அக்டோபர் 18, 2016

கம்யூனிசம் இன்று

அதிகாரம் மிக்க சிறு மக்கள் திரளின் பெருமகிழ்ச்சிக்காக பெருமக்கள் திரள் தங்களை இழந்து ஆனால் அவ்வப்பொழுது தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்துக்கொண்டு மீண்டும் உழைத்துக்கொண்டிருப்பதாகதானே இங்கே சமூகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக கம்யூனிசத்தை முழுமையாக பரப்பவேண்டும் என்று சொல்லமுடியாது.தாராளமயமாதல், உலகமயமாதல் என முதலாளித்துவத்தின் அகோர வளர்ச்சியினால் உருவாகியிருக்கும் வேலைவாய்ப்புகள் எளிய மனிதர்களிடம் ஏற்படுத்தியிருக்கிற தாக்கத்தை நம்மால் கண்கூடாகக் காண முடிகிறது. அரசாங்கமே அத்தனையும் நிர்வகித்திருந்தால் இன்றைக்கு மென்பொருள், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க அளவிற்கு இந்தியா வந்திருக்குமா என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

முதலாளித்துவத்தை  ஒழிப்பதென்பது முற்றிலும் சாத்தியக்கூறுகளே இல்லாத விஷயம் என்பது மிகத் தெளிவாக நமக்குத் தெரிகிறது. உண்மையில் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் என்பதுகூட அடக்குமுறையை பொறுத்துக்கொள்ளமுடியாத அறிவார்ந்த சிறு மக்கள்திரளிலிருந்து எழுந்து வருவதுதான். பெரும் மக்கள் திரள் எப்பொழுதோ தங்களைப் பணயம் வைத்துவிட்டார்கள். எவ்வளவு நேரம், எவ்வளவு தினம் வேலையென்றாலும் மாதக்கடைசியில் பணம் வருகிறதா, என்றைக்கோ ஒருநாள் ஓய்வு கிடைக்கிறதா அதுவே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். வேலை ரொம்ப கஷ்டமா இருக்கு என்று சொன்னாலும் பணத்தாள்கள் கிடைக்கிறபொழுது அதனால் பகட்டான காரியங்கள் செய்யமுடிகிறபொழுது அவர்கள் தங்களை மீண்டும் ஒப்புக்கொடுத்துவிடுகிறார்கள். அத்தனை பேரும் தொழிலதிபர்கள் ஆக முடியாது என்கிற உண்மையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அவர்களின் திறன் என்பது அடிமைப்பணி செய்வதற்கு மட்டுமே ஏற்றது, அவ்வாறாகத்தான் அவர்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள், அதற்கு எதிரான செயல்பாடுகள் அவர்கள் வாழ்விற்கே உலைவைக்கும் என்பதையும் அவர்கள் அறிவார்கள். அவர்களுக்கு அவ்வப்பொழுது கிடைக்கும் மகிழ்ச்சிகளே போதுமானவை. அவர்களிடம் கம்யூனிசம் பேசுவதென்பதே தேவையற்றது.

உண்மையில் யார்தான் அதிகாரத்தை விரும்பவில்லை? ஒவ்வொருவரும் தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று குடும்பத்தலைவன் விரும்புவதில்லையா? என் தம்பியோ, தங்கையோ நாம் சொல்வதைக் கேட்கவேண்டும் என்று நாம் விரும்புவதில்லையா? நம் காதலன்/ காதலி நாம் சொன்னபடியே நடக்க வேண்டுமென நாம் விரும்புவதில்லையா? இவைகள் அதிகாரத் தளைகளில்லையா? முதலாளித்துவ அடிமைகள் ஒருநாள் முதலாளி ஆகும்போது அதிகாரத்தை ருசிக்க மாட்டார்களா? சுயம் மகிழ்தலுக்காக மனிதன் எதுவும் செய்வான்.

கம்யூனிசக் கூட்டு மனப்பான்மைக்கு எதிராக இன்றைக்கு தனிமனித இருத்தலை மட்டும் முன்வைக்கிற எக்ஸிஸ்டென்ஷிலியக் கோட்பாடுகள் வளர்ந்து வருகின்றன. உறவு நிலைகள் சார்ந்த மதிப்பீடுகள் மிக வேகமாகச் சரிந்து வருகிறது. கூட்டுக்கேளிக்கைகள்கூட தனிமனித வெறுமைபோக்கும் சுயநல முகமூடியை அணிந்துதான் ரசிக்கப்படுகின்றன. முதலாளித்துவத்தை ஏற்காத சிறுவாரியான சுயங்களுத்தான் கம்யூனிசம் தேவை. அவர்களின் சிந்தனைத்தளத்தில் முதலாளித்துவம் என்னால் தாங்க முடியாதது என்கிற சிந்தனை தோன்றும்போது அவர்களின் உள்ளுணர்வு தானாகவே அவர்களை வெளித்தள்ளும். அவர்கள் மாற்றுவழிகளைக் கண்டடைவார்கள். கம்யூனிசத்தை வெகுமக்கள் திரளிற்கான மாற்றாகப் பார்க்கமுடியாது.   கம்யூனிசம்  நிறைவேறாமல்போன இனிமேல் நிறைவேறமுடியாத அழகிய கனவு.  கம்யூனிசக் கோட்பாடுகள்படி அரசே ஒரு முதலாளித்துவம்தான். மனித மோதல்கள் சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு வந்தபொழுதுதான் அரசே தோன்றியதாக லெனின் ஒரு புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஆக இன்றைக்கு அரசாங்கம் அசைக்கமுடியாத முதலாளித்துவ உதாரணம். அது வேண்டாமென்றால் மனித மோதல் வந்துவிடும். என்றைக்கு மனிதனுக்குள் மோதல் இல்லையோ அன்று கம்யூனிசம் வெல்லும்.

ஞானக்கூத்தன் ஒரு கவிதையில் சொல்வதுமாதிரி ' கம்யூனிசம்தான் எனக்கும் மூச்சு. ஆனால் பிறர்மேல் அதனை விடமாட்டேன்' என்று சொல்லத்தோன்றுகிறது. சிலசமயம் நாம் எதைக்கண்டும் கவலைப்படாமல் வாழ்தலை மட்டுமே செய்யும் ஞானிகள் என்றும் பல சமயம் ஒன்றும் செய்ய வக்கில்லாத பயந்தாங்கொள்ளிகள் என்றும் தோன்றுகிறது.