அக்டோபர் 05, 2016

காமம் எனும் சாத்தான்

ஒரு பெண் அவளது உடற்பகுதிகளின் அளவுகள் தெரிகிறாற்போல் உடை அணிந்து வருகிறாள் எனக்கொள்வோம். அதைப் பார்க்கிற எந்த ஆணுக்கும் இயல்பாகவே காம உணர்வுதான் தோன்றும். ஆண்கள் தொடை தெரிகிற உடைகள் அணிகிறபொழுது பெண்ணிற்கும் அவ்வாறுதான் தோன்றும். ஆனால் ஆண்டாண்டுகாலமாக உணர்வுகளை மறைத்து வைத்தலே பெண்ணின் ஒழுக்கவியல் விதியாகக் கொள்ளப்படுவதால் அது வெளிவருவதில்லை. ஆணுக்கு அவ்வாறான ஒழுக்கவியல் தடைகள் இல்லாததால் காமம் உடனடியாக வெளிப்பட்டு பெண்ணை எவ்வாறேனும் தனதாக்குதல் என்பது நோக்கி நகர்கிறது. பெண்களின் தைரியக்குறைவும், தன்மானம் பற்றிய சிந்தனையும், தொடர்ந்து திணிக்கப்படும் ஒழுக்கவியலும்தான் ஆண் மீது ஒரு பெண் பாலியல் வன்முறையை நிகழ்த்தாதற்கான முக்கியக் காரணம். மற்றபடி அது அவர்களின் நற்குணத்தால் அல்ல. ஒரு ஆண்,  ஒரு பெண்ணின் மீது பாலியல் வன்முறையைச் செலுத்தினால்கூட அங்கே அவனது ஒழுக்கம் முன்னிலைப்படுத்தப்படுவது இல்லை மாறாக அவன் இன்னொரு உயிரின் மீது காட்டிய வன்முறைதான் பிரதானப்படுத்தப்படுகிறது. ஆனால் பெண் ஒரு ஆணைக் கற்பழித்தால் பெண்ணின் ஒழுக்கம்தான் முதலில் கேள்விக்குள்ளாகும். ஆக உடையின்மூலமும் காமம் தூண்டப்படுகிறது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

இதற்கு எதிர்வினையாக குழந்தைகள் மீது செலுத்தப்படும் பாலியல் வன்முறை பற்றிய கேள்வி எழலாம். கடுமையான பாலியல் வறட்சிதான் இப்படியான மிக மோசமான செயல்பாடுகளுக்கு காரணமாகிறது. எந்த எதிர்ப்புமின்றி பாலியல் தேவையை நிறைவேற்றிக்கொள்ள இவ்வாறாகத் தங்களை முன்னெடுக்கிறார்கள். குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது ஒரு பெண்ணை உட்படுத்துவதைவிட எளிது என்பதும் ஒரு காரணம்.

எந்த வடிவமானாலும் பாலியல்சார் வன்முறைகள் தவறு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஏன் அவ்வாறு நிகழ்ந்தது? எப்படிக் குறைப்பது என்பதுதான் இயல்பாக நம்மிடையே எழ வேண்டிய குரல். ஆனால் தொடர்ந்து இவ்வாறான தாக்குதல்கள் நிகழும்பொழுதெல்லாம் தூக்கில் போடு என்ற குரல் ஒலிக்கிறதே தவிர எது அவனை இவ்வாறான நிலை நோக்கித் தள்ளியது என்பதை சிந்திப்பதே இல்லை.

இளவயதில் திருமணம் செய்துகொண்ட தலைமுறைகளில் இவ்வாறான கற்பழிப்புகள் இந்த அளவில் இருந்ததா என்பதை ஆராயவேண்டி இருக்கிறது. பூர்த்தி செய்யப்படாத பாலியல் தேவையின் விளைவுகள் ஆபத்தானவை. அதை எப்படி எதிர்கொள்வது என்பதை சிந்திக்கவேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியால் திருமணம் செய்வதே முப்பதுகளுக்குப் பிறகாகும் சமூகத்தில், திருமணத்திற்கான தகுதிகள் தினந்தோறும் கடினமாக்கப்பட்டு கொண்டிருக்கும் சமூகத்தில் பாலியல் தேவையை பூர்த்தி செய்வது பற்றிய விவாதங்கள் எழுவது மிக அவசியம். எல்லாவற்றிற்கும் மேற்குலக நாடுகளை மேற்கோள் காட்டும் நாம் இதற்கும் அவர்களின் வழிகளை முன்னிலைப்படுத்தி சிந்திக்க வேண்டும். இவை எதுவும் செய்யாமல் கடுமையான சட்டங்கள் வைத்து ஒன்றும் செய்ய முடியாது. மனிதனின் மனம் மிருகமாகும்போது அது சட்டங்களை மட்டுமல்ல எதையும் நினைவில் வைத்துக்கொள்ளாது