நவம்பர் 18, 2016

பெண் இன்று

ஒப்பீட்டளவில் ஒரு பெண் முன்பில்லாத ஒரு சுதந்திரத்தை சூழலில் பெற்றிருக்கிறாள் எனச் சொல்லலாம். கல்லூரிக்குப் படிக்கச் செல்லும் பெண்களும்,வெளியூர்களில் வேலைக்குச் செல்லும் பெண்களும் அடக்குமுறைகளிலிருந்து சிறு சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அதுவும்கூட மிகக் குறுகிய காலத்திற்கான தீர்வுதான். அவர்களில் பெரும்பாலானவர்கள் திருமணம் செய்துகொண்டபின்பு மீண்டும் நமது அம்மாவோ, பாட்டியோ அனுபவிக்கிற,அனுபவித்த ஆணாதிக்கத்தின் பிடிக்குத்தான் சிக்குகிறார்கள். வெளியூர்களில் வேலைக்குச் செல்லும் ஒரு பெண் அல்லது வெளியூரில் படிக்கச் செல்லும் பெண் அதுவரை தனக்குக் கிடைக்காத ஒரு புதிய தனித்தியங்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் தான் அதுவரை செய்யாத, செய்ய நினைத்த அத்தனையும் அவளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற குறுகிய காலத்தில் செய்து பார்க்கத் துடிக்கிறாள். புதிதாக ஒன்றைக் கண்டவுடன் அதை அறிந்துகொள்ளத் துடிக்கும் குழந்தையின் மனம்தான் பெண்ணிற்கு அப்போது இருக்கிறது. இன்றைக்கு சூழலில் உருவாகியிருக்கிற உறவுமுறை சிக்கல்களில் பெரும்பாலானவற்றிற்கான காரணங்களில் ஒன்றாகவும் இதைச் சொல்லலாம்.

ஆனால் கல்லூரியிலும், அலுவலகத்திலும் அவள் அடையும் சுதந்திரம் என்பது அவள் பெற்றோரின் அடக்குமுறையில் இருந்து அவள் தப்பித்துக்கொள்வதுதானே தவிர சமூகத்தின் பிற ஆண்களின் வசைகளிலிருந்தும், கிண்டல்களிலிருந்தும் தப்பித்துக்கொள்வதல்ல. அது அவளை எல்லா இடங்களிலும் பின்தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு ஆணை பெண்ணும், பெண்ணை ஆணும் கிண்டல் செய்வதும், சீண்டுவதும் இயல்பானதே. அதுகூட இல்லையென்றால் எதற்கு இளமை? ஆனால் அதன் எல்லைகள் தொடர்ந்து மீறப்பட்டுக்கொண்டுதானே இருக்கின்றன? ஒரு பெண்ணை ஒருவன் அயர்ன் பாக்ஸ் என்று பொதுவெளியில் அழைப்பானேயானால் அதன் பின்னிருக்கும் வன்மம் எத்தகையது?  ஆனால் அதே வார்த்தைகள் அவன் தங்கையை நோக்கி வீசப்பட்டால் ஏன் வீராவேசம் அடைந்து சண்டையிடுகிறான்?

ஆண்கள் ஆண்டாண்டுகாலமாக பெண் அவனது அடிமை என்று சொல்லியே வளர்க்கப்படும்போது எவ்வாறு அவனிடமிருந்து ஒரு இயல்பான புரிதலை எதிர்பார்க்க முடியும்? லெக்கின்ஸ் போடாதே,தலையை விரித்துப் போடாதே,சத்தம் போட்டுப் பேசாதே என்று தன்னை ஆணையிடுபவனாகத்தான் அவனால் அவனை வைத்துக்கொள்ள முடியும். அது அவன் தவறல்ல. ஆண்களை பெண்களின் காவலர்களாகவே நாம் சொல்லி வளர்க்கிறோம். ஒருபோதும் பெண் உன்னைப்போன்ற, உனக்கு சமமான உயிர் என்று சொல்வதில்லையே. ஒரு பெண்ணின் வலியை உணரவேண்டுமென்றால் ஒரு ஆண் அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் பெண்ணாகத் தன்னை கற்பிதம் செய்து பார்க்க வேண்டும். அது தன்னைப் போன்ற மனித உயிரிற்கு செய்யப்பட்ட தீங்காக கருதவேண்டும். அவ்வாறான விஷயங்கள் இங்கே கற்பிக்கப்படவில்லை, பேசப்படவில்லை. நாம் கடைசிவரை ஆணையும், பெண்ணையும் தனித்தனியே பிரித்து வைத்து ஒழுக்கம் பேசுவோம். உங்கள் மகளோ, மகனோ உங்கள் கண் முன்னால் இறந்தோ அல்லது மனநலம் குன்றியோ கிடக்கும்போது இந்த தலைமுறை சரியில்லையென்று கூக்குரலிடுவீர்கள். நீங்கள் சரியில்லை என்பதாலே இந்த தலைமுறை இப்படியாகிவிட்டது என்பதே உண்மை. இருபது வயதில் யாரிடமும் போய் அறிவுரை கூற முடியாது. அவன் அவனுக்கான சுயத்தை உருவாக்கி வைத்திருப்பான். அவன் யார் சொன்னாலும் கேட்கமாட்டான். பள்ளி அளவிலேயே இவை கற்பிக்கப்படவேண்டும்.

ஒரு பெண்ணை ஒழுக்கவியல் நியதிகள் சொல்லி அடக்குகிறவர் பெற்றோராக இருந்தாலும், காதலனாக இருந்தாலும், அண்ணனாக  இருந்தாலும் அவர்கள் தங்கள் சுய நலனுக்காகவே அவ்வாறு செய்கிறார்கள். மானம், மரியாதை போன்ற வார்த்தைகளுக்காகவே செய்கிறார்கள். எனவே நமது குடும்ப அமைப்பு என்பது இந்தப் பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று. வெளியூரில் நீ எப்படி வேணா டிரெஸ் பண்ணிக்கோமா ஆனா உள்ளூர்ல எல்லாத்தையும் மறைச்சு டிரெஸ் பண்ணுமா என்று சொல்லும் என் தோழிகளின் அம்மாக்களை நான் அறிவேன். அம்மாவின், அப்பாவின், அண்ணனின் சுயத்தைக் காப்பாற்ற ஒரு பெண் தனது ஆசைகளை பலிகொடுக்க வேண்டியிருக்கிறது.

இதில் இன்னொரு முக்கியமான மற்றொரு கோணம் உண்டு. நான் இவற்றிலிருந்து விடுதலை அடைய வேண்டும் எனக் குரல் கொடுக்கிற பெண்கள் மிகக் குறைவுதான். பெரும்பாலான பெண்கள் அடிமைத்தனத்தை விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள்தான். மற்றவர்கள் தங்களை நல்லவள் என்று சொல்லவேண்டுமென்கிற ஒற்றைக் காரணத்திற்காகவே தன் உணர்வை மறைத்து ஹோம்லியாக நடிக்கிற அநேகம் பெண்களை நானறிவேன். அதில் ஒரு பெருமிதம் சிலபேருக்கு. நல்ல பெண் பட்டத்தைக் காப்பாற்ற தீவிரமாய் உழைப்பார்கள். பெரும்பாலான பெண்கள் சோம்பேறியும் கூட. தானாகப் படித்து, வேலைக்குப் போய் , தனக்கான உணவு தேடுதல் என்பதை செய்ய மாட்டார்கள். வீட்டிலிருக்கும் எளிய வேலைகளை செய்துவிட்டு, மதியம் குட்டித்தூக்கம் போட்டுவிட்டு, இரவு சீரியல் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்களை வாரத்திற்கு ஒருநாள் கணவன் எங்கேயாவது வெளியே கூட்டிசென்றாலே போதும். கடைசிவரைக் கணவனை சார்ந்தே இருப்பார்கள். அவர்களிடம் என்ன பெண் விடுதலை பேச வேண்டியிருக்கிறது? ஒரு இக்கட்டான சூழலில் அவர்களுக்குத் தனியாக செயல்படத் தெரியாது. ஆண் தன் பாதுகாவலனாக இருக்க வேண்டும், தன்னைக் காப்பாற்ற வேண்டும் என நினைப்பார்கள். அவர்கள் மனமகிழ்ச்சியோடு இந்த அடிமைத்தனத்தை விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள். அவர்களுக்கு விடுதலை எல்லாம் தேவையில்லை. விடுதலைதான் அவர்களுக்குத் தலைவலி. தினமும் ஆபிஸ் போவது எவ்வளவு கொடுமையென்று யோசித்துப்பாருங்கள்.

எனவே விடுதலை பேசுகிறவர்கள் மிகச்சொற்பமான பெண்கள். அவர்கள் தங்களை இந்த சூழலிலிருந்து விடுவித்துக்கொண்டு தனக்கான பொருளாதாரத்தை அமைத்து வாழவேண்டுமே ஒழிய ஒருபோதும் ஒட்டுமொத்த பெண் சமூகத்தை நோக்கி விடுதலைக்குரல் எழுப்பவேண்டிய அவசியமில்லை.  அவ்வாறான விடுதலை தேவைப்படும் பெண் ஆணுக்கு நிகராக  கருதப்படவேண்டுமென்றால் அவள் அறிவுத் தளங்களில், சிந்தனைத் தளங்களில் அவளை நிரூபித்துக் காட்டவேண்டும். அதை விடுத்து சும்மா விடுதலை, விடுதலை என்று கூக்குரலிடவும்  பெண் என்று சொல்லி சலுகைகள் கேட்கவும்கூடாது.