அக்டோபர் 25, 2016

தனித்துணர்தல்

எங்கள் ஊரில் ஒரு சுயம்பு மாரியம்மன் கோவில் இருக்கிறது. வருடந்தோறும் அங்கே மஞ்சள்நீராட்டு விழா ஒன்று நடக்கும். அது எங்கள் ஊரில் அனைவருக்கும் பெருமகிழ்ச்சி தரும் தினம். வேப்பமரத்தின் தடிமனான பாகம் ஒன்றை வெட்டி அம்மனின் கணவனாக உருவகம் செய்து நட்டுவைத்திருப்பார்கள். அதற்கு கம்பம் என்று பெயர். குறிப்பிட்ட சில தினங்களுக்குப் பிறகு அந்த கம்பத்தை நட்ட இடத்திலிருந்து பிடுங்குவார்கள். அந்த கம்பத்தை ஆற்றில் கரைக்கக் கொண்டுசெல்லும்போதுதான் மஞ்சள்நீராட்டுவிழா நடக்கும். டிரம்ஸ் இசைக்கு ஏற்ப ஆடிக்கொண்டே செல்லும் இளைஞர்கள்மீது இளம்பெண்களோ, குழந்தைகளோ மஞ்சள் கலந்த நீரை ஊற்றுவார்கள். அன்றைக்கு அங்கே எல்லாரும் ஒன்றுதான். நானும் ஆடிக்கொண்டிருப்பேன் எங்கள் ஊர் கவுன்சிலரும் கூட்டத்தில் ஆடிக்கொண்டிருப்பார். இந்த விழாவில் எப்படிக் குழுவாக சிறப்பாக ஆடவேண்டும் என்பதற்காக ஒருவாரத்திற்கு முன்பாகவே ஊரிலிருக்கும் இளைஞர்களும், சிறுவர்களும் கூட்டாக கோவிலினுள்ளே பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார்கள். ஆடிக்கொண்டே ஒரு இளம்பெண்ணைப் பார்க்க அவளும் சிரித்துக்கொண்டே நமைப் பார்ப்பாள். காதல்கூட மலரும் வாய்ப்புகளுள்ள இடம் அது. ஒரு விழா என்பது மக்கள் கூடுதலுக்கானது. அது பல படிப்பினைகளை ஒளித்து வைத்திருப்பது. நான் இந்த பெருமக்கள்திரளின் ஒரு சிறுபுள்ளி என உணர்ந்துகொள்கிற இடம் அது. ஆடுதல் என்பது வெறுமனே நம் இஷ்டத்திற்கு ஆடுவதல்ல நம்மோடு ஆடுபவனின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவனுக்கு ஏற்றாற்போல், அவன் நமக்கு ஏற்றாற்போல் ஆடுவது. பல்வேறுபட்ட மனித குணவியல்புகளை அறிவது. ஆனால் இன்றைக்கு இதே விழாவில்போய் ஆடுவேனா என்பது எனக்கு சந்தேகமாகவே உள்ளது. நான் வேறு ஒரு ஆள் இவர்களோடு ஆடுவது என் தகுதிக்குக் குறைவு என்கிற எண்ணம் ஒருபுறம் எழுந்து அகங்காரம் மலையாய் எனை நகரவிடாமல் சூழ்ந்திருக்கிறது.

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு பெண்ணை( குழந்தையை) நேசித்தேன். அவளின் பாவாடையைத் தாண்டித் தெரியும் கால்களுக்காய் அவளை நேசித்தேன். அன்றைக்கு காதலின் தேவை என்னவென்றே எனக்குத் தெரியாது. ஆனால் அதற்குப்பிறகு ஒரு காதலும் அவ்வளவு உண்மையானதாய் இருந்ததில்லை எனத் தோன்றுகிறது. பின்னொருநாள் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவளை சந்தித்தபோது அவள் முகம் எனக்குப் பிடிக்கவேயில்லை.அவளே வந்து காதலைச் சொன்னாலும் இப்போது ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று தெரிந்தது. அவள் என்ன செய்கிறாள் என்று கேட்கவேண்டும்போல் இருந்தது. அவள் செய்வதை நேசிக்கமுடிந்தால் அவளையும் நேசிக்கலாம் என்கிற ஆதாயம் தேடும் கணக்குகள் என்னில் விரிந்தன. அவள் செய்வதும் எனக்கு திருப்தி தரவில்லை. நான் முழுமையாகத் தனித்துணர்ந்தேன்.

தனித்துணர்தலை ஒரு இயல்பான எப்போதும் இருக்கிற விஷயமாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். ஆனால் அதன் வீச்சு நகரமயமாதலாலும், தொழில்வாய்ப்புகளாலும் மிக அதிகமாகிவிட்ட காலமாக இது இருக்கிறது. அத்தனைபேருமே நமக்கு ஒன்றுமில்லாதவர்கள் ஆகிவிட்டார்கள். "அம்மா வேஸ்ட், அப்பாவுக்கு ஒண்ணும் தெரியாது" என்ற சிந்தனைகள் இயல்பாகவே இருபது வயதில் சம்பாதிக்கும் எவனுக்கும்/எவளுக்கும் வந்துவிடுகிறது. உறவுகள் என்பது எதுவுமே அல்லாத பின்நவீனத்துவ காலகட்டம் இது. பெரும்பாலான வீடுகளில் அண்ணனும் தங்கையும், அக்காவும் தம்பியும் யாருமே இயல்பாக பேசிக்கொள்ளமாட்டார்கள். அம்மாவும், அப்பாவும் புனித பிம்பங்களில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதுதான் என்றாலும் தனித்துணர்தல் எதுவொன்றையும் கற்றுக்கொள்ளாமல் நம்மைத் தடுக்கிறபொழுது எழும் பிரச்சனைகள்தான் இன்றைக்கு இளைஞர்களின் சூழல் முழுக்க உறவுநிலைச் சிக்கல்களாய் நிரம்பியிருக்கிறது.

ஆண்-பெண் உறவுநிலைபேணலை இரண்டு இடங்களில் கற்றுக்கொள்ளலாம். குடும்பத்திலிருந்து, குடும்ப உறுப்பினர்களிடமிருந்து, உறவுகளிடமிருந்து அவர்களின் உறவுநிலை தோல்வியிலிருந்து அல்லது வெற்றியிலிருந்து கற்றுக்கொள்ளலாம். ஆனால் இதுதான் இப்போது இல்லையே. மிக இள வயதிலேயே கல்வியின் பொருட்டு பெற்றோரைப் பிரியும் சூழல் வந்துவிடுகிறது. "அப்பா எல்லாம் ஒரு ஆளா?" எனும் தனித்துணர்தல் அப்போதே வந்துவிடுகிறது. அதன்பிறகு கற்பித்தல் பள்ளியிலிருந்து நிகழ வேண்டும். ஆனால் ஆணும் பெண்ணும் அருகருகே அமரக்கூடாத ஒழுக்கவியல் நியதிதான் அங்கே இருக்கிறது. அது கல்லூரியிலும் தொடரும்போது பெண் ஆணுக்கும், ஆண் பெண்ணிற்கும் புலப்படா அதிசயங்களாய் இருந்துகொண்டே இருக்கிறார்கள். வேலை கிடைத்துவிட்டபிறகு "நான்" எனும் தனித்துணர்தல் மீண்டும் ஆரம்பிக்கிறது. ஆண் யாரென்று அறியாத பெண்ணும் , பெண் யாரென்று அறியாத ஆணும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். அது ஒரு அறிந்துகொள்ளும் வேட்கை. அதை அறிந்தபிறகு ஒன்றுமற்றதாய் போய்விடும் காதலை வைத்து என்ன செய்வதென்றே அவர்களுக்குத் தெரியாது. அது வெகு சுலபமாய் தூக்கி எறியப்படுகிறது. உணர்வுகளுக்கு, உறவுகளுக்கு மதிப்பற்ற பின்நவீனத்துவ காலகட்டம். ஒன்றுபோனால் இன்னொன்று. "நான், எனக்கு தேவையானவை தேவைப்படும்போது மட்டும் எனக்கு போதும். All are passing clouds" எனும் வாழ்வியல் அறியா தனித்துணர்தல் எவ்வளவு ஆபத்தானது.  அவர்களுக்கு உறவுநிலைசார் கல்வி கற்பிக்கப்படவேயில்லை எனும்போது அவர்களை எப்படிக் குறைகூற முடியும்?   உறவு நிலை தோல்விகள் அவர்களை மன அழுத்தத்தில் தள்ளுகிறது. எதுவுமே அறியாத பாவிகளாய் ஆசிட் வீசுவதும், கொலை செய்வதும் ஒவ்வொருநாளும் நடக்கிறது. அவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்றே அறியாத பாவிகள். உருவத்திலும் உயரத்திலும் மட்டுமே வளர்ந்தவர்கள் அவர்கள். உள்ளத்தால் அவர்கள் வளர்க்கப்படவேயில்லை. எவனும்/எவளும் சரியில்லை எனும் குரல்கள் சூழலெங்கும் ஒலிக்கிறது. அவர்கள் ஏன் அவ்வாறாக மாறிப்போனார்கள் என்கிற கேள்வி ஏன் எழாமலே போகிறது? எதையுமே கற்பிக்காமல் இளைஞர்களை முட்டாளாக்கிய பாவம் பெற்றோரை, கல்வித் தந்தைகளை சும்மா விடாது. உங்கள் குழந்தைகளின் மரணங்களே உங்களுக்குப் பாடமாகும். ஆனால் அதைப் படித்தும் பெரிய பயனொன்றுமில்லை எனும்போது கண்ணீர் விடுவதைத் தவிர வேறுவழிகளொன்றும் உங்களுக்கு இருக்காது.