நவம்பர் 27, 2016

எதை நோக்கிப் போகிறோம்?

சமீபத்தில் சிறுசமூக மாற்றத்திற்கான ஆரம்பத்தை சினிமாவிலிருந்து துவங்கலாம் என்றொரு பதிவை எழுதியிருந்தேன். இதைப் படித்துவிட்டு ஒரு நண்பன் அழைத்திருந்தான். தமிழை தான் மிகவும் தடுமாறிப் படிப்பதாகவும், ஆங்கிலமும் தனக்கு தெரியாதென்றும், கம்யூனிசம் என்ற வார்த்தையைத் தான் கத்தி சினிமாவில்தான் முதல்முறை கேட்டதாகவும், நான் பதிவிட்டிருந்தது அனைத்தும் உண்மையென்றும், தாங்கள் ஏன் இப்படி இருக்கிறோம் என்றும் கேட்டு வருத்தப்பட்டான். எனக்கு கண் கலங்கி விட்டது. ஒரு சமூகத்தில் அத்தனைபேரும் அறிவாளிகளாக இருக்க முடியாது என்பதை நான் நிச்சயமாக ஒப்புக்கொள்வேன். ஆனால் பெரும்பான்மை சமூகம் இன்றைக்கு மொண்ணைத்தனமாக இருக்கிறது. குறைந்தபட்ச அளவில்கூட அறிவார்ந்த இளைஞர்களைக் குறிப்பிட்டுக் காட்ட முடியில்லை. வாட்ஸ் அப்பில் முட்டாள்தனமான குறுந்தகவல்களை உண்மையென்று நம்பி அடுத்தவனுக்கு அனுப்புவதுதான் இன்றைக்கு இளைஞர்களுக்குத் தெரிந்தது.

இவ்வாறாக உருவாகி வந்திருக்கிற இந்த தலைமுறை இப்படியாக யார் காரணம்?

பொதுவாக ஒருவன் தன் வாழ்வினைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவனுக்கு கற்பிக்கப்படவேண்டும் அல்லது அவனாக வாழ்விலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கற்பிக்கப்படுதல் என்பது பள்ளியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆனால் நம் கல்விமுறை என்பது மனப்பாடம் செய்யும் இயந்திரங்களை உருவாக்குதலன்றி எதையும் செய்வதில்லை. ஆசிரியர் என்பவர் புத்தகத்தில் இருக்கும் பாடத்தை மட்டும் கற்பிக்க வேண்டியவரல்ல. தான் அறிந்த வாழ்வை தன்னுடைய இளைய தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டியவர். ஆனால் இன்றைக்கு ஆசிரியர்- மாணவன் உறவு எப்படியிருக்கிறது? எதற்கெடுத்தாலும் அடியும் வசையும். ஆசிரியர்கள் தங்களைப் பெரும் அதிகார பீடங்களாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் ஆசிரியர்கள் பெரும்பாலும் கற்பிக்கத் தெரியாதவர்கள். தங்கள் திறன் குறைவையே அவர்கள் மாணவனை அடித்து நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பத்தாவது, பனிரெண்டாவது படிக்கும் மாணவர்களைப் பார்த்தாலே பரிதாபமாய் இருக்கிறது. புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருப்பதை அப்படியே எழுதாவிட்டால் அடி விழுமென்று ஒரு பத்தாம் வகுப்புத் தம்பி சொல்கிறான். பிறகு எங்கிருந்து சிந்தனை வரும்? நம் குழந்தைகள் எப்போதும் பயந்துகொண்டே இருக்கிறார்கள். மதிப்பெண் மட்டுமே முக்கியமென்று அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. குறையும் மதிப்பெண் ஒவ்வொன்றிற்கும் வாங்கும் அடிகள் அவனைத் தாழ்வு மனப்பான்மையின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. மதிப்பெண்ணைத் தவிர அவனுக்கு வேறென்ன சிந்தனை வரும்? வளரிளம் பருவத்தின் உடல் மாற்றத்தை என்றைக்கு அவனுக்கு நீங்கள் போதித்திருக்கிறீர்கள்? கல்லூரியிலும் இதே நிலைதான் ஆனால் அடிக்க மட்டும் மாட்டார்கள். சில கல்லூரிகளில் அடியும் உண்டு. செமஸ்டர், இன்டெர்னல் மார்க். இதுதான் வாழ்க்கை. ஆணும்,பெண்ணும் அருகில் அமரக்கூடாத ஒழுக்கவியல் விதிகளை வரையறுப்பீர்கள். ஆண் என்பவன் யார்? பெண் என்பவள் யார்? உறவுமுறைகளைக் கையாள்வது எப்படி? தோல்விகளை எதிர்கொள்வது எப்படி? எதையுமே கற்பிக்கமாட்டீர்கள். ரயில் நிலையத்தில் ஒருவன் ஒருவளை வெட்டிவிட்டானா? ஒருத்தி முகத்தில் ஒருத்தன் ஆசிட் வீசிவிட்டானா? கொந்தளிப்பீர்கள். வளர்ப்பு சரியில்லை என்று குற்றஞ்சாட்டுவீர்கள். யார் வளர்க்க வேண்டும்? ஆசிரியர்கள்தானே ஒருவனை உருவாக்கி எடுக்கவேண்டும் .அவன் உங்களோடுதானே அதிக நேரம் செலவிடுகிறான்? அந்த திறன் ஆசிரியர்களுக்கு இருக்கிறதா? ஒருவனை சமூகத்திற்கானவனாக தயார் செய்ய திறனில்லாத நீங்கள் எப்படி அவனைக் குற்றஞ்சாட்ட தகுதியுள்ளவர் ஆகிறீர்கள்?

பெற்றோர்களின் பேராசை என்னை எரிச்சலூட்டுகிறது. உங்கள் குழந்தைகளை வைத்து நீங்கள் ஆடிக்கொண்டிருக்கும் பொருளியல் பகடையாட்டத்திற்கு சூட்டியிருக்கும் 'அக்கறை' என்ற பெயரை உங்கள் மகனோ அல்லது மகளோ புரிந்துகொள்ளாமல் போய்விடுவார்களா? அவர்களும் தந்தை ஆகும்போது புரிந்துகொள்வார்கள் பிறகு உங்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அப்போது ஏன் அதிர்ச்சியடைந்து அலறுகிறீர்கள்? நீங்கள் என்றைக்கு அவர்களுக்கு நேசம், அன்பு என்ன என்று காட்டியிருக்கிறீர்கள்? எத்தனைக் குடும்பங்களில் உங்கள் பிள்ளைகளோடு தினமும் பேசுகிறீர்கள்? எத்தனைப்பேர் உங்கள் பிள்ளைகளை நம்புகிறீர்கள்? மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்.

வாழ்வியல் ஒருவனுக்கு கற்பிக்கப்படவேண்டும் என்பது பள்ளியிலும்,கல்லூரியிலும், பெற்றோரிடமிருந்தும் நிகழாமலேயே போய்விட்டது. இப்போது அவன் கல்லூரியை முடித்து சமூகத்திற்குள் நுழைகிறான். அவனுக்கு வாழ்வென்பதே திகைப்பாக இருக்கிறது. அவன் எதிர்பார்ப்பதுபோல் வாழ்வு அமைவது இல்லை. காரணம் கல்லூரிகளில் வாழ்வியல்தான் கற்பிக்கப்படவில்லை என்று நீங்கள் நினைத்தால் தவறு. அங்கே பாடமே ஒழுங்காய் கற்பிக்கப்படாது. திறனற்ற மாணவர்களை ஆண்டுதோறும் நமது கல்வி நிறுவனங்கள் உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன.

இவ்வளவு சிக்கல்களுக்குப் பிறகும் தானே சிந்திக்கிறவர்களும், தங்களது தொழில்நுட்பத் திறன்களைத் தானே வளர்த்தவர்களும் உருவாகித்தான் வருகிறார்கள். அவர்கள் மிகவும் சொற்பம். எல்லோரும் அப்படி ஆக முடியாது. தானே முயன்று கற்றுக்கொண்டவர்களைத் தவிர மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் மிகக் குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் செய்யவேண்டிய அடிமை வேலைக்குப் போகிறார்கள். நிறுவனங்கள் அடிமைகளை மிகச்சரியாக கொத்தி எடுக்கின்றன. பலமணி நேரம் விடுமுறையின்றி வேலை வாங்குகின்றன. இதிலிருந்து தப்பித்துவிட வேண்டுமென இளைஞர்கள் விரும்புகிறார்கள். தப்பித்து எங்கே போகச்சொல்கிறீர்கள்? அவன் திறன் அவனுக்குத் தெரியும். வேறொரு வேலை கிடைப்பது கடினம். கிடைத்தாலும் இதே நிலைதான். அவனுக்குத் தூங்கவும், உண்ணவும், வேலை செய்யவும்தான் நேரம் இருக்கிறது. உடல் ஆசைகளுக்காக அவன் ஒருநாள் காதல் செய்வான். காதல் தோல்வியடையும். ஏனென்றால் அவனுக்கு காதலிப்பது எப்படியென்றே தெரியாது. காதல் தோல்வியில் தற்கொலை செய்துகொள்வான். ஏனென்றால் தோல்வியைத் தாங்குவது எப்படியென்று அவனுக்குத் தெரியாது. ஒருவேளை திருமணம் செய்துகொண்டால் பிரச்சனைகள் பெருகும். விவாகரத்துகள் அதிகரிக்கும்.ஆணை எப்படிப் புரிந்துகொள்வதென பெண்ணுக்கும், பெண்ணை எப்படிப் புரிந்துகொள்வதென ஆணுக்கும் தெரியாது. அன்பு ஆசிரியர்களே, பெற்றோர்களே உங்களுக்குப் புரிகிறதா நாம் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என?

பணத்தை முதன்மையாக்கிய கல்வியால் உங்கள் குழந்தைகள் தங்கள் வாழ்வை இழந்துகொண்டிருக்கிறார்கள். உங்கள் பண வெறிக்காக, பெருமைக்காக ஒரு பாவமும் செய்யாத உங்கள் குழந்தைகளைப் பலியிடப் போகிறீர்களா?

உங்கள் மனம் துன்பப்படக்கூடாதென்று அவன் எதுவும் வெளிப்படையாய் சொல்லாமல்கூட இருக்கலாம். மகிழ்ச்சியாய் இருப்பதாகக் காட்டிக்கொள்ளலாம். இனியாவது அவனோடு உரையாடுங்கள். உங்கள் பண ஆசையை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு அவனது ஆசைகளைக் கேளுங்கள். முதலில் உங்கள் மகனை, மகளை தனித்துச் செயல்பட விடுங்கள். அவர்கள் இங்கு வெளிவர நீங்கள் ஒரு கருவியாக செயல்பட்டீர்கள் அவ்வளவே. உங்கள் ஆசைகளை நிறைவேற்றப் பிறந்த தேவதூதர்கள் அல்ல அவர்கள். அவர்களுக்கு வழிகாட்டுங்கள் ஆனால் ஆதிக்கம் செலுத்தாதீர்கள். உங்கள் மகன் வயதில்தான் நானும் இருக்கிறேன். உங்கள் மகனின் குரல்தான் இது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உண்மையில் உங்கள் மகனோ அல்லது மகளோ உங்களை நேசிக்கவே இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் உச்சகட்டத்தை அடைய நீங்கள் அனுமதிப்பீர்களேயானால் நம் குடும்ப அமைப்பு அழியும் காலம் வெகுதொலைவில் இல்லை.

முதலாளித்துவத்தை நாம் இன்றைக்கு பெரும்பாலும் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொடுத்துவிட்டபடிக்கு கம்யூனிசத்தின் தோல்வியை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டியிருக்கிறது. பெரு முதலாளிகளின் கோரப் பிடியிலிருந்து இளைஞர்களை சிறிதளவாவது காப்பாற்றும் பொறுப்புதான் இனி இடதுசாரிகளிடம் இருக்கிறது. எட்டு மணி நேரம் மட்டும் வேலை, வேலைப் பாதுகாப்பு போன்ற விஷயங்களுக்காக போராடி மேம்பட்ட முதலாளித்துவத்தை இங்கே கொண்டுவரவேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக இடதுசாரிகளுக்கு இருக்கிறது. இனிவருங்காலங்களில் இடதுசாரிகளின் முக்கியக்கடமையாக இதைத்தான் பார்க்கிறேன்.

இனிவரும் தலைமுறைக்காவது வாழ்வியல் கல்வியைக் கற்பிப்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும். அதுதான் இதற்கான நிரந்தரத் தீர்வு. ஆனால் அரசியல்வாதிகள் சமூகத்தை அறிவார்ந்ததளத்தை நோக்கி முன்னகர அனுமதிப்பார்களா என்பது சந்தேகமே. நண்பர்களே, நாம் இப்படி ஆகிவிட்டோம் ,நமது குழந்தைகளும் இப்படி ஆகிவிடக்கூடாதல்லவா?