நவம்பர் 12, 2016

அதிகாரம்

" நான் சொல்றதத்தான் எல்லாரும் கேட்கணும் " என்று வீராப்பாக பேசும் அப்பாவாக இருந்தாலும் சரி " நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேட்கமாட்டேன்" என்று தெனாவட்டாக சொல்லும் மகனாக இருந்தாலும் சரி அத்தனைபேரும் அதிகார வர்க்கத்தின் பேச்சைக் கேட்டுத்தான் ஆகவேண்டும். அரசும், அதிகாரிகளும் நினைத்தால் எதையும் செய்ய முடியும். நாளையிலிருந்து 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தால் எல்லா வேலையையும் விட்டுவிட்டு கால்கடுக்க ஏடிஎம் வாசலில் நிற்கவேண்டும். நாளை முதல் 144 தடை உத்தரவு,  வெளியே வராதே என்றால் மூடிக்கொண்டு வீட்டில் இருக்கவேண்டும். மக்களாட்சியில் ஓட்டுப்போடுவதைத் தவிர எந்த முடிவை மக்கள் எடுக்கிறார்கள்? கோடிக்கணக்கான ரூபாயை எந்தத் தொழிலதிபராவது கையில் பணமாக வைத்திருப்பார்களா?

நம்மை இவ்வளவு சிறியவர்களாக, ஒன்றுமற்றவர்களாக மாற்றும் அரசாங்கங்கள் ஏன் வந்தது? ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சகித்துக்கொள்ள முடியாமையால் வந்தது. அரசாங்கங்கள் இல்லாத காலகட்டத்தில் கொலையும், கொள்ளையும், கற்பழிப்பும், இன மோதலும் பெருகியதால் அரசாங்கத்தின் தேவை இருந்தது. இன்றைக்கும் அதே தன்மையோடுதான் இருக்கிறோம்.அரசின் தேவை மிகவும் அதிகமாகிவிட்டது. இது நம் பாவங்களுக்கான தண்டனை.நம் மிருகத்தனத்திற்கான தண்டனை.  இதை அனுபவித்துதான் ஆகவேண்டும்.