்ட தளங்களில் உரையாடுதலை விரும்புபவன் அவனைப்போல உரையாட ஆர்வமுள்ள ஒருவளை மணப்பதே நல்ல வழி. சிவகுமார் இசையமைப்பாளராக நடித்திருக்கும் பாலசந்தரின் சிந்துபைரவி இதுபோன்ற கதையம்சம் உடைய திரைப்படம். நாயகன் இசைக்கலைஞன், மனைவிக்கு இசை ஆர்வமில்லை பின்னாளில் நாயகன் இசைஆர்வமுள்ள சுகாசினியைக் காதலிக்க ஆரம்பிப்பான். உரையாடல் இன்மையால், வெறுமையால் ஏற்படுபவை இவை.

உரையாட விரும்புபவர்கள் பெரும்பாலும் உரையாடலைத் தவறாக ஆரம்பிக்கிறார்கள் என்பது என் பார்வை. ஒரு அதிமேதாவித்தனமான கேள்விகளோடு ஆரம்பிக்கிறார்கள். கேட்டல் மட்டுமே உரையாடல் அல்ல. அது உரையாடலின் ஒரு பகுதி. ஸ்டோரி ஆப் ஐ படித்திருக்கிறாயா என்று ஒருவனைக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்வான். அதோடு உரையாடல் முடிந்துவிடும். ஸ்டோரி ஆப் ஐ என்று ஒரு கதை படித்தேன். நமக்கெல்லாம் பிடிக்கிற எரோட்டிக் ஃபிக்ஷன் என்று சொல்லிப்பாருங்கள். உரையாடல் வேறு பாதையில் போகும். வெறுமை குறையும்.

உண்மையில் இருபத்தி நான்கு மணிநேரமும் உரையாட வேண்டிய தேவை இல்லை என்பேன். வெறுமையைப் போக்க வேறு என்ன செய்யலாம் என்று உங்கள் உள்ளுணர்வுக்குத் தெரியும். அதைப் பின்பற்றலாம். இன்னொருவன் செய்வதையே நானும் செய்யமுடியாது. நண்பர்கள் சிலபேர் ஞாயிற்றுக்கிழமைகூட அலுவலகத்தில் வேலைசெய்துகொண்டு இருப்பார்கள். சிலபேர் நாள் முழுக்கத் தூங்குவார்கள். சிலபேர் படம் தரவிறக்கி நாள் முழுக்கப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். நான் சென்னையில் இருக்கும்போது மாநகரப்பேருந்தில் ஐம்பது ரூபாய் ஒருநாள் பாஸ் வாங்கி ஊர்ஊராய் தனியாக சுற்றியிருக்கிறேன். தினந்தோறும் உழைத்துக்கொண்டிருக்கும் பாமரனுக்கு வெறுமை உண்டா? அவன் உழைப்பதை நிறுத்தினால் அடுத்தநாள் சோறில்லை. உழைப்புதான் அவன் வெறுமையைப் போக்குவது. அவன் வாழ்வே அதுதான். வெறுமை எனும் வார்த்தையே அவனுக்குத் தெரியாது.பேஸ்புக்கும், வாட்ஸ்அப்பும், ஹைக்கும் இருக்கிறவர்களுக்குத்தான் வெறுமை. எப்போதும் அடுத்தவர்களையே நம்பிக்கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லை. நமக்கானவர்கள் உண்மையில் நாம் மட்டுமே. நமக்கு என்ன தேவையென்று நம் உள்ளுணர்விற்குத் தெரியும். அதைக் கேளுங்கள். அதுவே வெறுமையைப் போக்க வழி.