நவம்பர் 02, 2016

கடவுள் எனும் முதலாளி

பள்ளியில் படித்த சமயங்களில் நான் மிகுந்த கடவுள்பக்தி உடையவன். தினமும் மாலையில் வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி வைத்துவிட்டு பக்திப்பாடல்கள் பாடிக்கொண்டிருப்பேன். ஒருநாள் சிவனுக்கான 108 பாசுரங்களை படித்துக்கொண்டே இருந்துவிட்டு தாமதமாக பள்ளிக்கு சென்று PT வாத்தியாரிடம் அடிவாங்கியிருக்கிறேன். ஆனால் கடவுள்பக்தி மட்டும் குறையவேயில்லை. கந்தர்சஷ்டி கவசத்திலுள்ள " ஒருநாள் முப்பத்தாறு உருக்கொண்டு ஓதியே சபித்து உகந்து நீறணிய அஷ்டத்திக்குள்ளோர் அடங்கலும் வசமாய், திசை மன்னர் எண்மர் சேர்ந்திங்கருளுவர், மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர், நவகோள் எல்லாம் நன்மை புரிந்திடும். நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்" எனும் வரிகளை நம்பி கந்தர்சஷ்டி கவசத்தை முப்பத்தாறுமுறை ஒரேநாளில் படிக்க நினைத்து முடியாமல் அழுதிருக்கிறேன்.

ஆனால் பனிரெண்டாம் வகுப்பின் துவக்கத்தில், அறிதலின் புதிய கதவுகள் திறக்க,  புதிய சிந்தனைகள் பிறக்க ஆரம்பித்தன. அப்பொழுது கோர தெய்வங்களின் முகங்களை மேலே அச்சிட்டுவிட்டு,  கீழே இதேபோல் நோட்டிஸ் அடித்து வெளியிடவேண்டும், படித்துவிட்டு அவ்வாறு வெளியிடவில்லை எனில் ரத்தம்கக்கி சாவோம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் காகிதத்தாள் எங்கள் கைகளுக்கும் கிடைத்தது. இதை வேறு படித்துவிட்டோமே நோட்டிஸ் போடாவிட்டால் ரத்தம் கக்கி சாவோமா என பயம் வந்தது. உடனிருந்த என் நண்பனொருவன் அந்தத் தாளை சுக்குநூறாக கிழித்தெறிந்துவிட்டுப் போய்விட்டான். அவனை தினந்தோறும் ஆச்சரியத்தோடு கவனித்தேன். கடைசிவரை அவன் ரத்தம் கக்கி சாகவே இல்லை.

நாத்திகத்தின் ஆரம்ப வேர்கள் என்னில் முளைவிட ஆரம்பித்த காலம் அதுதான். கடவுளின் இருத்தல் குறித்த சந்தேகங்களோடு கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தேன். சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கடவுளை மிக அருகில் காணலாம் என்பது எனக்கு எரிச்சல் ஊட்டியது. ஏன் கையும், காலும் இல்லாத மனிதர்களும், உள்ளக் குறைபாடுள்ள மனிதர்களும் பிறக்கிறார்கள் எனும் கேள்வி என்னில் எழும்போதெல்லாம் " ஊனமுற்றவர்கள் பாவிகள்" என்று மனிதர்கள் பாவிகளாக்கப்பட்டு கடவுள் தப்பித்துக்கொண்டபொழுது கடவுளின் இருத்தல் பற்றிய சந்தேகங்கள் அதிகரித்தன.

ஆனால் தொழுதலை எப்போதும் நான் நல்ல மனப்பயிற்சி என்று சொல்வேன். தொழுதல் என்பது நம் சுயத்தை நாம் இழக்கும் அற்புத நொடிகள். பிரபஞ்சத்தின் மிகச்சிறு புள்ளிகள் நாமென்பதறிந்து கடவுளுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பது.அந்தக் கடவுள் எதுவானாலும். மனித வாழ்வின் தாங்கொணாதுயரத்திலிருந்து சில நொடிகளுக்கு விட்டு விலக, ஆறுதல் அடைய ஒரு பிடிப்பு. மனதளவில் அவ்வளவு வலிமை இல்லாத எவருக்குமே தொழுதல் தேவை.  ஒருவகையில் தொழுதல் என்பது நம் பொறுப்புகளை இன்னொருவனுக்கு கொடுத்துவிட்டு வாதையிலிருந்து தப்பிக்கொள்ளும் ஒரு வழி.

மனிதனின் வலிகளுக்கான தீர்வாக எப்போதும் முன்வைக்கப்படுவது கடவுளின் பாதகமலங்களில் சரணாகதி அடைவது. அதை வீட்டிலேயே செய்துவிடலாமே. கோவில்களில்தான் கடவுள் குடியிருப்பதான தோற்றத்தை ஏற்படுத்துவதன்மூலம் கோவிலுக்கு வெளியில் இருக்கும் கடைக்காரர்கள் ஏமாற்றி சம்பாதிக்கிறார்கள், பூசாரி தட்டில் விழும் காசில் சம்பாதிக்கிறார், சிறப்பு தரிசனத்தில் சம்பாதிக்கிறார்கள், அர்ச்சனை சீட்டில் சம்பாதிக்கிறார்கள். ஒரு வெள்ளைக்காகிதத்தில் நம் பெயரையும், நட்சத்திரத்தையும் எழுதிவந்தால் கோவில் நிர்வாகம் ஒத்துக்கொள்கிறதா? நிர்வாகித்திடமுள்ள காகிதத்தை பத்து ரூபாய் கொடுத்து வாங்கி அதில் எழுதினால் மட்டுமே கடவுளால் படிக்க முடியுமா?

என் வலிகளுக்கான தீர்வு கடவுள் என்றால் என் வலிகளுக்கான காரணம் யார் என்று எவனாவது கேட்டுவிடுவானென்று அதற்கும் ஒருகாரணம் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். உன் வலிகளுக்கு நீ இப்பிறவியிலோ அல்லது முற்பிறவியிலோ செய்த பாவங்கள்தான் காரணம். பாவங்களுக்கு பிராயச்சித்தமாய் பூசாரிக்கு பத்து ரூபாய், கடவுளுக்கு நூறோ, ஆயிரமோ. கடவுளின் உண்டியல் நிரம்பி வழிகிறது. பணக்காரக் கடவுள். பூசாரி வீட்டு கொழுக், மொழுக் குழந்தைகள். பணக்கார பூசாரி. பணக்கார அறங்காவலர். பணக்கார அமைச்சர். பணக்கார முதலமைச்சர். நான் என்றும் பாவியாய் " கடவுளே என்னைக் காப்பாற்று" என்று கேவி அழுது என்னை இழந்து சரணாகதி அடைகிறேன். அதிகாரத்தின் முகங்கள்   சிரித்துக்கொண்டே இருக்கிறது. நம் அத்தனைத் துன்பத்திற்கும் காரணம் இந்த ஆட்சியும், அதிகாரிகளும் என்பது ஒருபோதும் தெரியாது. அது கற்பிக்கவேபடாது. கற்பிக்கப்பட்டால் முதலாளிகள் எப்படி வாழ்வதாம்? எவனோ வாழ்வதற்காய் பாவிகளாக்கப்பட்டவர்கள் நாம். அப்படி நம்மை ஆக்கியவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாத பாவிகள் அல்ல. அத்தனையும் அறிந்தவர்கள். அவர்களை மன்னிக்கக்கூடாது. அவர்களை தண்டிக்க ஒருவராலே முடியும்.நம்மால். நாம் கடவுள்.