நவம்பர் 12, 2016

முருகன் விநாயகன் ஒரு உரையாடல்

கௌதம சித்தார்த்தனின் முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல் குறித்து எனக்கும் ரியாசுக்கும் நடந்த உரையாடலைத் தொகுத்துள்ளேன்.

முகமது ரியாஸ்:

இல்லை அகில் ஒட்டுமொத்தமாக அப்படி சொல்லி விட முடியாது. உதாரணத்திற்கு கோட்சேக்கு சிலை வைத்து வணங்க ஆரம்பித்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நூறு ஆண்டுகளுப் பின் வரும் தலைமுறை கோட்சேயை ஒரு முன்னுதாரணமாக கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது காந்தியின் மேல் நம்பிக்கையுள்ள ஒருவர் அதற்கான சான்றுகளோடு காந்தியை முன்னிருத்தும் போது, அவரிடம், காந்தி நல்லவராக இருந்தால் என்ன, கெட்டவராக இருந்தால் என்ன. எங்களுக்கு தேவை வணங்க ஒரு சிலை. அது கோட்சேவாக இருந்துவிட்டு போகட்டுமே என்று கூறுவது சரியாகது தானே? அதே போல் இதுவும். இதில் விநாயகர் பெரியவரா அல்லது முருகன் பெரியவரா என்பதை விட்டுட்டு மாற்றுத் தரப்பின் வரலாற்றை தேடும் முயற்சியாகக் கொள்ளலாம். அது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருப்பினும் கூட. அது எப்போதும் அப்படித் தானே இருந்து வருகிறது. வரலாற்றை நோக்கிய பயணம் என்பது அவ்வரலாற்றை முன்னிருத்தி ஒரு தரப்பு உயர்ந்தது என்றும் மற்றொன்று தாழ்ந்தது என்ற நிருப்பிதற்காக அல்ல. மாறாக அந்த இரு தரப்பின் வராற்றினை அறிவதன் மூலமே அவர்களுக்கிடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

அகில் குமார்:
வரலாற்றை அவரவர் விருப்பப்படி எழுதிக்கொள்ளும் புனைவாகத்தான் பார்க்கிறேன். அதன்மூலம் இனக்குழுப் பிரிவும் பிரச்சனைகளும் நடக்கிறதே ஒழிய எதுவும் தீர்ந்ததாகத் தெரியவில்லை.

முகமது ரியாஸ்:

வரலாற்றில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதைத் தாண்டி வரலாறு என்பது முக்கியம். ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டார்கள் என்பது வரலாறு. காந்தி இந்தியாவற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார் என்பது வரலாறு. இதில் ஆங்கிலேயர்கள் எவ்வாறு ஆண்டார்கள், காந்தி எப்படியெல்லாம் போராடி சுதந்திரம் பெற்றுத் தந்தார் என்பதில் வேண்டுமானல் மாறுபாடுகள் இருக்கலாம். வரலாறு என்பதே புனைவு என்று சொல்வதற்கு கூட நீங்கள் அதன் வரலாற்றை அறிந்திருக்க வேண்டும். நீங்கள் பண்ணிரண்டு வருடம் பள்ளிப் படிப்பை முடித்தற்கு ஆதரம் அதற்கு வழங்கப்படும் சான்றிதழ் தானே. அதில் அசல், போலி என்பது வேறு. நீங்கள் பண்ணிரண்டு எப்படியெல்லாம் படித்தீர்கள் என்பதில் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கலாமே ஒழிய நீங்கள் படித்தீர்கள் என்பது உண்மை தானே. அதைத் தான் வரலாறு என்று சொல்கிறேன்.

காந்தியப் பற்றி ஒருவர் பேசுகிறார் என்றார், அது அவருக்கு காந்தியப்பற்றி சொல்லப்பட்டவை தானே ஒழிய அவர் காந்தியுடன் பழகி நேரிடையாக அறிந்து கொண்டது அல்ல.  அதில் எவ்வளவு உண்மை எவ்வளவு பொய் என்பதைத் தாண்டி காந்தி என்ற பெயரை அவர் அறிவதே வரலாறு மூலம் தான். வரலாறு என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்திருக்க வேண்டும் என்பது அல்ல. கடந்து போகிற ஒவ்வொரு நொடியும் வரலாறு தான்.

அகில் குமார்:

அதெல்லாம் ஓகேதான். வரலாறுகள் இனக்குழு சார்ந்த வெற்றுப்பெருமைகளாக இருக்கிறதே ஒழிய வேறெதுவும் செய்வதில்லை என்பதையே சொல்கிறேன். கோட்சேவுக்கும், காந்திக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. முருகனும், விநாயகனும் அப்படியல்ல . இருவரும் இந்து மதத்தின் நன்மைபயக்கும் கடவுள்கள்தான். நாளை வரலாற்றில் கோட்சே கடவுளாக்கிக் கும்பிடப்படலாம், காந்தி தூற்றப்படலாம். அவர்கள் வாழ்ந்துவிட்டுப் போய்விட்ட மனிதர்கள். அவர்களின் பெயரால் இங்கே செய்யப்படும் அரசியல் என்பது சிலபேரின் சுயநலனுக்கானது. காந்தி தூற்றப்பட்டாலும் காந்தியக் கொள்கைகளின் வழி சமகாலம் எவ்வகையான மாறுதலுக்கு உட்பட்டது என்பதே முக்கியம். பின்கால வரலாற்றில் காந்தியின் கொள்கைகள் கோட்சேவுடையதாய் மாற்றி எழுதப்படலாம். அப்போது கோட்சே ஒரு குழுவால் கொண்டாடப்படலாம். கொண்டாடப்படட்டுமே. ஒரு கொள்கையைச் சொன்னவன் வரலாற்றில் தேவையற்றவன்தான் அவன் பிம்பமும் தேவையற்றது. அந்தக் கருத்தை வைத்து சமகாலத்தில் எவ்வாறான வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதே முக்கியமானது. அப்பொழுது இறந்துபோன பிம்பங்கள் எதுவானாலும் அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை.

ரியாஸ்:

அண்ணன், தம்பி இருவருக்குள் சொத்து தகராறு வருகிறது என்றால் அப்போது ஒவ்வொருவரும் தாங்கள் அந்த சொத்திற்கு எவ்வளவு உழைத்திருக்கிறோம் என்று பட்டியலிட்டு தங்களுக்கான உரிமையை கோருவார்கள்.  அவர்கள் பட்டியலிடுபனவற்றையே நான் வராலறு என்கிறேன். அதில் ஒருவர் பொய் கூறும் போது மற்றொருவர் மறுப்பார். இதையே இதற்கும் பொருத்திப்பார்த்துக் கொள்ளலாம். காந்தி ஒன்றுமே செய்யவில்லை, செய்ததெல்லாம் கோட்சே தான் என்று ஒரு தரப்பு கூறும் போது, மற்றொரு தரப்பு ஓ அப்படியா, சரி இருந்துட்டு போட்டும் என்று அமைதிகாக்ககாது. அது தன் தரப்பு நியாயத்தை கூறி தனக்கான உரிமையை கோரும்.

இறந்து போன தந்தையைப் பற்றி மற்றவர்கள் அவதூறு கூறும் போது இறந்து போனவரின் மகனோ, மகளோ அவர்கள் தரப்பை பதிவு செய்வார்கள். இறந்து போன பிம்மங்கள் எங்களுக்கு முக்கியமில்லை என்று விட்டுவிட மாட்டார்கள்.  என்ன உணர்வு அப்படி அவர்களை மறுப்பு கூறச் செய்கிறதோ, அதே உணர்வு தான் தன் கடவுளைப் பற்றியோ, தன் மதத்தைப் பற்றியே,தன் தலைவரைப் பற்றியோ, தன் நாட்டைப் பற்றி பிறர் மாறாக கூறும் அதனை மறுக்கும் படி செய்கிறது. அப்படி அவர்கள் தன் தரப்பை முன்வைத்து ஆவது என்ன என்று கேட்கக் கூடாது.
இது ஒரு தனி நபருக்கு என்றில்லை ஒரு நாட்டிற்கும் பொருந்தக்கூடியது தான்.