அக்டோபர் 25, 2016

வாழும் கலை

பாமர மக்கள் ஒருநாளைக்கு பனிரெண்டு மணிநேரத்திற்கு மேல் உழைக்கிறார்கள். வேலை செய்வதும் அதனால் கிடைக்கும் பணத்தை வைத்து சாப்பிடுவதும் மறுநாள் திரும்ப எழுந்து உழைப்பதும்,  சாப்பிடுவதும் பின்னொருநாள் இறந்துவிடுவதுமே அவர்களது வாழ்க்கை. என் நண்பர்களும் ஒருநாளைக்கு பனிரெண்டு மணிநேரம் கம்யூட்டர்முன் உட்கார்ந்து மூளையைக் கசக்குகிறார்கள். பிறகு சாப்பிட்டுவிட்டு, தூங்கிவிட்டு உழைக்க ஆரம்பிக்கிறார்கள்.

" என்னய மாதிரி என் புள்ள கஷ்டப்படக்கூடாது" என பாமரன் சொல்கிறான்.

" வேல ரொம்ப கஷ்டமா இருக்கு. பட் எப்படியாவது செட்டில் ஆகணும் " எனப் படித்தவன் சொல்கிறான். அது என்ன செட்டில் என்றே புரியவில்லை. செட்டில், செட்டில் என்று சொட்டையாகிப்போன பின்பு அறுபது வயதில் ரிட்டையர்ட் ஆகிவிட்டு அடுத்தவீட்டு ஆன்டியைப் பார்ப்பதா? ஆன்டி ஓகே சொன்னாலும் ஒன்றும் செய்ய முடியாதே?

ஆகப் பாமரனும் மகிழ்ச்சியாக வாழவில்லை, படித்தவனும் மகிழ்ச்சியாக இல்லை என்றால் அப்பறம் என்ன மயிரைப் புடுங்குவதற்கா படிக்கவேண்டும்?

நான் மென்பொருள் நிறுவனத்தில் வேலைசெய்துகொண்டிருந்த சமயத்தில் மதியம் சாப்பிடக்கூட நேரமில்லாமல் உழைப்பு, உழைப்பு என்று பேசிக்கொண்டிருப்பார்கள். அதிலும் ஒரு பெண் HR வந்து " பெரிய ஆளுகள எல்லாம் பாருங்க, சாப்பிட பத்து நிமிஷந்தான் ஸ்பென்ட் பண்ணுவாங்க" என்பார். " அடிக் கேணக்கிறுக்கி, வேலை செய்யறதே சோறு திங்கத்தாண்டி. வயிறு இல்லைனா எவனாவது வேலைக்கு வருவானா?" என நினைத்துக்கொள்வேன். ஆனால் இதை வெளியில் சொன்னால் சொல்கிறவனைக் கிறுக்கன் என்பார்கள்.

" HR நம்ம நல்லதுக்குதான சொல்றாங்க"

பணத்தைக் காட்டி எப்படியெல்லாம் நம்மை முட்டாளாக்குகிறார்கள்? இதிலிருந்து தப்பிக்கவே முடியாது என நாம் அறிந்துகொள்கிறபிறகு அதற்கு நம்மை ஒப்புக்கொடுப்பதைத் தவிர ஒன்றும் செய்யமுடியாதுதான். எப்போதும் நம்மைத் தாழ்வான நிலையிலேயே கல்வியும், அலுவலகமும் வைக்கிறபொழுது வெளியுலகிலாவது கொஞ்சம் சீன் போட்டுக்கொள்ளலாம் என்பதைத் தவறாகப் பார்க்கமுடியவில்லை. அது ஒரு மன ஆறுதல். ஆக அதையே ஒரு மறைப்பாக நம்மைச் சுற்றி வைத்துக்கொண்டு நாம் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடித்துக்கொண்டே இருக்கலாம். நாம்தான் இப்படி ஆகிப்போய்விட்டோம். நாளை நம் குழந்தைகளுக்கு என்ன கல்வியைத் தரப்போகிறோம் என்கிற கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டுமா இல்லை அவர்களுக்கும் இதே கதிதானா? ஆனால் இன்னொரு இருபது  வருடத்தில் படித்த அப்பா தன் பையனிடம் "என்ன மாதிரி நீ கஷ்டப்படக்கூடாதுடா. என்ன விடப் பெரிய படிப்பா படிக்கணும் " என்று சொல்லும்போது " என்ஜினியரவிட பெரிய படிப்பு எதுப்பா"  என்று அவன் கேட்பான். அப்போது தமிழகத்தை சுற்றிக்கட்டப்பட்டிருக்கும் இருநூற்றம்பைது மெடிக்கல் காலேஜ்களையும் முன்னூறு சார்ட்டட் அக்கௌண்டட் கல்வி நிறுவனங்களையும் அவற்றிற்கான கோச்சிங் சென்டர்களையும் கைகாட்டும் கொடூரக்காட்சி நடந்துவிடக்கூடாது என்பதே என் பிரார்த்தனை.