நவம்பர் 17, 2016

உறவுமுறைச் சிக்கல்கள்

(முன்குறிப்பு: வாழ்தலை ஒருவன் வாழ்வதின் மூலம்தான் கற்றுக்கொள்ள முடியும். ஆனாலும் நாம் நிற்கிற வாழ்க்கைப் படியை ஒருவன் தாண்டிச் சென்றிருப்பானே என்றால் அவனிடமிருந்து கேட்டுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அவன் சொல்வதும் வேதவாக்கு அல்ல என்பதை எப்போதுமே நினைவில் இருத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்றைக்கு நான் வாழ்வில் கடந்துவருகிற வழிகளை அதன்மூலம் நான் கண்டெடுத்த சிந்தனைகளை என்னைப் போன்ற ஒரு இளம் மனிதனுக்கு பயன்படுமென்ற வகையில் முன்வைக்கவேண்டிய தேவை நிச்சயம் இருப்பதாகவே கருதுகிறேன். காரணம் எந்தப் பக்கத்திலிருந்தும் எங்களுக்கு வாழ்வதற்கான சிந்தனைகள் கிடைப்பதில்லை. எங்களுக்கு நாங்களே உருவாக்குகிறோம்.  இது வாழ்தலுக்கான பரஸ்பர உதவி. ஆனால் என் சிந்தனைகள்தான் இறுதியான கருத்து என்று ஒருபோதும் நான் வாதிடுவதில்லை. இதைவிடச் சிறப்பான வழிகள் இருக்கலாம். எனக்குத் தெரிந்ததை என் வயதிலும், என்னைவிட வயது குறைவான நண்பர்களுக்கும் சொல்கிறேன். இந்தப் பதிவில் ஒரு ஆலோசனை, அறிவுரைத் தொனியைத் தவிர்க்க முடியாமல் போய்விட்டது ஆனால் அவற்றை அவ்வாறாக அல்லாது ஒரு தனிப்பட்ட பார்வையாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.)

ஒரு உறவுமுறை என்பது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது. என்னுடைய ஒரு  நண்பனோடு பேச எனக்கு முற்றிலும் விருப்பமில்லை. ஆனால் என் உறவு அவனுக்கு தேவைப்படுகிறது, என் பேச்சு அவனுக்கு பிடித்திருக்கிறது எனும்போது சக மனிதன் என்ற முறையில் அவனோடு பேசுவது என்பதை ஒரு நடிப்பாகக்கூட நாம் செய்யலாம். நாம் வெறுமனே இருக்கிற ஒரு நேரத்தில் நம்மால் ஒருவன் ,அவன் தனிமையைப் போக்கிக்கொள்ள முடியுமென்றால் அது உதவுட்டுமே. ஆனால் அவ்வாறான நட்புகள் ஒருபோதும் நம் ஆளுமையை சிதைத்து,  நம்மைப் பயன்படுத்திக்கொள்ளும் அளவிற்கு முன்னகர நாம் அனுமதிக்கக்கூடாது.

நமக்கிருக்கும் அத்தனை உறவுகளோடும் நம்மால் உறவைப் பேண முடியாது. நாம் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் செய்ய முடியாது. நாம் Care எடுப்பதில்லை எனச் சொல்பவர்கள்கூடக் காலப்போக்கில் நம்மை Care செய்யாதவர்களாக மாறிவிடும் வாய்ப்புகள் அதிகம். ஒருவரை நாம் முழுமையாக நெருங்கி அறிய அறிய நிச்சயம் சகிக்கமுடியாத்தன்மையால் அவரைவிட்டு விலகுவோம். அவ்வாறான நட்புகள் காலந்தோறும் உதிர்ந்துகொண்டேதான் போகும். அவ்வாறல்லாத நமக்கு ஒத்துப்போகிற நட்புகள் முடிந்தவரை வாழும். அதற்கிடையில் எழும் உணர்ச்சிபூர்வமான வார்த்தைகளை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டுமா,  வேண்டாமா என்பது தனிநபரின் விருப்பம். அதை எடுத்துக்கொண்டாலும் காலப்போக்கில் இன்னொருநாள் அது தானாகவே போய்விடும்.

யாரை நம்மோடு வைத்துக்கொள்ள வேண்டும்? யாரோடு பேச வேண்டும் என்பது நமது தனிப்பட்ட ரசனையும், வாழும் முறையும் சார்ந்தது.Care எடுக்கறதே இல்ல என்ற உணர்ச்சிகர பேச்சுக்களை எல்லாம் தாண்டி நல்ல உறவுகள் எப்போதும் நம்மோடு இருக்கும். மற்றவை உரோமம்போல் உதிரும். அதற்கு நாம் எதுவுமே செய்ய முடியாது என்பதே உண்மை.வர வேண்டிய உறவுகள் கண்டிப்பாக தொடர்ந்து வரும். கைக்கூடாதவற்றை,பிடிக்காதவற்றை ரொம்பவும் மெனக்கெட்டு காப்பாற்றவும் வேண்டியதில்லை. எல்லாருக்கும் நாம் நண்பனாக இருக்கவும் முடியாது. என்னக் கண்டுக்கவே மாட்டைங்கற போன்ற காலத்தில் அழியும் வசனங்களை சாதாரணமாக எடுத்துக்கொண்டு முன்னகர வேண்டும். இதையே சிந்தித்துக்கொண்டிருக்கவும் தேவையில்லை.

நான் ஒரு பெண்ணோடு பேச வேண்டுமென பல நாளாய் அவளைத் தொடர்பு கொள்கிறேன். ஆனால் அவள் சிறு சண்டையால் பேசுவதில்லை. எனக்கு அவள்மேல் பெருங்காதல் இருக்கிறது. ஆனால் அவளுக்கு அது இல்லை எனும்போது "பேசு, பேசு "என்று வற்புறுத்தமுடியாது. அவள் நிலையை அறிந்து நான் உறவிலிருந்து வெளியேற வேண்டும். இல்லையேல் அவள் என்னை வெளியேற்ற வேண்டும். அதில் இருவருக்கும் நிறைய மனக்கஷ்டம் உண்டு. ஆனால் நாம் அவ்வகையான கஷ்டத்தை தாங்கும் விதமாகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். காலப்போக்கில் வேறொரு நெருக்கமான உறவிற்குள் சிக்கும்போது பழைய உறவு ஒன்றுமில்லாமல் போவது. கணநேர உணர்ச்சிகளை கடந்து செல்லுதலையே நாம் செய்யமுடியும் அது எவ்வளவு உணர்ச்சிகரமானதாக இருந்தாலும். இல்லையேல் இன்னொருவர் வாழ்விற்கு நாம் நம்மை பலி கொடுக்க நேரிடும். அந்தப் பிரிதலின் உணர்வுகள் ஏதாவது ஒருநாள் தனிமையில் நமக்கு துன்பத்தையோ அல்லது குற்றவுணர்வையோ தரலாம். ஆனால் நம் ஒட்டுமொத்த வாழ்வை நாம் அசைபோடும்போது அவை மிகச்சிறிய நிகழ்வுகள். தனிமையில் நம்மை உழலவிடாமல் இருந்தாலே இந்த சிந்தனைகள் வராது. இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் நாம்தான் உறவுமுறையை இவ்வளவு பெரிதாக நினைத்துக்கொள்கிறோமோ? உறவுமுறையை maintain செய்ய இவ்வளவு கஷ்டப்படுகிறோமா? Care எடுக்கமாட்டைங்கற என்று சொல்லும் ஒருவன் அவ்வளவு 'உண்மையாக' அதைச் சொல்லுகிறானா?என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. அது "நல்லாருக்கீங்களா?" போன்ற  சம்பிரதாயமான பேச்சு வழக்காகப் மாறிவிட்டதையும் இக்காலத்தில் பார்க்கலாம். இந்தக் கோணத்திலும் நாம் சிந்தித்துப்பார்க்கலாம். அந்தச் சிந்தனையின் மூலம் எந்த உறவைத் தொடர்வது என்ற முடிவுக்கும் நாம் வரலாம்.