நவம்பர் 11, 2016

மாற்றம்

சமூகம் கொஞ்சமாவது அறிவார்ந்த தளத்தை நோக்கிச் செல்லவேண்டுமானால் அதற்கு புத்தகம் படிப்பதுதான் வழி என்பது பெரும்பான்மையான இலக்கியவாதிகளின் கருத்தாக இருக்கிறது.ஆனால் இலக்கியத்தை, புத்தக வாசிப்பை இந்தக் காலகட்டத்தில் சமூக மாற்றத்திற்கான கருவியாகப் பார்க்கமுடியாது.இதற்கான முக்கியக்காரணங்களாக மூன்று விஷயங்களைப் பட்டியலிடலாம்.

1. இன்று கல்லூரியை முடித்துவரும் பெரும்பாலானவர்களுக்கு தமிழ் சரளமாகப் படிக்கத் தெரியாது. எனவே இலக்கியவாதிகள் எழுதும் ஆயிரம் பக்கக் கதைகளை அவர்கள் எழுத்துக்கூட்டிப் படிப்பதற்குள் பல வருடங்கள் ஆகிவிடும். தமிழே தெரியாதவனுக்கு ஆங்கிலம் மட்டும் என்ன அமோகமாகவா தெரியும்? ஆக அதிலும் வழி இல்லை.

2. எப்படியோ இந்தக் கல்விமுறையில் தப்பித்தவறி ஒருவன் மொழியை வாசிக்கத் தெரிந்துகொண்டான் என வைப்போம். புத்தக வாசிப்பு என்பது முயற்சி தேவைப்படும் ஒன்று. கவனக்குறைவின்றி, மனதைப் புத்தகத்தில் செலுத்தி வாசிக்க வேண்டும். பெரும்பான்மை சமூகம் இதைச் செய்யாது. வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்தாலும் சாப்பிடாத அளவிற்கு சோம்பேறிகள். 

3. இலக்கியம் மாற்றம் ஏற்படுத்தும் என்று உறுதியாக சொல்ல முடியாது. காரணம் இலக்கியப் படைப்பு அறநூல் அல்ல. அது நேரடியாக போதனை, பிரச்சாரம் செய்யக்கூடாது. நேரா சொன்னாலே புரிஞ்சிக்காத மக்கள்கிட்ட நீங்க மறைமுகமா சொன்னாப் புரிஞ்சுக்குவானா?

இலக்கியம்தான் சமூக மாற்றத்திற்கான தீர்வு என்று சொல்வது இக்காலத்திற்குப் பொருந்தாத ஒன்று.அதில் சிறு  உண்மை இருந்தாலும் இப்போதைக்கு அது இங்கே தோல்வியடைந்த ஒன்று.  தேடியவன் கண்டடைந்து வருவான். தேடாதவனை இலக்கியம் படித்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. கட்டாயப்படுத்தி அளிக்கப்படும் எதுவொன்றின் மதிப்பும் உணரப்படாது. எனவே இலக்கியம் அதைத் தேடி வருபவனுக்குத்தான் கிடைக்கவேண்டும்.

பெரும்பான்மை சராசரி சமூகத்தில் சிறு மாற்றத்தையாவது கொண்டுவர வேண்டுமென்றால் அது சினிமாவால் மட்டுமே முடியும். சினிமாதான் பெரும்பான்மை சமூகத்தின் ஊணிலும், உறக்கத்திலும் இருக்கிறது. அதற்கு வாசிக்கத் தெரிந்திருக்கத் தேவையில்லை, பெரிய முயற்சிகள் தேவையில்லை, கவனம் சிதறினாலும் பெரிய பிரச்சனையில்லை. பிரச்சார நடையில், போதனை வடிவில் சினிமாவை எடுக்கமுடியும். மிக நிச்சயமாக அது பெரும்பான்மை மைய நீரோட்டச் சமூகத்திடம் மாற்றம் ஏற்படுத்தும். சமீபத்தில் வெளிவந்த அப்பா என்ற திரைப்படத்தை இந்த வகையில் சேர்க்கலாம். நிறைய நாடகத்தனமான காட்சிகள் இருந்தாலும் இன்றைக்கு கல்வியின் நிலை பற்றிய முக்கியப்புரிதலை அந்தத் திரைப்படம் சிலபேரிடமாவது ஏற்படுத்தியிருக்கும் என்று நிச்சயம் சொல்லமுடியும். இது மாதிரியான படங்கள் இப்போது காலத்தின் தேவை. அவற்றில் எந்த அழகியலும், கலை வடிவமும் இல்லையென்றாலும் அவை கொண்டாடப்பட்டுத்தான் ஆக வேண்டும்.அவை முன்னெடுக்கப்பட வேண்டும்.அதன்மூலமே தேவையான புரிதலையும், சிறு மாற்றத்தையும் இனிவரும் காலங்களில் காண முடியும்.