அக்டோபர் 31, 2016

தமிழ் சினிமா விமர்சனங்கள்

புதிய திரைப்படங்கள் வெளியாகும் அன்றோ அல்லது அதற்கு அடுத்தநாளோ விமர்சனங்கள் எழுதுவதை ஏதோ கடமைபோல் சிலபேர் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு நல்ல கருத்தியலைக் கொண்டுள்ள திரைப்படத்தை மற்றவர்களும் பார்ப்பது சிறப்பானது என்று கருதி எழுதப்படும் விமர்சனங்களும், பார்வைகளும் மிக மிக முக்கியமானவை. அது ஒரு சமூக அக்கறையுள்ள செயல்பாடு. ஆனால் இங்கே மொண்ணைக் கமர்ஷியல் படங்களுக்கான விமர்சனங்கள்தான் தினந்தோறும் வந்துகொண்டிருக்கிறது. தங்கள் கைக்காசைப் போட்டு படம் எடுத்துவிட்டதுபோல் யாரோ ஒருவரின் படத்தை Promote செய்துகொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே சினிமா பைத்தியம் பிடித்து, சினிமாவை மட்டுமே தங்கள் வாழ்வியலாகக் கொண்டிருக்கும் சமூகத்தை, அறிவார்ந்த தளத்தில் என்றைக்குமே சிந்திக்கவிடாமல் முடக்குகிற ஒரு பணியை இடைவிடாமல் செய்துகொண்டிருக்கிறார்கள். அரசியலைத் தொடர்ந்து ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் சினிமா மாயையை இளைஞர்களிடமிருந்து போக்க சிறு முயற்சியையாவது எடுக்கவேண்டிய காலத்தில் அவர்களை முட்டாளாக்கும் பணியை முன்நின்று செய்துவிட்டு இளைஞர்கள் சரியில்லை என்கிற வாதத்தை வைக்கிறவர்களாக இவர்களே இருக்கிறார்கள். சாத்தான் வேதம் ஓதுவது என்பது இதுதான். சினிமா விமர்சனங்கள் சூழலில் கவனிக்கப்படுவது அறிந்து, தன்னைச் சுற்றியும் முதிராத கூட்டம் கூடுவது அறிந்து, மிகுந்த சுயநலத்தோடு, புகழுக்காக செயல்படும் இவர்கள் ஏதோ இதை சமூகத்திற்கு தொண்டாற்றுவதுபோல் நினைத்துக்கொள்வதோடு தங்களைப் பெரிய சினிமா நிபுணர்கள்போல் முன்வைக்கிறார்கள். மக்களை முட்டாளாக்கும் சினிமாக்காரர்களின் மறைமுக கைக்கூலிகளான இவர்களைப் புறக்கணிப்பதுபற்றி நாம் தொடர்ந்து இளைய சமூகத்திடம், நம் நண்பர்களிடம், குழந்தைகளிடம், உறவுகளிடம் பேச வேண்டியிருக்கிறது.  இல்லையேல் மொண்ணைத்தனத்தை சூழலெங்கும் பரப்பிவிடுவார்கள் இந்த சுயநலவாதிகள். இதன் விளைவுகளைத் தாங்கப் போவது இவர்களை நம்பிய கூட்டம் மட்டுமல்ல , சமூகத்தின் அங்கமென்ற நிலையில் இதை எதிர்த்தவர்களும் பாதிப்படைவார்கள் என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தவகையில் ஒட்டுமொத்த சமூகத்தீங்குகள் இவர்கள்.