நவம்பர் 04, 2016

தோற்றப்பிழை

தனது தோற்றம் குறித்தான பிரக்ஞை இல்லாதவர் எவரேனும் உண்டா? அறுபது வயதான முதிய பெண்கள்கூட தங்களை அழகுபடுத்திக்கொள்வதற்கு அவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். அழகுபடுத்திக்கொள்ளுதல், செயல்களைச் செய்வதற்கான மன உறுதியை மேம்படுத்துவதாகச் சொல்கிறார்கள். அதில் உண்மையில்லாமல் இல்லை. ஆண்களைக் கவர்தல் என்கிற ஒழுக்கம் சார்ந்து மறைக்கப்பட்ட உண்மையையும் அதற்கு இன்னொரு காரணமாகக் கொள்ளலாம்.ஆனால் வாழ்வின் ஒரு கட்டத்திற்குமேல் தோற்றம் என்பது நம் கட்டுக்குள் இருப்பதல்ல. தோற்றம் என்கிற புறத்தை விட அகத்தின் வலிமையை அதிகமாக்கிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அப்பொழுதுதான் நம் தோற்றம் பற்றிய உணர்விலிருந்து வெளிவந்து செயலாற்ற முடியும்.

தோற்றம் பற்றி நம் சூழல் கொண்டுள்ள எண்ணங்கள் எப்பொழுதும் அபத்தமானவையாகவே இருக்கின்றன. " வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்"  என்பதைக்கூட நம்பும்நிலைக்கு நாம் தள்ளப்படலாம். ஒரு புரட்சிகரமான விஷயத்தை எழுதுகிறவன் ஆறடியுடன் ஆஜானுபாகுவாகத்தான் இருக்கமுடியுமென்று நம்புகிறோம். அவ்வாறில்லாமல் போகும்போது உண்மையிலேயே நீங்கள்தானா? என்று சந்தேகத்தோடோ அல்லது வியப்போடோ கேட்கிறோம். தன்னைக் காதலித்த பெண்களைப் பற்றி ஒருவன் எழுதினால் அவனை அழகின் உச்சமாகக் கொள்கிறோம் ஆனால் உண்மையில் அவன் அழகின்றி இருப்பானேயானால் அவன் சொன்னது பொய் என்று முடிவுசெய்துக்கொள்கிறோம். ஏன் அவனை அவனையொத்த அழகுள்ள பெண்கள் காதலித்திருக்கலாம்தானே? அதை அவன் எழுதியிருக்கலாமே?

தோற்றம் குறித்தான தாழ்வெண்ணங்கள் உடையவர்கள் தங்களை மிகவும் பலசாலிகளாக முன்நிறுத்தப் பார்ப்பார்கள் அல்லது தங்களை மிகவும் பரிதாபமானவராக முன்நிறுத்த முயல்வார்கள். உடல் ஊனமுற்றவர்கள் இந்தப் பரிதாப உணர்வை வைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். தாங்கள் எதில் தோல்வி அடைந்தாலும் உடல் சார்ந்த குறைபாடை முன்வைத்து அனுதாபம் தேட முயல்வார்கள். இதற்கு மாறாக சிலபேர் மிகுந்த கோபமுடையவர்கள்போல் தங்களை கட்டமைப்பார்கள். ஒரு அழகு குறைந்த பெண் பேராசிரியை அழகான ஆணும், பெண்ணும் பேசிக்கொண்டால் அவர்களைக் கடுமையாகக் கண்டிப்பார். ஒரு குள்ளமான பேராசிரியர் யாரிடமும் பேசாமல் தன்னை மிகவும் கண்டிப்பான ஒருவராகக் காட்டிக்கொள்வார். வரலாற்றை எடுத்தாலும் தங்கள் தோற்றம் குறித்தான உணர்வுகள்தான் நிறையப்பேரை சர்வாதிகாரத்தன்மை நோக்கி சென்றுசேர்ந்திருப்பதைப் பார்க்கலாம்.

தனிப்பட்ட முறையிலேயே நான் இதை உணர்ந்திருக்கிறேன். நான் உயரம் கொஞ்சம் குறைவு என்பதால் ஆறடி உயரமுள்ள நண்பர்கள் சிலநேரம் என்னோடு பழகுவதில் உளச்சிக்கலை உணர்ந்திருக்கிறார்கள். அவ்வாறான நட்பை ஒரு Odd friendshipஆக அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். நம்மைவிட நம்மோடு இருப்பவனுக்கு ஏன் இந்த உளச்சிக்கல் வரவேண்டும்? என்னுடைய உறவினர்கள் வீட்டிற்குப் போனால் தம்பிகள் என்னைவிட வளர்ந்திருக்கிறார்கள். தம்பிகளின் அம்மாவும், அப்பாவும் தம்பிகளைவிட சிறுபையனாக என்னைக் கருதுவார்கள். நான் ஒரு பெரிய இவன் என்று எனக்குத் தோன்றினால் இந்த வீடுகளுக்குப் போய்விடுவேன். சுயத்தை அழித்து கையில் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். நல்ல மனப்பயிற்சியாக இருக்கும். இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனையில்லை. உயரத்தைக் காரணம்காட்டி என்னைக் காதலிக்கமாட்டேன் என்று சொன்ன பெண்கள் இரண்டு பேர். ஆனால் அவர்களின் நேர்மையான பதில் எனக்குப் பிடித்திருந்தது. அந்தமாதிரியான வெளிப்படைத்தன்மையைத்தான் நான் எப்போதும் எதிர்பார்க்கிறேன். திராவிடர் கழகத்தினர் ஒரு பெண் தன்னைவிட உயரமான ஆணைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்று சொல்வதே ஆணாதிக்கம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எனவே திராவிடர் கழகத்திலிருந்து ஒரு பெண்ணை அடுத்து காதலிக்கலாமென்று இருக்கிறேன்.

ஒருவரின் தோற்றத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் என்பதை நாம் எப்போதுமே செய்வதில்லை. ஒவ்வொன்றிற்கும் வரையறைகள் வைத்து இவ்வாறாக இருக்க வேண்டுமென தவறாக முடிவுசெய்கிறோம். ஒரு கல்லூரியில் அழுக்கான உடை அணிந்து வந்தால் ஏழை. நல்ல உடை அணிந்தால் பணக்காரன். ஆசிரியர் சொல்வதைக்கேட்டு இடைவிடாது படித்து செட்டில் ஆகணும்டா என்று வாழ்க்கையைத் தொலைத்தால் ஏழை. ஆசிரியரைக் கலாய்த்து, வகுப்பில் ஒரு பெண்ணைக் காதலித்தால் பணக்காரன். இந்த வரையறைகளைக் காப்பாற்றத்தான் எத்தனை நடிப்பு?

பல நாடுகளில் naturist clubகள் உண்டு. அங்கே குழுவாக நிர்வாணமாக இருப்பார்கள். நிர்வாணமாக உணவருந்துதல், குளித்தல், விளையாடுதல் போன்றவற்றைச் செய்வார்கள். இன்னொரு ஆணுடலை, பெண்ணுடலை நேரடியாகப் பார்த்து அது எவ்வாறானது என்பதை உணர்வார்கள். பலவித மனித தோற்றங்களை அறிந்துகொள்ளும் செயல்பாடு இது. இந்த அளவிற்கு நாம் செல்லவேண்டிய தேவை இல்லையென்று சொன்னாலும் ஒரு பெண்ணின்/ஆணின் நிர்வாணத்தை முழு வெளிச்சத்தில் எதிர்கொள்ளும் திராணியுடையவர்கள் எத்தனைப்பேர்?  கோவில் சிற்பங்களில், கவிதையில் என கலை வடிவங்களில் காமம் கொண்டாடப்பட்ட மண் இது. ஆனால் ஒருவரின் ஆடையற்ற தோற்றத்தை நம்மால் அணுகமுடியாது. ஆடையுள்ள தோற்றத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

உடல்சார்ந்த பகடிகளில் மனிதனுக்கு எப்போதும் பேராவல் உண்டு. ஆனால் கேலிச் செய்யப்படுபவர் அதிலிருந்து கடந்து வருதலே ஒரே தீர்வு. எவ்வாறான உருவ அமைப்பும் கேலி செய்யப்படும் என்பதை உணர்ந்துகொள்ளுதலே இதைக் கடந்துவர வழி. குள்ளன், நெட்டையன், குண்டன், ஒல்லி, கருப்பன், சிவப்பன் இதைத் தவிர மனிதன் வேறு என்னதான் ஆக முடியும் ? ஆக எல்லா மனிதர்களும் இந்த உருவ அமைப்புகளில் ஒன்றாகத்தான் இருக்க முடியும். நம்மை ஒருவன் பகடி செய்ய அதில் கோபமுற்று இன்னொருவனை நாம் பகடிசெய்ய என சுயதிருப்தி அடைதலும் இதில் இருக்கிறது. இது எப்போதும் இங்கே இருந்து வருவதுதான். ஆனால் அதனூடாகவே தோற்றத்தை உள்ளபடி ஏற்றல் என்பதற்கும் நாம் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாய் 'வளர்த்துக்' கொள்ளும் தேவை இருக்கிறது.