இடை வெளி

அவள்தானே அது?

சிறுமழையில் நனைந்துகொண்டே என்னோடு தன் பனிக்கூழைப் பகிர்ந்துகொண்டவள்

என் உதடுகளை அவள் உதடுகளின் கட்டிப்பிடி வைத்தியத்தால் சில காலம் கட்டிப்போட்டவள்

ஈறிலா வெளியின் நட்சத்திரங்களை எண்ணிப் பார்க்கும் என் ஆராய்ச்சிக்கு தன் மடி தந்து உதவியவள்

ஆடும் அந்த இளஞ்சிவப்புநிற கம்மலின் நடனத்தில்

பறக்கும் முடியை ஒதுக்கும் அந்த லாவகத்தில்

அணிந்திருக்கும் ஆடையை அடிக்கடி சரிபார்க்கும் அந்த மென் பெண் உணர்வில்

கம்மலையொத்த நிறத்தில் அவள் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தை திருப்பி காலத்தை மாற்ற நினைக்கும் அழகில்

உருண்டோடும் காலத்தை எட்டிப்பிடிக்கமுடியா தோல்வியில் உதட்டின் சிறு பகுதியை பற்களுக்கு கவ்வக்கொடுத்து அவள் உண்டாக்கும் 'ம்ச்' செய்கையில்

அவள் மாறவேயில்லை

நமக்கானவர்கள் அருகாமையில் இருக்கும்போது காட்டிக்கொடுத்துவிடும் உள்ளுணர்வினாலோ என்னவோ பேருந்தின் ஒரு முனையில் இருக்கும் அவள் மறுமுனையில் இருக்கும் என்னைப் பார்க்கிறாள்

அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிகின்றன

எந்த தடங்கலும் இன்றி அவள் கண்களிலிருந்து ஒரு ஒளி என்னை வந்தடைகிறது

திடீரென்று நினைவு வந்தவளாய் வா,வா என்று சிறு குழந்தையை அழைப்பதுபோல் செல்லமாய் என்னை அழைக்கிறாள்

எனக்கும் அவளுக்கும் இடைப்பட்ட வெளி எட்டிப் பிடித்து விடும் தூரத்தில்

இன்னும் சில நொடிகளில் நானும் அவளும் இந்த முடிவிலா பிரபஞ்சத்தின் வெளியொன்றில் அருகருகே நின்றிருப்போம் ஆண்டுகளுக்கு முன்பு நின்றதைப்போல்

என் அருகில் நிற்பவர்களை விலக்கி முன்னகர்கிறேன்

அவள் நினைவுகள் என்னில் எழுதப்பட்டிருக்கும் கடந்த காலத்தை நினைவு கூர்கிறேன்.

ஒரே வெளியில் நிற்கும் தருவாயில் இறந்தகாலத்தின் நினைவுகள் புதிப்பிக்கப்படுமா?

நான் மீண்டுமொருமுறை அவளைப் பார்க்கிறேன்.

அவள்தானா அது?

முன்வைத்த கால்களை வேகமாகப் பின்வைக்கிறேன்

அவள் மீண்டும் என்னை அந்த அழகிய உதடுகளை குவித்தும் குழித்தும் அழைக்கிறாள்

மெதுவாகச் செல்லும் பேருந்திலிருந்து கீழிறிங்கி நடக்க ஆரம்பிக்கிறேன்

அவளும் காலமும் மெதுவாகப் பயணித்துக்கொண்டிருக்கின்றன

இப்போது என் நடை அன்றைக்கு அவள் நடந்ததுபோலவே இருப்பதாய் பாவனை செய்கிறேன்

எனக்கு சிரிப்பு வருகிறது

அன்றைக்கு அவளும் இவ்வாறே சிரித்திருக்கக்கூடுமோ?