நவம்பர் 12, 2016

மாற்றம் - ஒரு உரையாடல்

நேற்று எழுதிய மாற்றம் என்ற பதிவு சார்ந்து பேஸ்புக்கில் நடந்த உரையாடலைத் தொகுத்துள்ளேன

சேயோன் யாழ்வேந்தன்:
ஓர் உண்மையை முன்வைத்து, ஒரு பொய்யை உண்மையாக்கும் திரிபு இப்பதிவு. இலக்கியம் சமூகத்தை மாற்றாதுதான். சில தனிநபர்களிடம் இலக்கியம் ஏற்படுத்தும் தாக்கம் காலப்போக்கில் சமூகத்தில் உள்ளார்ந்த subtle மாற்றத்தை ஏற்படுத்தும். அதே நிலைதான் திரைப்படத்துக்கும்.  இலக்கியம் மாற்றாது, திரைப்படம் சமூகத்தை மாற்றும் என்பது, அனுபவமில்லாமையின் திரிபு.

முகமத் காஃபுர்:
( அபிலாஷ் சந்திரனின் கபாலி படம் குறித்த கட்டுரையின் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார்)
ரஜினியை பற்றி பேசும் போது இந்த தொன்ம ஆய்வு முக்கியமானது. அவரது வெற்றிக்கும் சரி எம்.ஜி.ஆரின் முந்தைய வெற்றிக்கும் சரி அவர்களை ஒட்டி உருவாக்கப்பட்ட தொன்மங்கள் தாம் உதவின. டி.தருமராஜ் தான் அருந்ததிய மக்கள் குடியிருப்பில் தான் கண்ட நாட்டுப்புற கூத்து ஒன்றை விவரிக்கிறார். அதில் தலித் ஒருவர் ஆக்ரோசமாய் தனக்கு மேல்சாதியாய் உள்ளவனை திரும்ப தாக்கும் இடத்தை தலித் மக்கள் எவ்வாறு திரும்ப திரும்ப நிகழ்த்துப்படி நிர்பந்தித்து பார்த்து ரசித்தார்கள் என சொல்கிறார். இந்த கூத்து நிகழ்வதற்கு சற்று முன் நாயக்கர் சாதியினர் சில அருந்ததிய இளைஞர்களை கூத்து நடக்கும் இடத்தில் இருந்தே அழைத்து சென்று தாக்குகிறார்கள். தலித் மக்கள் இதற்கான எதிர்வினையை கூத்து நாயகனின் ஹீரோயிசத்தை ரசித்து கொண்டாடுவதன் வழி வெளிப்படுத்துகிறார்களே அன்றி நேரடியான எதிர்நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. இதன் பொருள் என்ன?

ஒரு சினிமா தொன்மம் (தலித் போராளியாக இருந்தாலும்) மக்களை எழுச்சி கொண்டு போராட வைக்காது. மக்கள் தொன்ம நிகழ்த்தலின் ஒரு பகுதியாக மாறி லயிப்பார்களே அன்றி தொன்மத்தில் இருந்து நடைமுறைக்கு நகர மாட்டார்கள். அப்படி நிகழும் என நம்புவது ஒரு இடதுசாரி கற்பனை மட்டும் தான். “கபாலி” ஒரு புரட்சி படம் என தலித் போராளி நண்பர்களும் அது போல் நம்ப விரும்புகிறார்கள். ஆனால் அப்புரட்சி கதையாடலுக்குள் நிகழும் புரட்சி மட்டுமே.

அகில் குமார்:

இலக்கியம் கூடாதென்பதல்ல. இலக்கியம் அவர்களுக்குப் புரியாது, அதன் தேவை அவர்களுக்குத் தெரியாது என்பதே பிரச்சனை. இலக்கியத்திற்குள் வருவதற்கு இன்றைய தலைமுறைக்கு சில தடைகள் உள்ளன. அது திரைப்படத்தில் இல்லை. புரட்சி என்பதை ஒரு படம் பார்த்த அடுத்தநாளே போராட்டத்தில் இறங்குவதாகக் கொள்ளக்கூடாது. அது சிறு மனமாற்றம் மூலம் நாட்களுக்குப் பிறகு நிகழும். மக்கள் சரியான வேட்பாளருக்கு ஓட்டுப்போடுவது கூடப் புரட்சிதான். இலக்கியத்தின் மேன்மையை நான் குறைத்து மதிப்பிடவே இல்லை அதன் தோல்வியை இலக்கியத்தை நேசிக்கிற ஒருவனாகவே ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்றைக்குக் கலப்புத் திருமணங்களும், காதலும் ஓரளவாவது ஏற்றுக்கொள்ளப்படுதலிலே சினிமாவின் பங்கு நிச்சயம் உண்டு என்பதை நாம் சிந்தித்தால் புரியும். அதே புரிதலை பிற விஷயங்களில் ஏற்படுத்த இயலும்.

தியாகராஜன்:
எனக்கு திரைப்படங்களை விட புத்தகங்களே நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றன ஆனால் வாசிக்க சோம்பேறி தனப்படும் ஒரு சமூகத்தை வைத்து பார்க்கையில் இது சரி தான்.

ஜெயவேல் மலை:

அன்புள்ள அகிலுக்கு நம் சினிமா வாழ்வே நம் வாழ்க்கை ஆகி போனது.  நம் தலைமுறை வாழ்வே அதில் இருந்து நகல் எடுக்கபட்டது.  அசல்கள் அதில்  எப்படி  உருவாகும். கீழ்மைகளை  அடிப்படையாக கொண்டே நம் சினிமா உற்பத்தியாகிது.  புரியல அகில் நீங்கள்  விளக்கத்தை ஆதாரங்களுடன் அளிக்கும் பட்சத்தில்  மட்டுமே  இதை ஏற்பேன்.
கலப்பு திருமணமும் காதலும்  வலுவான பொருளாதாரம்  இருந்தால் பெரிய எதிர்ப்புகளை சந்திப்பதில்லை. மாறாக. சொந்த ஜாதியில் நிகழும் ஏற்ற தாழ்வான காதல்  அதோ கதி தான்.

மூத்திர பை கிழவனை எப்படி மறந்தீங்க.  காடு மேடு எல்லாம் அந்த கிழவன் சுற்றியதை  தானே நம் பல்வேறு   வடிவங்களில் அறுவடை செய்கிறோம்.

அகில் குமார்:
இப்போதிருக்கும் சமூக சூழலில் இருந்து நமக்கு நிச்சயமாக மாற்றம் தேவை. இதை அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். இந்த மாற்றம் எப்படி வரும்?

1. இலக்கிய, புத்தக வாசிப்பு

2. திரைப்படம்

ஒருவன் ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்றால் அவனுக்கு அந்த மொழியை வாசிக்கத் தெரியவேண்டும். ஆனால் நாம் வெறுமனே மனப்பாடம் செய்யும் இயந்திரங்களை உருவாக்குவதால் அவர்களுக்கு மொழி தெரியாது. அதனால் அவர்களுக்கு வாசிக்கத் தெரியாது. அவர்களை வாசிக்கச் செய்ய வேண்டுமென்றால் அவர்களுக்கு தமிழ் எழுத்துகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இருபது வயதுக்குமேல் ஒருவனாவது சுயத்தை விட்டு எழுத்து கற்றுக்கொள்வானா? இங்கே கல்வி முறையில்தான் மாற்றம் தேவைப்படுகிறது. அந்த மாற்றம் பற்றி ஒரு புத்தகம் எழுதினால் அவனுக்கு வாசிக்கத் தெரியாது. ஆர்வம் கிடையாது. ஆனால் காட்சி ஊடகத்திற்கு முயற்சிகளற்ற சிறு கவனிப்பு போதும். இன்றைக்கு வகுப்பறைகள் smart class களாக மாற்றப்படுவது ஏன்? காட்சியாகக் காட்டினால் புரிவது எளிது. ஒரு பெரும்பான்மை சராசரி சமூகத்தின் புரிதலுக்கு ஏற்றது சினிமாதான். இலக்கியம் படிப்பதன் தேவையையே சினிமா மூலம் சொல்லலாம். அது செல்லுபடியாகும். நம் வாழ்க்கையில் எது முழுமையாய் கலந்திருக்கிறதோ, எது நம் வாழ்க்கை ஆகி இருக்கிறதோ அதன் மூலமே வேறொன்றை அறிய முடியும். கபாலி படத்தில் ரஜினி படிக்கிற புத்தகத்தை பலபேர் வாங்கிப் படித்ததை இங்கே ஒப்பிட்டுப் பாருங்கள். தமிழின் மொண்ணையான கமர்ஷியல் படங்களைப் பற்றி நான் பேசவில்லை. அப்பா, ஜோக்கர் போன்ற படங்களைப் பற்றிப் பேசுகிறேன். கமர்ஷியல் படமாக இருந்தாலும் ஒரு சிந்தனையை முன்வைக்கும் படங்கள் அவை. பெரியாரை இந்தத் தலைமுறையில் யார் படித்துத் தெரிந்துகொள்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள். பெரியார் என்ற பெயர் தெரியும் அவ்வளவுதான். அதற்கும் பெரியார் என்ற படம் எடுக்கவேண்டி இருக்கிறது. சத்யராஜ் நடிக்கவேண்டி இருக்கிறது. அது Documentry வகை என்பதால் எடுபடவில்லை. அதுவே கமர்ஷியலாக இருந்தால் இன்னும் பார்த்திருப்பார்கள். நிதர்சனத்தை சொல்கிறேன். விஜயோ, அஜித்தோ பெரியாராக நடிப்பதை நினைத்துப் பாருஙகள். சராசரி, மொண்ணை சமூகத்திற்கு பெரியார் அப்போது போய்சேரமாட்டாரா? உங்களுக்கு பெரியார் தெரியுமென்பதால் எல்லாருக்கும் தெரியுமென்றில்லை. பாதிப்பேருக்கு பெரியார் என்ற பெயர்தான் தெரியும். சந்தேகமிருந்தால் உங்களுக்கு அருகிலுள்ள யாராவது இளைஞனை அழைத்துக் கேளுங்கள். உண்மையான நிலை இதுதான். Jayavel Malai இந்த இரண்டைத் தவிர வேறு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.

விஜய் நடித்த கத்தி படம் வந்தபோதுதான் பலபேருக்கு கம்யூனிசம் என்று ஒரு விஷயம் இருப்பதே தெரியும். இதுதான் இன்றைய தலைமுறையின் நிலை.

சேயோன் யாழ்வேந்தன்:

கத்தி படம் பார்த்து ஒருவன் கம்யூனிசத்தைத் தெரிந்துகொள்வதைவிட, அவன் அதைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பது எவ்வளவு நல்லது என்று உங்களுக்குப் புரியவில்லையா? (நீங்கள் சொன்னது 0.01% கூட உண்மையில்லை என்பது வேறு விஷயம்.)

பெரியார் எடுத்த எந்தப் படம் அவரை தமிழ்நாட்டின் வரலாற்று நாயகனாக்கியது? தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பெரியாரியம் வளர்ந்தது அவரின் எழுத்தாலும் பேச்சாலும் செயல்பாடுகளாலுமா? திரைப்படத்தாலா?

3000 ஆண்டுகால இலக்கியங்களை விட 70 ஆண்டு சினிமா சமூகத்தை, தனிமனிதனை மாற்றுகிறதா?   ஒரு பொய்யை அப்படியே போட்டுவிட்டு அடுத்தடுத்த பொய்களுக்குத் தாவாதீர்கள். இதைப் பேசி முடித்துக்கொண்டு புதிய பொய்களுக்குப் போகலாம்.

அருள் மஹூ:

cinema மாற்றுகிறது என்பது உண்மை தான்... அது ஆரோய்கமான மாற்றமாக இல்லை இப்போது வரை... இலக்கியம் சொற்ப பேரை மாற்றினாலும் அது ஆரோக்கியமான மாற்றம்... human evalution உதிரி மனிதர்களால் நிகழ்ந்தவையே... மாற்று ஊடகமாக cinema மாற வாய்ப்புள்ளது... 4,5 பக்க வாசிப்பை 1 நிமிட காட்சி உணர்த்தி விடும்... உதாரணம் எலி பாத்தாயம்(Malayalam)... ஆனால் அது வெகுஜனதை போய் சேரவில்லை...

சேயோன் யாழ்வேந்தன்:

Arul Mahoo புரிதல் சரி். இது இன்னும் ஆழமாக நோக்கினால் வேறு பரிமாணங்களைக் காட்டும்    சமூகச் செயல்பாடுகள் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதற்கு இலக்கியமும் திரைப்படமும் துணையாக இருந்திருக்கின்றன.  இலக்கியத்தின் அளவுக்கு திரைப்படம் ஒருபோதும் துணைபோவதில்லை.  திரைவடிவில் காட்டப்படுவதும் இலக்கியம்தானே?

மு மோஹா:

நன்று.  சமூக மாற்றத்துக்கும் இலக்கியத்துக்குமே யாதொரு தொடர்பும் இல்லை என்கிற போது விசிலடிச்சான்களுக்கான சினிமாவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. ஆறறிவு படைத்த மனிதர்க்கு சரி, தவறு எவையென தெரிந்தும் அறம் பிறழ்வது இயல்பான ஒன்றாய் போயிற்று.

அகில் குமார்:
கத்தி படம் பார்த்துதான் சிலபேர் கம்யூனிசம் என்று ஒன்று இருப்பதைத் தெரிந்துகொண்டார்கள் என்பதில் எந்தப் பொய்யும் இல்லை. என் மிக நெருங்கிய நண்பர்களில் பெரும்பாலானவர்கள் அந்தப் படத்தைப் பார்த்த பின்பு கம்யூனிசம் என்றால் என்னவென்று விவாதித்துக்கொண்டிருந்தார்கள். சினிமாவிலிருந்து கம்யூனிசத்தைக் கற்றுக்கொள்ளும் ஒருவன் அதைக் கற்றுக்கொள்ளாமலே இருக்கலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இன்றைக்கு நம் சூழலில் ஒருவனுக்கு சமகாலத்தில் தன்னைச் சுற்றி நடப்பது தெரியவில்லையென்றால் அதற்குக் காரணம் அவனல்ல. கம்யூனிசம் தெரியாத இளைஞனை குற்றஞ்சாட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அதைக் கற்பிக்காமல் விட்ட சூழலை, அவனுக்கு முந்தைய தலைமுறையைத்தான் குற்றம் சாட்ட வேண்டும். என் பெரும்பாலான நெருங்கிய நண்பர்கள் குறைந்தபட்ச புரிதல் எதிலும் இல்லாதவர்கள். தமிழகம் முழுக்கவே, ஏன் இந்தியா முழுக்கவே இளந்தலைமுறையில் பெரும்பான்மை முட்டாள்கள்தான். ஆனால் அது அவர்களது தவறே அல்ல. அவர்கள் அவ்வாறு ஆக்கப்பட்டிருக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதுதான் வாழ்வியல் என்று போதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்காக சுயநலத்தோடு பலபேரை வீழ்த்தி தன்னை முன்னிறுத்த விழைகிறார்கள். ஏதேனும் ஒரு கட்டத்தில் தோல்வியடைந்து மன உளைச்சல் அடைகிறார்கள். அவர்களின் தோல்விக்குக் காரணமாக அவர்களின் திறன்குறைவுதான் காரணம் என்று அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. ஆனால் நம் தனிமனித வாழ்வை சிக்கலாக்கியிருக்கும் அரசியல் செயல்பாடுகள்தான் அதற்கான காரணம் என்று அவனுக்குப் புரிவதில்லை. அதை அவனுக்கு இலக்கியம் வழி சொல்லலாமென்றால் அவனுக்கு படிக்கத் தெரியவில்லை, படிக்கத் தெரிந்தால், வாசிக்கும் பயிற்சி குழந்தைமுதல் இல்லாத அவனால் இலக்கியத்தை உட்கிரகிக்க முடியவில்லை. கம்யூனிசத்தை ஒருவன் சினிமாவில் கற்றுக்கொண்டு அதை சூழலில் விவாதிக்கிறானென்றால் அது நல்ல மாற்றமில்லையா? இலக்கியத்திற்கான மாற்றாக சினிமா என்று சொல்லவில்லை. சினிமாவிலிருந்து இலக்கியம் நோக்கி என்பதையே சொல்கிறேன். தமிழகத்தின் அரசியல் மாற்றமே சினிமாக்காரர்களால் உருவாக்கப்பட்டதுதான். அதுதான் பெரும்பான்மை மக்களின் சமூக தளம். இன்றைக்கு ஒரு புதிய படத்தைப் பற்றி எல்லா இடத்திலும் விவாதமும், உரையாடலும் நடக்கிறது. பெரியார் இப்போது வாழவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். நாம் இருப்பது வேறொரு காலகட்டத்தில். இன்றைக்கு அரசியல் iconஆக யாரையும் முன்னிறுத்த முடியவில்லை.

கம்யூனிசத்தை, பெரியாரை இதுபோன்ற பிற விஷயங்களை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்வதில் சென்ற தலைமுறை பெரும் தோல்வி அடைந்திருக்கிறது. பணம், கௌரவம் போன்ற தனிநபர் சுயநலன்களுக்காக ஒரு பெருஞ்சமூகத்தின் இளம் மனிதர்கள் காவு கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இலக்கியமும், அரசியலும் தெரியாது. (அரசியலில் dmk, admk மட்டும் தெரியும்). அவர்களுக்குத் தெரிந்தது மூன்று விஷயங்கள்
1. எதற்கு செய்கிறோம் என்பது தெரியாத பலமணிநேர வேலை அல்லது பணம் சம்பாதிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று மூளைச்சலவை செய்யப்பட்டு ஒரு வேலை.

:2. காதல். அத்தனை அழுத்தங்களையும் தாண்டி தனக்கொரு அன்பு கிடைக்காதா என்ற தேடல் ( இவை சினிமா கற்பித்தவை உண்மையென்று நம்பி காதலென்ற பெயரில் இங்கே நடந்துகொண்டிருப்பவை. தமிழ் சினிமா ஏற்படுத்திய எதிர்மறையான விளைவு இது. இன்றைக்கு பெண்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்படும் பெரும்பாலான குற்றங்களுக்கு சினிமாவே காரணம். இந்த எதிர்மறை விளைவை நேர்மறையாகவும் மாற்ற முடியுமென்றே சொல்கிறேன். அதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயம் உண்டு)

3. சினிமா தெரியும். தமிழனின் ஒவ்வொரு அணுவிலும் சினிமா இருக்கிறது. இறைவி என்ற படம் வரும்போது பெண்களின் வாழ்வியல் பற்றிய சிறு சிந்தனையாவது ஒருவனுக்கு ஏற்படாதா? தனிஒருவன் என்ற திரைப்படம் சிறு சலனத்தைக்கூட எவன் மனதிலும் ஏற்படுத்தவில்லையா? சமூக வலைதளத்தில் இலக்கியவாதிகள் செய்யும் விவாதங்களை, சொல்லும் கருத்துகளை சாமானிய மனிதனை நோக்கி எடுத்துச்செல்ல தூதுவர்கள் யார்? எப்போதைக்கும் சினிமா என்று சொல்லவில்லை இப்போதைக்கு செய்ய முடிந்தது சினிமாவின் வழிதான் என்பதே என் நிலை. இலக்கியம், சினிமாவை விட பலமடங்கு மேம்பட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இலக்கியத்தை கொண்டுசெல்வதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளவேண்டும்.         இலக்கியவாதி என்ற நம் சுயத்தைக் கழற்றி வைத்துவிட்டு மிகச்சராசரி மனிதனின்  பார்வையில் சமூகத்தை உற்றுநோக்கினால் உண்மைகள் விளங்கும்.

சேயோன் யாழ்வேந்தன்:
இந்த இறைவி, கபாலி, ஜோக்கர தனித்தனியே சில மணி நேரங்கள் விவாதிக்கவேண்டும்.  இவற்றை விதந்தோதுவது middle-class stupidity.  மற்ற சின்மாக்களிலிருந்து மாறுபட்ட stupidity.    கபாலியை மறுபடி பாருங்கள், " My father Balaiah" என்ற புத்தகத் தலைப்பு அரை வினாடி காட்டப்பட்டருக்குமா? அதைப் பார்த்து யாராவது அந்தப் புத்தகம் என்னவென்று விசாரித்தார்களா? முகநூல் போராளிகள் வலிந்து வரிந்து எழுதினார்கள, சிலர் அதைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள். உண்மை என்னவென்று நம் மனச்சாட்சிக்குத் தெரிந்தாலும்,  நாம் இதை உள்ளே அமுக்கிக் கொண்டே இருப்போம், நம் முன்முடிவு, குருட்டு நம்பிக்கை ஒருபோதும் குலையாமல் பார்த்துக்கொள்ள அது அவசியம்.   ,தூள் படத்தில் விவேக் "கேன்சர்னு ஒரு வியாதி இருக்கறதேயே நான் சினிமாவைப் பார்த்துதாண்டா தெரிஞ்சுக்கிட்டேன்" என்பதுபோல், சில நம்பிக்கைகள்.

வால் தம்பி:

இனி வரும் காலமும் மாறாது. மாற்றம் நடைபெறுவதை தடை செய்யும், அரசியல்+ பெரும் புள்ளிகள் .சில படங்கள் எடுக்கும் போதே தடைகளை ஏற்படுத்தி நிறுத்த செய்கின்றனர். காலத்தை நிர்ணயிக்க காசுகளை விட்டெறியும் பணக்கார கூட்டம் கொட்டம் அடங்கியப்பின் ஊடகம், சினிமா துறை முன்னேறும். (காசு இருக்கிறவன் தான் படம் எடுக்கறான் தன்னை தானே எவன் குறையை சுட்டிக்காட்டுவான்?)

சுரேஷ்குமார்:
இதுபோன்ற படங்கள் இனியும் நிச்சயம் வரும் என்பதே எனது நம்பிக்கை.