அக்டோபர் 28, 2016

லா.ச.ரா வின் அபிதா

காலம் எத்தனை எத்தனைக் காதல்களை நமக்காக ஒளித்துவைத்திருக்கிறது? தமிழ்சினிமாவின் வாழ்நாள் முழுக்க ஒற்றைக்காதல் என்கிற பொய் பிம்பத்தைத் தாண்டி வந்தவர்கள் அடையும் உண்மை இது. ஆனால் எல்லோருக்குமே நிறையக் காதல்கள் தேவையென்று பொத்தாம்பொதுவாக சொல்லிவிடமுடியாது. ஆனால் பிடிப்பின்மை என்பது ஏதேனும் ஒரு கணத்தில் வந்துவிடுகிறது. அது ஒரு சலித்துப்போகும் நிலை. முதல்முதலாக ஒரு பெண்/ஆண் நம்மைக் காதலிப்பதாகச் சொல்லும்போது ஏற்படும் உணர்வென்பது விவரிக்கவே இயலாதது. உச்சகட்ட மகிழ்ச்சி. காமத்தின் உச்சம்போல. ஆனால் ஒரு கட்டத்தில் இனிப்பு திகட்டிவிடுதல்போல காதலும் திகட்டிவிடுகிறது. இனி பேசுவதற்கு, செய்வதற்கு, அறிவதற்கு ஒன்றுமற்றதாய் வெறுமனே நிற்கிறது காதல். அப்பொழுது மனத்தின் தேவை இன்னொரு காதல். நாற்பதுகளுக்கு பிறகு கள்ளக்காதலாய் விரிகிறது மனதின் அடங்காத ஆசை. அத்தனையும் சலித்து புதிதாய் ஒன்றை அறிந்து, நம்மை முழுமையாய்ப் புதுப்பிக்க ஏங்குகிறது மனம். நாவலின் நாயகனுக்கும் இதே பிரச்சனைதான் வருகிறது. ஆனால் அவன் பெருகும் காதலின்றி சந்தர்ப்பங்களினால் ஒரு பெண்ணை மணந்தவன். நம் சமகால பெண்களும், ஆண்களும் காதலில் கசிந்துருகிவிட்டு வாழ்வின் யதார்த்தங்கள் பிடிபடும் தருணத்தில் அமெரிக்க மாப்பிளையை மணந்துகொள்ளுதல்போல நாயகனும் தன் முதலாளியின் பெண்ணை மணந்துகொள்கிறான்.

" ராஜாவை மணந்துகொள்ளும் பிச்சைக்காரி ராணி ஆகலாம். ஆனால் ராணியை மணந்துகொள்ளும் பிச்சைக்காரன் என்றும் ஏழைதான்.
                                                - லா.ச.ரா"

ஆணை குடும்பத்தை நிர்வகிக்கும் தலைவனாய்க் கொண்டிருக்கும் சமூகசூழலில் பணக்காரியின் கணவனாகும் ஏழையாய், தாழ்வு மனப்பான்மையின் வேர்கள் நாயகனை சூழ்ந்து இறுக்குகிறது. குழந்தைகள் இல்லையென்ற கவலையும் அதோடு சேர்ந்துகொள்கிறது. பெருஞ்சலிப்பாய், வெறுமையாய் மாறும் வாழ்க்கையை நினைவுகளால் இட்டு நிரப்ப தன் பிறந்த ஊர்தேடி மனைவியோடு பயணமாகிறான் நாயகன்.

இது கவிதையா, நாவலா எனும் சந்தேகம் அடிக்கடி வருகிறது. உவமைக் கவிதைகள் கதையெங்கும் வருகிறது.

" நானொரு பைத்யம்
  நானொரு பச்சோந்தி
  நானொரு குழந்தை
  எனக்கு உடனே சிரிப்பு
  உடனே அழுகை
  காரணங்கேட்டால் நானறியேன்
  நானொரு வெட்கங்கெட்டவன்"

கடந்தகாலத்தின் காதல் நினைவுகளில் மூழ்கிப்போகும் நாயகன் மீண்டும் தனது பழைய காதலியைப் பார்த்துவிடத் துடிக்கிறான். ஆனால் அவன் காதலி அங்கில்லை. காலம் அவளைக் கொண்டுசென்று விட்டது. ஆனால் அவளின் அதே சாயலில் காதலியின் மகள்.

"அபிதா"

" அ- சிமிழ் போன்று வாயின் லேசான குமிழ்வில்
பி- உதடுகளின் சந்திப்பில்
தா- நாக்கின் தெறிப்பில்"

இது ஒரு பச்சோந்தித்தனமா, பைத்தியக்காரத்தனமா?  மனைவிக்கு நரைத்தபிறகு இளம்பெண்ணின் மீது வரும் காதல். அதிலும் முன்னாள் காதலியின் மகள்மீது வரும் காதல். தெரியவில்லை. உறுதியாக ஆம் என்று சொல்ல முடியவில்லை.

ஆனால் நிச்சயம் இது குழந்தைத்தனம்தான். எல்லா மனிதர்களும் இந்தச் சுழற்சிக்கு உட்பட்டவர்களென்று தோன்றுகிறது. குழந்தையாய்ப் பிறந்து, இளைஞனாய் வளர்ந்து, முதியவனாய் மடியும் தருணத்தில் மீண்டும் குழந்தையாக மாறும் மனம். தான் செய்வது சரியா, தவறா குழந்தைக்கு தெரியாது. இது வளர்ந்த குழந்தை. முதியவர்களைப் பார்த்தால் தெரியும். அப்போது வாழ்க்கையே சலித்துவிட்ட ஒன்று. நின்ற இடத்திலே சேலை தூக்கி நின்றுகொண்டே சிறுநீர் போவார்கள் சில பெண்கள். வெளிப்படையாய் தெரியும் மார்பை மறைக்காமலேயே உரையாடுவார்கள் சில பெண்கள். அங்கே வெட்கக்கேடே இல்லை. இதுவெல்லாம் ஒன்றுமில்லை என உணர்ந்துவிட்ட தருணம். குழந்தைகள்போல் ஆடையின்றி ஓடித்திரிவார்கள் சில முதியவர்கள். அது ஒரு திரும்புதல். காலத்தை,  மரணத்தை ஏமாற்றும் ஒரு செயல். அந்த குழந்தையாகிவிட்ட உணர்வு, அந்த கணத்தில் வாழும் உணர்வு அது நாயகனுக்கு காதலாய் விரிகிறது.

இதை ஒருபோதும் தவறென்று சொல்ல முடியவில்லை. அறுபது வயது கல்லூரி செக்யூரிட்டியை மணந்துகொள்ளும் இருபது வயதுப் பெண் நமக்கு சொல்வதென்ன? முதிர்ச்சியின்மையா? யாருடைய முதிர்ச்சியின்மை? இருபதின் முதிர்ச்சியின்மையா, அறுபதின் முதிர்ச்சியின்மையா? அது ஒரு கணத்தில் நிகழ்ந்த நிகழ்வு அதற்கான காரண காரியங்களை ஒருபோதும் ஆய முடியாது.

இறந்த காதலியின் அதே சாயலுள்ள மகள். நாயகன் அவளைக் காதலியின் மகளாகக் கொள்ளவில்லை,  நாயகியாகவேதான் கொள்கிறான். ஒரு கட்டத்தில் மனைவிக்கு நாயகனின் விஷயங்கள் (விஷமங்கள்) தெரிந்துவிட்டாற்போல் தெரிகிறது. உடல்சூடு தணிக்க எண்ணெய்க்குளியல் செய்ய வைக்கிறாள். எண்ணெயில் தணியும் சூடா இது? பெரும்பாலும் பெண்களுக்கு ஆணின் அந்தரங்க ஆசைகள் தெரிந்துதான் இருக்கிறது. முழுமையான அன்புச்சார்தல் கணவன்மீதுள்ள பெண்கள் அதை ஒரு பொருட்டாகவும் கொள்வதில்லை. உடலைத் தாண்டி உண்மைநிலையை அடைந்துவிட்ட காதல் அதுதான். அதே வாய்ப்பை பெண்களுக்கும் அளிக்கவேண்டியதையும் இங்கே சிந்தித்துப்பார்க்கவேண்டி இருக்கிறது.

நான் இப்போதெல்லாம் காதலை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் சமீபத்தில் காதல் பித்து பிடித்திருக்கும் ஒரு நண்பனோடு உரையாடும்போது " எத்தனைப்பேரைக் காதலித்திருந்தாலும் , காதல் என்று சொல்லும்போது உனக்கு ஒரே ஒரு முகம் நினைவிற்கு வருகிறதில்லையா? அவளைத்தான் காதலிக்கிறாய்" என்றான். ஆம். உண்மைதான். எனக்கொரு முகம் நினைவிற்கு வருகிறது. என்னைப் புறக்கணித்துப்போய்விட்ட ஒரு முகம். அவளோடு பழகி, அவளை அறிந்து அவளிடம் எனக்கும், என்னிடம் அவளுக்கும் அறிய ஒன்றுமில்லை என்றானபிறகு அந்தப் பிடிப்பு அழிந்து வேறொரு கணத்தில் வேறொரு முகம் தோன்றுமே அப்பொழுது அது காதல் அல்லாமல் போய்விடுமா? காதல் என்பது அந்தக் கணத்திற்கும் , சூழலுக்கும் தொடர்பாய் தோன்றுமொரு உணர்வுதானே. வேறோரு கணத்தில் வேறொருவர்மேல் அவ்வுணர்வு தோன்றும்போது அதுவும் காதல்தானே.

கடைசியாய் அபிதா கோவில் படிக்கட்டில் கிடக்கிறாள். தொடும் தூரத்தில் அவள். நாயகன் அவளைத் தொடவில்லை.  சில கோவில்களில் பெண்தெய்வம் மார்பில் துணியின்றி இருக்கும். எவனும் அதைக் காமத்தோடு தொடமாட்டான், மாறாக வணங்குவான். அபிதா ஒரு தெய்வம்.