நவம்பர் 08, 2016

முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல்

சிவனும் பார்வதியும் தம்மிடம் இருக்கும் ஒரு ஞானப்பழத்தை யாராவது ஒருவருக்குத்தான் தரவேண்டுமென்று விரும்பி,  உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்குத்தான் ஞானப்பழம் என்று சொல்ல முருகன் மறுகணமே உலகத்தை சுற்ற மயிலேறிப் புறப்படுகிறான். தன் எலி வாகனத்தால் முருகனுடன் போட்டியிட்டு உலகைச் சுற்றி வர முடியாது என உணர்கிற விநாயகன் சமயோசிதமாக தன் பெற்றோராகிய சிவனையும், பார்வதியுமே தனக்கு உலகமென்று சொல்லிச் சுற்றிவர அவர்களும் உளம்மகிழ்ந்து விநாயகனுக்கு ஞானப்பழத்தைக் கொடுக்கிறார்கள். இது இந்துக்கள் குழந்தையிலேயே அறிந்த கதை. மற்ற சமூகத்தினர் திரைப்படம் பார்த்து அறிந்திருக்கலாம். இதன் படிப்பினை என்னவென்று சிந்தித்தால் பெற்றோருக்குப் பிறகுதான் நமக்கு எல்லாமே அவர்கள் சொல்லுதல்படி நடந்தால் ஞானம் கிடைக்கும், அதற்குப் பிறகுதான் புற உலகம் என்று குடும்ப உறவுமுறையை என்றும் நிலைக்கச்செய்ய குழந்தைகளிடம் சொல்லப்படும் மதநீதிக்கதையென்று கொள்ள முடிகிறது. ஆனால் இந்தக் கதை கௌதம சித்தார்த்தனின் சிந்தனையில் ஆதிக்கடவுள் முருகனை அழிக்க இந்துத்துவத்தால் முன்னிறுத்தப்படும் புனைவாகத் தோன்றியிருக்கிறது.

ஞானப்பழம் என்பது ஞானத்தை அடைவதற்கான பழம் எனில் பெற்றோரைச் சுற்றுதல்தான் உலகம் என்கிற ஞானத்தை அடைந்துவிட்ட விநாயகனுக்கு அதை ஏன் கொடுக்கவேண்டும் மாறாக ஞானமற்ற முருகனுக்குத்தானே கொடுக்கவேண்டும் என்ற கௌதம சித்தார்த்தனின் கேள்வி சுவாரசியமாய் இருக்கிறது. முருகனிடம் உலகைச் சுற்றிவரச் சொல்லும்போது முடிவிலா வெளியைச் சுற்றச்செல்வதன் மூலம் உலகம் தாங்கள்தான் என்கிற சிவ-பார்வதியின் இறைத்தன்மையை முருகன் நிராகரிப்பதாக கௌதம சித்தார்த்தன் சொல்லும்போது எழுத்தாளர் என்றாலே ஏதாவது வித்தியாசமாகச் சொல்லவேண்டும் என்பதற்காகச் சொல்வதுபோல் இருக்கிறது. உலகத்தைச் சுற்றிவரச் சொன்னால் யாராக இருந்தாலும் அதைத்தானே செய்வார்கள்( ஞானப்பழக் கதை தெரியாதவர்கள்). அவர்களெல்லாம் இறைத்தன்மையை நிராகரிப்பவர்களா?

துவக்கத்தில் ஆதி மனிதர்கள் இயற்கையை வணங்கிவந்த காலத்தில் தோன்றிய வீர மனிதனாக முருகனை முன்னிறுத்தும் கௌதம சித்தார்த்தன் அதற்கு ஆதாரமாக பழங்கால மனிதன் குகைகளில் வரைந்த முருக ஓவியங்களையும், முருகன் மறைவிற்குப் பின்னர் முருகனின் உருவ வழிபாடு நோக்கி ஆதிக்குடி நகர்ந்ததையும் ,அதன்பின் முருகனைக் குறிப்பிடும் சங்கபாடல்களையும் சான்றாகக் காட்டி அதனோடு விநாயகர் சங்க பாடல்களில் குறிப்பிடப்பட்ட காலத்தையும் ஒப்பிட்டு, புத்த, சமண சமயங்களின் எழுச்சியை மீறி இந்து மதம் தன்னை முன்னிறுத்த உருவாக்கிய அறிவார்ந்த புனைவுதான் விநாயகன் என்கிறார். அதுபற்றிக் கேள்விகள் எழுப்பப்படக்கூடாது என்பதாலேயே யானை முகம், மனித உடல் என்று பயானுகரமான உருவம் விநாயகருக்கு கொடுக்கப்படுவதாகவும் சொல்கிறார்.  அதற்கு ஏன் முருகனை சிறுமைப்படுத்தவேண்டும் என்ற கேள்விக்கு நாட்டார் தெய்வங்கள் ஒவ்வொரு வட்டார வாரியாக முருகன், கொற்றவை,சுடலைமாடன் எனப் பிரிதல் பொருட்டு அது ஒரு ஒருங்கிணைவை ஏற்படுத்தாததால் தேசம் முழுமைக்குமான இந்துத்துவ பிம்பமாக,  பன்மைத்தன்மைக்கு மாற்றான ஒற்றைத்தன்மையாக விநாயகர் வைக்கப்படுவதாகச் சொல்கிறார்.

ஒரு நாடு இன்னொரு நாட்டைப் போரிட்டுக் கைப்பற்றுவது என்பது கடினமாக்கப்பட்டுவிட்ட இந்த காலகட்டத்தில் பொருளாதார ரீதியிலான ஆதிக்கத்தைத்தான் ஒரு நாடு இன்னொரு நாடு மீது செலுத்துவதாகக் குறிப்பிடுகிறார் சித்தார்த்தன்.இது ஒரு முக்கியமான பார்வை. ஒரு குளிர்பானம் மேலைநாடொன்றின் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டால் அதை மற்ற வளரும் நாடுகளுக்கு எவ்வாறு கொண்டுசெல்ல வேண்டும் பிறகு இந்தியா போன்றொரு நாட்டின் மொத்த மக்களையும் அந்தக் குளிர்பானத்தையே குடிக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கெல்லாம் பின்னால் செயல்படும் உலக  அரசியலைச் சுட்டிக்காட்டுகிற கௌதம சித்தார்த்தன் அதே உலக அரசியல்தான் நாட்டார் தெய்வ வழிபாடு முறைகளை அழித்து ஒற்றை தெய்வத்தைக் கொண்டுவர முயல்வதின் பின்னாலும் இருப்பதாகச் சொல்கிறார். ஆனால் அதை தெளிவாக விளக்காத கௌதம சித்தார்த்தன் இந்துமத ஆதரவாளர்கள் , ஏகாதிபத்திய அரசுகளுக்கு உதவுவதாகச் சொல்லி மழுப்புகிறார். கடவுள் சார்ந்து உதவுவதால் என்ன பயன் என்று கடைசிவரை விளங்கவில்லை.

இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு கௌதம சித்தார்த்தன் எடுத்துக்கொண்டிருக்கிற முயற்சிகள் நிச்சயமாகப் பாராட்டப்படவேண்டியவை. அவர் பல்வேறு தகவல்களை, சங்ககாலப் பாடல்களில் இருக்கும் வரிகளைத் திரட்டி முருகன் ஆதிக்கடவுள் என சான்றாக வைக்கிறார். இதற்கு அவர் செலவிட்ட காலமும் கணக்கில் கொள்ளத்தக்கது. ஆனால் மாற்றுச் சிந்தனையாளராக கௌதம சித்தார்த்தன் தன்னை முன்னிறுத்திக்கொள்வது தவிர இந்தப் புத்தகம் எழுதப்படுவதற்கான பிற தேவைகள் என்ன என்ற கேள்வி எழுகிறது.

இன்றைக்கு இரண்டாயிரத்துக்குப் பிறகு பிறந்த குழந்தைகள் வெளியில் சென்று விளையாடாமல் வீட்டில் வீடியோகேம் விளையாடுவதைப் பார்க்கிற தொண்ணூறுகளில் பிறந்த நான் " நாங்க எல்லாம் எப்படி வெளியில ஓடித் திரிஞ்சு செவன் ஷாட்,குழிபந்து, கிரிக்கெட்னு விளையாடுவோம்னு தெரியுமா" என்று கவலைப்பட்டால் நான் விளையாடிய விளையாட்டுகளை பெருமையாகப் பேசுவதும் அதன்மூலம் வீடியோ கேம்களின் காலத்தைவிட நாங்கள் மேம்பட்டவர்கள் என்று காட்டுவதும் அதன்மூலம் ஏதோ பெரிய வாழ்வியலை இழந்துவிட்டதாக குழந்தைக்கு குற்றவுணர்ச்சி ஏற்படுத்துவதும்தான் என் நோக்கம். ஆனால் ஒரு குழந்தை வீட்டிலேயே இருந்தால் மனிதத் தொடர்பு இல்லாமல் போய்விடுமே, ஒபேசிட்டி வந்துவிடுமே என்ற கவலையோடும் நான் அதை சொல்லியிருக்கலாம். ஆக என்காலம் சார்ந்த சுயபெருமையோடு இக்காலக் குழந்தையின் குழந்தைப் பருவ மேம்பாட்டிற்கும் தேவையான ஒன்றை நான் சொல்லியிருக்கிறேன். ஆனால் " அந்த காலத்துல நாங்க எல்லாம் பொண்ணுங்ககிட்ட பேசவே மாட்டோம் தெரியுமா? நாங்க எல்லாம் திருவிழாபோய் ஜவ்வு மிட்டாய் சாப்பிடுவோமே, நாங்கல்லாம் ஊரு ஊரா சுத்துவமே,அந்தக்கால இசைதான்யா இசை" இவை முந்தைய தலைமுறையின் சுயபெருமை அன்றி இந்தகால தலைமுறை அதைச் செய்யாததால் ஏற்பட்ட தாக்கம் என்ன? " நாங்கெல்லாம் முருகனத்தான் கும்பிடுவோம்" " சரி அதுக்கிப்போ என்ன? நாங்க விநாயகரக் கும்புட்டுக்கறோம்" என்று சொல்லத் தோன்றுகிறது. வணங்குவதால் மன ஆறுதல் கிடைக்கிறதா? அது போதும். உருவம் எதுவானால் என்ன?

கால மாற்றத்தில் தேவையற்ற தொன்மங்களும் மரபுகளும் மறைவதற்கு உட்கார்ந்து பெருமை போகிறதே என்று அழ முடியாது. பழையன கழிதலும் புதியன புகுதலும்தான் இங்கு நடக்கும். விநாயகனைவிட முருகன் மேம்பட்டவன் எனச் சொல்வதே ஒரு அரசியல்தான். அது யாருக்காக செய்யப்படும் அரசியல் என்ற கேள்வி எழுகிறது.