நவம்பர் 13, 2016

பெஞ்சின் கதை

"டேய் எவண்டா பெஞ்சுல கிறுக்கனது? ஒழுங்கா எவன்னு சொல்லிருங்க. இல்லைனா இந்த பெஞ்சுல ஒட்காந்திருந்த எல்லாரும் அடி வாங்கணும்" ரமேஷ் சாரின் கையிலிருந்த பிரம்பின் மறுமுனை காற்றோடு நடனமாடிக்கொண்டிருந்தது. நான் அடியின் வலியைத் தாங்குவதற்கான முன்தயாரிப்புகளை யோசித்துக்கொண்டிருந்தேன். ரமேஷ் சாரின் ஒல்லியான உருவத்தை இன்றைக்கு நினைத்துப்பார்க்கையில் அவரே பிரம்புமாதிரிதான் இருந்தார் என்று தோன்றுகிறது. வீட்டில் வாட்டசாட்டமான மனைவியிடம் அடிவாங்கிவிட்டு பள்ளியில் அவர் எங்களை அடித்து ஆறுதல் அடைந்துகொண்டிருப்பதாகவும் ஒரு பேச்சு பள்ளியெங்கும் பரவியிருந்தது.வலியவனை வணங்கிவிட்டு எளியவனை அடித்துத் துவைக்கும் அதிகாரத்தின் கரங்கள் அவர்வரை நீண்டிருந்தது. ஆனால் அவ்வவ்பொழுது காவல்துறையின் செயல்பாடுகளை ஏசி சமூகப்புரட்சியாளராகத் தன்னை காட்டிக்கொள்ள அவர் தவறியதில்லை.  "லஞ்சம் கேட்கறானுங்க லஞ்சம். அவன் வச்சிருக்கிற பிரம்பாலயே அவன சாத்தணும். காலையிலேயே கடுப்பேத்தறானுங்க. சரி அத விடுங்க. யாரெல்லாம் வீட்டுப்பாடம் செய்யல. வழக்கம்போல பத்து பேரா? டேய் அந்த பிரம்ப எடுடா"

ரமேஷ் சாருக்கு எங்களை தனித்தனியாக அடித்து அடிக்கடி கைவலி வந்துவிடுவதால் அத்தனைபேரையும் ஒன்றாக நிற்கவைத்து அடிக்க வசதியாக பெரிய பிரம்பொன்றையும் வாங்கிக்கொண்டார். பிரம்பை அவர் வீட்டிற்கு எடுத்துச்செல்வதில்லை. அதன் பின்னுள்ள குறியீடு அனைவரும் அறிந்ததே. "இந்த வெண்ண நம்மள என்னடா அடிக்கிறது" என்று வாசு ஒருநாள் பிரம்பைத் தூக்கி எங்கேயோ ஒளித்துவைத்தான். இயற்கையிலே குண்டிக்கு கிடைத்த நேர்கோட்டிற்கு பரிசாய் கிடைமட்டத்தில் ஒரு சிவப்புக்கோடும் அந்த இன்பத்தில் கொஞ்சம் சிறுநீரும் வாசுவிற்கு வெளியேறியபின்பு பிரம்பு காணாமல்போனதேயில்லை. "டேய் வாசு , யாருடா இத வரைஞ்சது? " வாசுவின் கைகள் நடுக்கத்தோடு பெஞ்சின் மூலையில் அவனையொத்து நடுங்கிக்கொண்டிருந்த என்னை அடையாளம்காட்டின. அனிச்சையாய் நீண்ட என் கை பிரம்பை முத்தமிட்டு வெட்கத்தில் சிவந்துகொண்டிருந்தது. நான் வரைந்த சிரிக்கும் மனித உருவம் உணர்வின்றி என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. "கவர்மெண்ட் ஸ்கூல் பையன் மாதிரி பெஞ்சில கிறுக்கிட்டு இருக்கறியா?" என்று கேட்டு மீண்டும் அடித்தார் ரமேஷ் சார். ரமேஷ் சார் உண்மையில் நாஸ்ட்ரடாம்ஸாகவோ அல்லது சிக்மண்ட் பிராய்டாகவோ அல்லது இருவரின் கலவையாகவோ உருவாகியிருந்திருக்க வேண்டியவரென்று இன்று தோன்றுகிறது. அவர் நிகழத் தவறிய அற்புதமாக என் மனக்கண்ணில் இன்று தோன்றுகிறார். ஆம், இங்கே சேருவதற்கு முன் நான் அரசுப் பள்ளியில்தான் படித்துக்கொண்டிருந்தேன்.ஆனால் அங்கு பெஞ்ச் என்று எதுவும் இருந்திருக்கவில்லை. தரையில்தான் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் பள்ளிக்குச் செல்லும்போது  நண்பர்களெல்லாம் கூடிநின்று வாசலில் நின்றிருந்த ஒரு லாரியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். 
"என்னடா பண்றீங்க"
"டேய் இனிமே நாம கீழ உட்கார வேண்டாம். நம்ம ஸ்கூலுக்கு நாலு பெஞ்சும் டெஸ்கும் வந்திருக்கு"
"நாலுதாண்டா இருக்கு. நமக்கு கிடைக்குமா?"
"நாமதாண்டா இந்த ஸ்கூல்ல சீனியரு. நமக்குதான் கிடைக்கும்"
டேய் நகருங்கடா என்று சொல்லியவாறு கட்டுமஸ்தான  ஒரு மத்தியவயது உடம்பு உள்ளே நின்றுகொண்டிருந்த மற்றொரு உடலின் உதவியோடு பெஞ்சை இறக்க ஆரம்பித்தது. முதல் பீரியடுக்கு மணி அடிக்க எல்லோரும் வகுப்பை நோக்கி ஓட ஆரம்பித்தோம்.

பீடியின் துர்நாற்றம்வீச குள்ளமான உருவமொன்று வகுப்பில் நுழைந்தது. டேய் ஐயா வந்துட்டாரு என்றொருவன் எச்சரிக்கைமணி அடிக்க அனைவரும் அமைதியானோம். நாங்கள் வெறும்தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருக்க ஒரு அரியாசனத்தில் உட்காரும் மன்னனைப்போல் செருக்கோடு மரச்சேரில்  உட்கார்ந்தார் தமிழ்ஐயா. முதல் வரிசையில் இருந்த பையனை எழுப்பி அன்று நடத்தவிருக்கும் திருக்குறளைப் படிக்கச் சொன்னார். 
"கதம்பார்த்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி 
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து"

"ஒட்காருடா. அதாவது வள்ளுவரு என்ன சொல்லறாருனா. கோபத்த அடக்கோணும். கட்டுப்படுத்தோணும். ஒழுக்கமா இருக்கோணும். நல்ல விஷயமெல்லாம் படிக்கோணும். அப்படி நிறைய விஷயம் தெரிஞ்சும் நீ அடக்கமா இருந்தியன்னா நீ வாழ்க்கைல....டேய் அங்க என்னடா பேச்சு, படவா எந்திரிடா, சொல்லிட்டிருக்கும்போது என்ன பேச்சு மயிரு, என்னடா பின்னாடிப் பார்வை, உன்னத்தாண்டா எந்திரி"
ஐயாவின் கை என்னை சுட்டியது. 
"ஐயா, நம்ம ஸ்கூலுக்கு பெஞ்ச் வந்திருக்கு. அது நம்ம கிளாஸ்க்குதான் கிடைக்கும்னு இவன் சொல்றான்யா" பக்கத்தில் உட்கார்ந்து இருப்பவனை கைகாட்டினேன்.
" டேய் நான் யாரு, தமிழய்யா மட்டுமா? என்னக் கேட்காம வேற வகுப்புக்கு ஒங்க தலைமை ஆசிரியர் அந்த பெஞ்சைக் குடுத்துப்புடுவாரோ, படிக்கிற பசங்க எல்லாரும் ஒண்ணா குழுமியிருக்கிற எடம்டா இந்த எட்டு ஏ கிளாஸ். வேற யாருக்குடா குடுக்க முடியும்? படிக்காத நொண்ணைக் கிளாசுங்க இருக்கே பி, சினு அதுகளுக்கா? டேய் அடுத்த தலைமை ஆசிரியர் யாருடா?"

"நீங்கதாங்கய்யா" என்றேன்.

"தெரியுதுல்ல. இப்போ கீழ உட்காரு. நாளைக்கு வந்து பெஞ்சில உட்காரு. என்ன நான் சொல்றது"

"சரிங்கய்யா"

ஐயா மீதமுள்ள திருக்குறள்களை விளக்க ஆரம்பித்தார். பெஞ்சில் உட்கார்ந்து காலாட்டிக்கொண்டே பாடம் கவனிப்பது எவ்வளவு சுகமாய் இருக்கும். ஒவ்வொரு சமயம், அசையாமல் கவனி என்றெல்லாம் அராஜகம் செய்யும் ஐயாக்களும், அம்மாக்களும் வரும்போது கால்களில் ரத்தம் கட்டிக்கொண்டு காலெல்லாம் வலிக்குமே.இனி அப்படியெல்லாம் நடக்காது.இனி சாப்பாட்டுப் பாத்திரத்தை ஒளித்துவைத்து மாட்டிக்கொள்ளாமல் திங்கலாம். யாருமில்லா சமயத்தில் தூக்கம் வந்தால் நன்றாக படுத்துத் தூங்கலாம். சினிமா பாட்டை பாடிக்கொண்டே பெஞ்சில் தாளம் தட்டலாம் என்றெல்லாம் தோன்றி மகிழ்ச்சி பொங்க அனிச்சையாய் உதடு சிரித்தது.

பள்ளி முடிந்தபிறகு தலைமை ஆசிரியரின் அறைக்கு அருகிலுள்ள அறையில் போடப்பட்டிருந்த பெஞ்சையும், டெஸ்க்கையும் ஒரு அதிசயத்தைப் பார்ப்பதுபோல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அன்றிரவு தூக்கமே வரவில்லை. பெஞ்சில் நான் மூலையில் உட்காரலாமா அல்லது நடுவில் உட்காரலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். யாருக்கும் எளிதில் தட்டுப்படாத மூலையொன்றில் அமர்ந்துகொண்டு, எல்லாரையும் கிண்டலடித்துகொண்டு, சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று முடிவு செய்தேன். நள்ளிரவில் தூக்கம் அழைத்து கனவில் பெஞ்சைக் காட்டியது. பெஞ்ச் ஒரு மனிதனைப்போல் நின்றுகொண்டிருந்தது. அதற்கு கண்கள் இருந்தது. உதடு இருந்தது. மூக்கு இல்லை. பல் இருந்தது.மீதிப்பாகங்கள் எல்லாம் மரப்பட்டை நிறத்தில் இருந்தது. தலையென்று சொல்லத்தக்க இடத்திற்கு ஒட்டினாற்போல் கை இருந்தது. அதேபோல் கீழே முடிவில் காலுமிருந்தது. நானும் பெஞ்சும் ஓடிப்பிடித்து விளையாடினோம். பெஞ்சால் ஓடவே முடியவில்லை. எனக்கு சிரிப்பு வந்தது. நானும் பெஞ்சும் ஒளிந்து விளையாடினோம். நான் முதலில் ஒளிந்தேன். பெஞ்ச் கண்டுபிடித்தது. பெஞ்ச் ஒளிந்துகொண்டது. வெகுநேரம் தேடியும் பெஞ்சைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கும்மிருட்டாய் இருந்தது. எங்கே இருக்கிறாய் பெஞ்சே? எனக்கு அழுகை வந்தது.

"காலங்காத்தால கனவு கண்டு அழறான் பாரு. எந்திரிச்சு ஸ்கூலுக்குப் போ"

கண்ணீர் வழிவதன் ஊடாய்க் கண் திறக்க அம்மா நின்றுகொண்டிருந்தார். உன்னை ஸ்கூலுக்கு வந்து கண்டுபிடிக்கிறேன் பெஞ்சே என்று சபதம் எடுத்துக்கொண்டேன். ஆனால் எட்டு ஏவில் என்னால் பெஞ்சைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. என் கண்ணீருக்கு மகிழ்வாய் இருந்தது. அதன் பயணத்தை மறுபடியும் துவங்கியது. ஐயா வந்தவுடன் முதல் ஆளாய் எழுந்துநின்றேன்.

"உட்காருடா, ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ. உங்களுக்கெல்லாம் இப்பப் புரியாது. புரியற காலம் வரும்போது ஒங்க தலைமை அய்யன்கிட்டப்போயி இதக் கேளுங்கோ. பத்திரகிரினு ஒரு சாமியார் சொன்னது. கால் காட்டி, கை காட்டி, கண்கள் முகங்காட்டி, மால் காட்டும் மங்கையரை மறந்திருப்பது எக்காலம்? தேறாத சிந்தைதனை இனி தேற்றுவதும் எக்காலம்?இதாண்டா நடந்துச்சு. இன்னைக்கு என்ன பாக்கணும் நாலடியாரா? "

காலை இடைவேளையில் வந்துபார்த்தபோது தலைமை ஆசிரியரின் அருகிலுள்ள அறை எட்டு சி ஆக மாறிவிட்டிருந்தது. என்னை தலையில் குட்டி சுகம் காணும் பிரபு பெஞ்சில் உட்கார்ந்து என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். என்னடா வேணும் என்று எட்டு சியின் சுந்தரி டீச்சர் கேட்டதும் ஓடிவந்துவிட்டேன்.

"எந்திரிய்யா" என்று யாரோ கத்திக்கொண்டே குச்சியொன்றால் தோளில் தட்ட சிந்தனையில் மூழ்கி மூடியிருந்த கண்களை மெதுவாகத் திறந்தேன்.கண் முன்னால் ஒரு பிரம்பின் முனை காற்றிலாடிக்கொண்டிருந்தது. "பார்க் டைம் முடிஞ்சுது. கிளம்பு"  என்று முறுக்கிய மீசையோடு இருந்த காவலாளி கடினமான குரலில் சொல்ல படுத்துக்கொண்டிருந்த பெஞ்சை விட்டு எழுந்தேன். நாளை ஓஎம்ஆர் சாலையில் ஒரு நேர்முகத்தேர்வு இருப்பதாய் வாசு குறுந்தகவல் அனுப்பியிருந்தான்.மதியம் சாப்பிடாததால் பசி வயிற்றைப் புரட்ட ஆரம்பித்திருந்தது. டீ குடிக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன். பெஞ்சைத் திரும்பிப் பார்த்தேன். மேலிருந்த மரத்திலிருந்து இரண்டு பூக்கள் பெஞ்சின் மேல் விழுந்தது. அதை யாரும் தடுக்கவும் இல்லை ஏனென்று கேட்கவும் இல்லை.

(அக்டோபர் 2016 சிலேட் சிற்றிதழில் வெளிவந்த சிறுகதை)