அக்டோபர் 20, 2016

மனம் வெல்தல்

ஒரு நடிகனுக்கும், நடிகைக்கும் விவாகரத்து ஆகிறதென்றால் நமக்கு அவ்வளவு சந்தோஷம். அவர்களை நாம் திரையின் வழியாக மட்டுமே அறிவோம். ஆனாலும் " எனக்குத் தெரியுங்க இது இப்படித்தான் ஆகும்னு. இவனுங்க எல்லாம் சரியில்லைங்க" என்று மிகச்சாதாரணமாக நம்மால் சொல்லிவிடமுடிகிறது. அவர்களின் அந்தரங்கத்தையும், இருவரின் பண்பியல்பையும் கரைத்துக்குடித்தாற்போல் பேச முடிகிறது. யாராவது மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்கள் என்றால் " எல்லாம் பிளாக்மணியாதாங்க இருக்கும், சும்மா எவனாவது குடுப்பானா" என்று சொல்ல முடிகிறது. நடிகர்கள்மேல் நமக்கு எப்பொழுதும் பொறாமை உண்டு. புகழோடு கொட்டிக்கொடுக்கப்படும் பணமும் நமக்கு கிடைக்காததால் வரும் மனப்புழுங்கல்தானே "நடிகைங்க எல்லாம் குடும்பத்துக்கு சரி பட்டு வரமாட்டாங்க" எனும் கூற்று. நம் இயலாமைகள் அடுத்தவனால் இயலும் ஒன்றாகிறபொழுதுதானே "சும்மா கொடுப்பானாக்கும்" என்ற கேள்வி எழுகிறது. நம் சுயத்தை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் ஒரு முயற்சி. அதன்மூலமாக நம் இயலாமையை மறைத்து மற்றொருவனைத் தூற்றி மன ஆறுதல் அடைந்துகொள்கிறோம்.

"ஏனுங்க நம்ம மாமன் வூட்டுப் பையன் வாத்தியாரு ஆகிப்புட்டானுங்களாம்"

"யாரு அவனா? காசு, கீசு குடுத்து சேந்திருப்பான். இல்லைனா அவனுக்கெங்க கெடைக்கப்போகுது"

ஆனால் நாம் எவ்வளவு படித்தாலும், சிந்தித்தாலும் இந்த எண்ணங்கள் முழுவதுமாக மறைந்துவிடும் சாத்தியங்கள் இல்லை என்றே சொல்லலாம். காந்தியின் வழியே என் வழி, இயேசுபோல் ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னம் காட்டுவேன் என்று வீராப்பு பேசினாலும் தீடீரென ஒருவன் மெதுவாகத் தலையில் தட்டி நமக்கு வலித்துவிட்டால் அவனை நான்கு அடி திருப்பி அடிக்காமல் விடுகிறோமா?

" தலையில அடிக்கிற வேல மட்டும் வெச்சுக்காத. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது"

சரி. தலையில் அடித்தால்தானே    இந்தப் பிரச்சனை அகிம்சாவாதியை முதுகில் தட்டுவோம் என்றால் அடுத்தநொடி ஹிம்சாவாதியாக மாறிவிடுதல் நடந்துவிடுகிறது. அப்பொழுது கொள்கையும் கிடையாது, படித்து மனதிலேற்றிய கோட்பாடுகளும் கிடையாது. மாற்றி மாற்றி சண்டை போட்டபின்பு அவசரப்பட்டுவிட்டோமோ என்ற எண்ணம்தான் வருகிறது.

ஞானிகள் என்று சொல்பவர்களைப் பற்றி இந்த இடத்தில்தான் எனக்கு சந்தேகம் வருகிறது. மனமற்றுப்போதலையே செய்துவிட்டவர்கள்தானே அவர்கள். சமீபத்தில் ஓஷோவைப் பற்றிய ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரி படிக்கிற காலத்தில் ஓஷோ மனம் என்கிற ஒன்றே இல்லாமல்போய் ஞானி என்கிற நிலையை அடைந்துவிட்டார். பெரியவர்கள் எல்லாம் அவர் காலில் விழுகிறார்கள். எனக்கு மெய்சிலிர்த்துப்போய்விட்டது. எனக்கும் மனமற்றுப்போய்விடவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. மனமற்றுப்போனால் ஆசையே போய்விடும் என்பது வேறு விஷயம். ஞானியாகி விட்ட ஓஷோ மக்களிடத்தில் உரையாற்ற ஆரம்பிக்கிறார்.

" என் பெற்றோர்களையே நான்தான் தேர்ந்தெடுத்தேன்"

என் மெய்சிலிர்ப்பு அதிகமாகிறது.

"என் பெற்றோர்களுக்கு என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நல்லவேளை என் தம்பி இருந்தான். அவர்களைப் பார்த்துக்கொண்டான்"

இதைச்சொல்வது யார்? மனமற்றுப்போன ,தன் பெற்றோரைத் தானே தேர்ந்தெடுந்த ஓஷோ. ஞானிக்கு எதற்கு குடும்பக்கவலை? அதன்பிறகு சுய கழிவிரக்கத்தை தூவும் படலம் துவங்குகிறது.

" நான் ஒரு பைத்தியக்காரன். நான் சொல்வதை எல்லாம் கேட்காதீர்கள். நீங்களே சிந்தியுங்கள்"

உண்மையில் ஞானிகளெல்லாம் பெரும் அறிவுஜீவிகள். வசீகர முகத்தோடு, பேச்சாற்றலும் ,அறிவும் உடையவர்கள். மனித மனமும், அதன் உணர்வுகளும் அப்படியே அவர்களிடமும் இருக்கிறது. நித்யானந்தாவிடம் நம்மிடம் இருக்கும் அதே காமம் இருக்கிறது. நித்யானந்தாவின் பேச்சைக் கேட்டால், ஓஷோவின் பேச்சைக் கேட்டால், ஜக்கி வாசுதேவ் பேச்சைக் கேட்டால் எனக்கு மன ஆறுதல் கிடைக்கிறது, வாழ்வதற்கான புத்துணர்வு வருகிறதென்றால் அதுவே போதுமானது. நித்யானந்தா யாரோடு படுத்தார்? ஓஷோவின் ஆசிரமத்தில் காமக்களியாட்டம் நடந்ததா?  என்பதெல்லாம் எனக்கு தேவையற்றது. நிம்மதியற்ற வாழ்வியலில் என் மன ஆறுதலுக்கு அவர்கள் தேவை, மற்றபடி அவர்கள் புனிதர்களல்ல நம்மைப்போல் மனிதர்கள் என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டியது.

கல்வி, தனிப்பட்ட வாசிப்பு, சிந்தனையாளர்களுடனான உரையாடல் என எதுவுமே மனிதனின் மிருகத்தன்மையை போக்கிவிடாது. எவ்வளவு பண்பட்டாலும் அது மனதில் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும். கட்டுப்படுத்தலையே செய்ய இயலும். முழு அழிவு என்பது சாத்தியமில்லை. கணநேரத்தில் மறையக்கூடியவை அவை, அப்பொழுது வெளிப்படுகிறவை ஒருவனின் ஆளுமையே அல்ல, ஆண்டாண்டுகாலமாக தொடர்ந்துகொண்டிருக்கும் மிருகத்தனத்தின் எச்சம் என்பதை நாம்  உணர்ந்துகொண்டால் நம் மனித உறவுநிலைகள் இன்னமும் மேம்படும் என்று கருதுகிறேன். அதற்கான தேவைகள் இப்பொழுது கூடிக்கொண்டே போவதாகத்தான் தோன்றுகிறது.