டிசம்பர் 04, 2016

இரண்டாம் பூமி

" அடுத்ததாக வான்வெளி சாஸ்திர அறிஞர், வரலாற்றாய்வாளர் என பல்துறை வித்தகராய்த் திகழும், இந்தியனின் பெருமிதம் அதிலும் குறிப்பாக தமிழினின் பெருமிதம் திரு.அசோகவர்த்தன் அவர்களை உரையாற்ற  அழைக்கிறேன்"

அசோகவர்த்தன் தான் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து உடலோடு ஒட்டிய சட்டையை சரிசெய்துவிட்டு தன்னை அறிமுகப்படுத்தியவரைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே ஒலிவாங்கியை நோக்கிப்போனான். தெளிவான குரல் கம்பீரத்துடன் அரங்கின் சுவர்களில் பட்டு எதிரொலித்தது.

" அன்பு நண்பர்களே வணக்கம், முப்பத்தியோராம் நூற்றாண்டை நெருங்கி விட்டோம். செவ்வாயில் நாம் செய்த ஆராய்ச்சிகள் வீணாகிவிட்டன. மனிதன் அங்கே வாழமுடியாதென்கிற உண்மையை உணர்ந்துகொண்டுவிட்டோம். நிலாவில் தங்க நம் முதலாளிகள் வாங்கிவைத்த பட்டாக்களும் வீணாகிவிட்டது. இதோ இந்த பூமிதான் நமக்கு இருக்கிறது. வேறெங்கும் நமக்கு வாய்ப்புகள் இல்லை. அத்தனைக் கதவுகளும் அடைந்துகொண்டே இருக்கிறது. வெப்பம் உயர்ந்து வருவதை, பருவநிலை மாறுவதை நாம் வெறுமனே பார்த்துக்கொண்டே இருக்கிறோம். பூமியும் இல்லாமலானால் நாம் எங்குபோவது தோழர்களே? மனித இனமே இல்லாமலாகும். அதைத்தான் நாம் விரும்புகிறோமோ? வாழும் காலமும் இனி வருங்காலமும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென்றால் பூமியைக் காப்பாற்ற...ஆ..ஆ.."

" அசோக் என்னாச்சு" நிகழ்ச்சி நடத்துனர் ஓடிவந்தார். அசோக் கீழே சரிய ஆரம்பித்தான். கூட்டத்திலிருந்த இளைஞர்களும், இளம் பெண்களும் எழுந்து நின்று என்ன நடக்கிறதென்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். சிலபேர் மேடையை நோக்கி ஓடிவந்தனர். அசோக்கின் பாதுகாவலர்களில் ஒருவன் அசோக்கின் மூக்கருகே கைவைத்து மூச்சில்லையென்று சைகை காட்டினான். அசோக்கின் கடைசி நிமிடங்களை சிலபேர் தங்களது அலைபேசிகளில் பதிந்துகொண்டிருந்தார்கள். அசோக் தனது உடலிலிருந்து வெளியேறும் உருவத்தை மீண்டும் தன்னோடு இணைக்க விரும்பி மேலெழும்பினான். ஒரு பாதுகாவலன் அசோக்கின் இதயத்தில் கைவைத்து அழுத்தினான். விலகிச்செல்லும் அவன் உருவம் மீண்டும் அவனை நெருங்கியது. அசோக் அப்போது அவனுக்கிருந்த முழுபலத்தையும் திரட்டி மேலெழும்பினான். அவனால் முடியவில்லை. அந்த  உருவம் அவனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் விலகிச் செல்ல ஆரம்பித்தது.

ஒரு காகிதத்தாளில் அசோக்கை  வரைந்ததுபோல் இருந்தது அந்த உருவம். உடைகள் இல்லாமல் இருந்த அவ்வுருவத்திற்கு உடலும் இல்லை.வரைந்த கண்களின் மூலமாக பார்த்தலை சாத்தியப்படுத்தியபடிக்கு அந்த நொடியில் அவன் கடவுளுக்கு நன்றி சொன்னான். ஆனால் பெருங்குரலெடுத்து அலற வாயெடுத்தபோது வெறும் காற்று மட்டும் வெளியேறியது அவனை அச்சமூட்டியதோடு, அதிர்ச்சியும் ஆக்கியது. அவன் உருவம் வான்நோக்கி மேலெழும்ப ஆரம்பித்தது.  முழு நிர்வாணமாய் வான்வெளியில் பறந்துகொண்டிருப்பது அசோக்கிற்கு பிடித்திருந்தது. ஆனால் தான் எங்கே போய்கொண்டிருக்கிறோம் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் போகும் வழியில் தன்னைப்போலான நிறைய நிர்வாண ஆண், பெண் காகித உருவங்களைக் கண்டான். அன்றிரவு அவனின் உருவத்திற்கு தீ பற்றி எரியும் உணர்வு ஏற்பட்டது. சுமார் ஒருமணிநேரம் நீண்ட இவ்வுணர்விற்குப் பிறகு அவன் பெரும்புயலொன்றில் சிக்கி ஓரிடத்தில் தூக்கி வீசப்பட்டான்.

அங்கே அவனைப்போலிருந்த உருவங்களை ஒரு உருவம் ஓரிடத்தில் ஒழுங்குபடுத்திவைத்தது. அங்கே மிதந்துவந்த வேறொரு உருவம் வாய் இருந்த இடத்திலிருந்து வெளியேறும் காற்றை வெவ்வேறு கால இடைவெளிகளில் வாயை மூடியும்,திறந்தும் விதவிதமாய் வெளிப்படுத்தியது. அது என்ன செய்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை. வேறுவழியின்றி அந்த உருவத்தின் திறந்து மூடும்வாயை அவன் கவனிக்க ஆரம்பித்தான்.

" தமிழர்க்கு ......பூமி...வணக்கம். நானு.. தமிழ்க்குடி......நாடில்லை....பணமில்லை ...இங்கு காமமில்லை......மொழி..."

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த உருவத்தின் வாயசைப்பை தொடர்ந்து பலநாட்கள் கவனிக்க ஆரம்பித்த அவன் கால ஓட்டத்தில் தான் வந்திருப்பது இரண்டாம் பூமி என்றும் இங்கே நாடுகள் இல்லை என்பதால் அனைவர்க்கும் பொதுமொழியாக தமகதெஇ என்ற மொழி வாயசைப்பில் கற்பிக்கப்படுவதையும் அறிந்துகொண்டான். காகித உடலை வைத்து விரும்பும் இடங்களுக்கு மிதந்துசெல்லும் பயிற்சிகள் அவனுக்கு அங்கு அளிக்கப்பட்டன.உடலற்ற நிலையிலும் இக்காலகட்டத்தில் பசி, காமம் போன்ற உணர்வுநிலைகளுக்கு அவன்ஆற்பட்டான். அதை நிறைவேற்றக்கூடிய சூழல் காகித உருவத்திற்கு இல்லை என்பதால் அவன் அந்த உணர்வால் தகித்தான். அதேபோல் தனக்கு நாளாக நாளாக வயது குறைவதுபோலவும் அவனுக்குத் தோன்றியது. வெகுநாட்களுக்குப் பிறகு அவன் ஒரு குழந்தை உருவத்திடம் அழைத்துச் செல்லப்பட்டான்.

( காகித உருவங்கள் தமகதெஇ மொழியில் பேசிக்கொண்டவை அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)

" அசோக் எப்படியிருக்கிறாய்? நீ உன் மொழியை முழுமையாக மறந்துவிட்டாய் என்று நினைக்கிறேன். இப்போது நீ தமகதெஇ குடிக்கு உரியவனாகிவிட்டாய். இங்கே பயிற்சியாளர்கள் தவிர யாருக்கும் முதலாம் பூமியின் மொழி தெரியாது. நீ மொழியை மட்டுமே இழந்திருக்கிறாய் அறிவை அல்ல என்பதை  புரிந்துகொண்டிருப்பாய் என நினைக்கிறேன். இரண்டாம் பூமியில் உனது வயது நீ இங்கு வரும் வயதிலிருந்து கீழ்நோக்கி இறங்கத் துவங்கும். நீ நினைப்பதுபோல் நான் குழந்தையல்ல. நான் ஒருவயதுள்ள முதியவன். அடுத்த ஆண்டு இறந்துவிடுவேன். அத்தோடு முதலாம்,இரண்டாம் பூமியை நிறைவுசெய்யும் என் மனித வாழ்வின் ஒரு சுழற்சி  முடிவடையும். இது முடிவிலாத சுழற்சி. இரண்டாம் பூமியில் நான் இறப்பதுவரை முதலாம் பூமி குறித்தான என் நினைவுகள் என்னோடே இருக்கும். நான் அடுத்த சுழற்சியில் முதலாம் பூமியில் குழந்தையானதும் என் நினைவுகள் முழுமையாய் அழிந்துவிடும். அதேபோல் நாம் உடலற்றவர்கள் ஆனால் மனமுள்ளவர்கள். எனவே காமம், பசி போன்ற உணர்வுகள் உனக்கேற்பட்டு உன்னைத் தொல்லை செய்யும். அதை நீ நிறைவேற்ற முடியாது. அந்த இன்னலை நீ அனுபவித்துதான் ஆகவேண்டும். நீ சுழிய வயதடைகிறவரை இறக்கமாட்டாய். உன்னை நீ அழித்துக்கொள்ளவும் முடியாது. இப்போது நீ தமகதெஇ மக்கள் திரளில் இணையலாம்" பிறகு வேறொரு குழந்தை உருவம் அவனை ஒரு பகுதிக்கு மிதந்து அழைத்துச்சென்றது. அங்கே பெரும்சுழல்காற்றுக்குள் அவனை மிதந்து செல்லச் சொன்னது. அவனும் அவ்வாறே செய்தான்.

அவன் அந்த வான்வெளியின் ஒருபகுதிக்கு தூக்கி எறியப்பட்டான். அங்கே அவனைப்போல் பல்லாயிரக்கணக்கான நிர்வாணக் காகிதங்களைக் கண்டான். முதலாம் பூமியில் அவன் காதலித்த பழைய நடிகைகளின் நிர்வாணத்தை தேடி ரசிக்க ஆரம்பித்தான். ஆனால் நிறைவேற்ற இயலா காமத்தால் அவன் மனம் மீண்டும் தகிக்க ஆரம்பித்தது. காகித மனிதனிடமிருந்து விலகியிருப்பதே தவிப்பை குறைக்குமென்றெண்ணி அவன் அவர்களை விட்டு விலகினான். ஆனால் அவனது சுயநிர்வாணம் அவனை இன்னுமதிகம் அச்சுறுத்தியது. அவன் மனம் கனலானது. கொல்லாத பசி அவன் மனதை சோர்வாக்கியது.

அவ்வாறாக இரண்டாம் பூமியின் வாதைகளை அவன் தாங்கிக்கொண்டிருக்கும் நாளொன்றில் அவன் பதின்ம வயதுகளில் காதலித்த பெண்ணை நிர்வாணமாய்க் கண்டான். எத்தனை நாட்கள் இதைக் கற்பனை செய்து சுயமாய் மகிழ்ந்திருக்கிறோம் என்றவன் மனம் நினைத்தது. இப்போது கண்முன்னால் அவள் இருக்கிறாள், அதுவும் நிர்வாணமாய்.எரியும் மனத்தோடு உடலற்ற அவனை அவனே வெறுத்தான்.

" சம்யுக்தா எப்படி இருக்கிறாய்? நினைவிருக்கிறதா என்னை. எத்தனைக் காலங்களாயிற்று உன்னைப் பார்த்து"

" அசோக் நீயா? ஆச்சரியமாய் இருக்கிறது. முதலாம் பூமியில் நீ இறந்துவிட்டாயா. உன்னைப்பற்றி நான் அவ்வப்போது கேள்விப்படுவேன்.நீ பெரிய அறிவியலாளன் ஆனது அறிந்து மகிழ்ந்தேன். எனக்கு எட்டாத உயரத்தில் நீ போய்விட்டதாய் நினைத்தேன். ஆனால் இப்போது நீ இவ்வளவு கிட்டத்தில்"

" எவ்வளவு அருமையானவை அந்தப் பள்ளி நாட்கள் சம்யுக்தா. என் காதலை நீ மறுத்த நாட்கள். ஆனாலும் விடாப்பிடியாய் நான் காதலித்த நாட்கள். எப்படி இறந்தாய் நீ என் உயிரே"

" ஒரு விபத்தில். என் கணவனின் தவறால். அவரைக் கட்டி அணைந்திருந்த நான் தூக்கிவீசப்பட்டேன். "

" அவர்?"

" தெரியவில்லை. நான் அவரை இங்கு பார்க்கவில்லை"

பிறகு அவர்கள் இனி பேசுவதெற்கென்னவென்று யோசித்து பரஸ்பரம் இன்னொருவர் உடலைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

" இங்கே காதலெல்லாம் இருக்கிறதா சம்யுக்தா"

" இல்லாமலென்ன. உண்மையில் இங்கு மட்டும்தான் காதல் இருக்கிறது. தாங்கொணா தனிமையில் ஒருவனை ஒருவளோ, ஒருவளை ஒருவனோ வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிற காதல், பேசிக்கொண்டிக்கிற காதல். முதலாம் பூமியில் நம் கவிஞர்கள் எழுதிவைத்த புனிதக்காதலெல்லாம் இங்குதான் இருக்கிறது. நிர்வாணமாக இருந்தால்கூடப் புனிதமாய் இருக்கிறது"

" என்ன புனிதம்? உடல் இல்லாததால் இப்படி இருக்கிறது. என் மனம் கிடந்து தகிக்கிறது. இதற்கு ஏதாவது வழி சொல்."

" என்னோடு மிதந்துவா. உனக்கொரு வழி சொல்கிறேன்"
அலையாய் மிதக்கும் அவள் பின்னழகை ரசித்துக்கொண்டே அவன் அவளைப் பின்தொடர்ந்து மிதந்தான்.
வெகுநேரம் மிதந்து ஓரிடம் அடைந்தார்கள். அங்கே பத்துவயது மதிக்கத்தக்க குழந்தையொன்று பேசிக்கொண்டிருந்தது.

" இதையேதான் நான் முதலாம் பூமியிலும் சொன்னேன். நீங்கள் கேட்கவில்லை. இப்போது இரண்டாம் பூமியிலும் வாதையில் அகப்பட்டுக்கொண்டீர்கள். மனமற்றுப்போங்கள் மானிடர்களே. நான் மனமற்றுப்போனேன். பரவசமாய் இருக்கிறது. எனக்கு காமமில்லை. பசியில்லை. எவ்வித உணர்வுமில்லை. வெறுமனே இருத்தல் அதுவே நம் வாழ்வு. அந்த இருத்தலை மட்டும் மனமற்றுச் செய்யுங்கள்"

கூட்டத்திலிருந்த ஒரு காகித உருவம் " மனமற்ற இருத்தலை எப்படி அடைவது சுவாமி?" என்றான்.

" முதலாம் பூமியிலும் நீ இதே கேள்வியை எழுப்பியவன்தானே. கேட்டுக்கொண்டே இருக்காதே. கேட்பதை செய். யாருமற்ற தனிமையில் போய் உட்கார்ந்து இந்த பரந்த வெளியை வெறுமனே பார்த்துக்கொண்டே இரு. அதனூடே ஏதேனும் ஒருபொருளைமட்டும் சிந்தி. ஒரு இலையை, ஒரு மலரை, ஒரு தெய்வ உருவை. ஒருநாள் அதுவும் அழிந்து அந்த மனமற்ற பரவசத்தை அடைவாய். இல்லையேல் பசியால், தாகத்தால், காமத்தால் இரண்டாம் பூமியின் பெரும்பான்மை மனிதன்போல் பைத்தியமாவாய். வெறுமனே இரு அதைத் தவிர உனக்கு வேறு வழிகள் இல்லை."

இதேநேரத்தில் பரந்த வான்வெளியின் வேறொரு பகுதியில் சுமார் அறுபது வயதுள்ள முதலாம் பூமியின் சர்வாதிகாரிகள் சிலபேர் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

" வெறுப்பாய் இருக்கிறது ராஜ்யநேசா, இங்கே வந்து எத்தனை ஆண்டுகள் ஆயிற்று. இன்னமும் முதுமையில் இருக்கிறோம். நான் எப்படி வாழ்ந்தவன்? ரத்தம் பார்த்து எவ்வளவு நாளாயிற்று? சிறுபயலுகள் எல்லாம் என்னை இன்று பெயர்சொல்லி அழைக்கிறார்கள். மனம் பற்றி எரிகிறது. இவர்களை கொன்று ரசிக்காவிட்டால் என் மனம் ஆறாது"

" ஆம் சுதேசமித்ரா. என்ன மயிரு சமத்துவம். நானும் இந்த அடிமைநாய்களும் ஒன்றா. நமக்கு அதிகாரம் மீண்டும் வேண்டும். அதிகாரம்பெற வேண்டுமென்றால் இவன்களுக்கு உடல்வர வைக்கவேண்டும்.உணர்வுகளுக்கு உருவம்கொடுத்து இவன்களுக்குள் பகையுண்டாக்கி அரசமைத்து இந்த அடிமை நாய்களை ஆளவேண்டும். மனமெங்கும் வெறியேறுகிறது தோழா. அந்த வீணாய்ப்போன விஞ்ஞானி கெப்தாமி செயற்கை உடலுண்டாக்கும் வித்தையை எப்போதுதான் உருவாக்குவான்."

" கெப்தாமியை நம்பியதே தவறு. ஆனால் அவனைவிட்டாலும் வேறு வழியில்லை. இன்னும் சில வருடத்தில் அவன் இறந்துவிட்டால் என்ன செய்வோம். நாம் இன்னும் இளமையையே அடையவில்லையே ? எத்தனைநாள் இந்த வாதை?"

பத்துவயதுக் குழந்தையாய் சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் விஞ்ஞானி கெப்தாமி அவர்களை நோக்கி மிதந்து வந்துகொண்டிருந்தார்.

" பலதேச முதல்வர்களே, அமைச்சர்களே, அதிபர்களே உமக்கு என் வணக்கம். நான் நெருங்கிவிட்டேன் வெற்றியை"

" சாவை நெருங்கிவிட்டு பிதற்றாதீர்கள் கிழவா"

" போதும் தாமஸ் ஆண்டர்சன் உன் கிண்டலை நிறுத்து. செயற்கை தசையுண்டாக்குவதின் இறுதிகட்டப் பணிகளில் இருக்கிறேன். மழை உண்டாக்கும் மேகங்களில் தசை உண்டாக்கும் சக்தியுள்ள நீர் உண்டு.இந்த மேகநீரில் காகிதங்களை மிதக்கவிட்டு இங்கே மனித உடலை உருவாக்குவேன். ஹா ஹா. பிறகு அரசாங்கம், பணம், நம் உலகு இது, பெரு முதலாளிகள் நாம்.இனி வரும் ஆண்டுகளாவது நான் வாழவேண்டும். பெண் உடல், காமம். ஹா ஹா இனி கொண்டாட்டம்தான்"

" நீ பகல்கனவு கண்டு எங்களுக்கும் ஆசை ஏற்படுத்தாதே கிழவா"

" உண்மைத் தோழர்களே உண்மை. ஆனால் அதற்கென்று ஒருநாள் உண்டு. மழை பொழிய மேகம் தயாராக இருக்கும் நாளில் நாம் மழைக்கு தலைமை தாங்கும் மேகத்தில் நுழைந்து மிதந்தால் சிறுதசை உண்டாகும். நாம் முழு உடல்பெற பலநாளாகும். மாதங்கள் ஆகும். ஏன் வருடங்கள்கூட ஆகலாம். ஆனால் நடக்கும். பொறுத்தார் பூமியாள்வார்"

" முழு உடல்கூட தேவையில்லை. இனப்பெருக்க உறுப்புகளை அனைவருக்கும் தோன்றச் செய்தாலே போட்டி, பொறாமை ஏற்படுத்தி நாம் அரசமைக்கமுடியும். அதுவே போதுமானது. "

"இல்லை நேசரே, முழு உடலில்லாமல்  மனதுக்கு இன்பமில்லை.ஒரு குழந்தையின் வளர்ச்சி நிலையைப் போன்றே நமக்கு படிப்படியாக உறுப்பு தோன்றும். நாம் விரும்பும் உறுப்பைப் பெறமுடியாது. மழை மேகம் உருவாகும் நாட்களையும், திசையையும் கணக்கிட்டு வருகிறேன். விரைவில் அந்தக் கணித முடிச்சை எனது சகாக்களோடு சேர்ந்து முடிப்பேன். பிறகு இது நமது ராஜ்ஜியம். "
கெப்தாமி தான் வந்த வழியே மிதக்க ஆரம்பித்தார். காலமறியாப் பெருவெளியில் அசோகவர்த்தன் சில நாட்களை நடிகைகளின் உடல் காணும் படலத்திலும், சில நாட்களை சுவாமியிடமும், சில நாட்களை சம்யுக்தா உடனும், சில நாட்களை வெறுமையில் மனமற்றுப்போதலை முயற்சிக்கவும் செலவழித்தான்.  தொடர் முயற்சிகளுக்கு பின்னால் ஒருநாள் மனமற்றுப்போகும் பயிற்சிகளைக் கைவிட்டான். சுவாமி உண்மையிலேயே மனமற்றுப் போய்விட்டாரா என்று அவனுக்கு சந்தேகமாய் இருந்தது. ஆனால் சமத்துவக்குடியின் வெறுப்பை சம்பாதித்துக்கொள்ள விரும்பாததால் அது பற்றிய கேள்விகளை பொதுவெளியில் வைக்கும் தன் முடிவை அவன் கைவிட்டான்.அவ்வாறாக நாட்கள் சென்றுகொண்டிருக்கையில் ஒருநாள் ஒரு இருபது வயதுள்ள கிழவன் அசோகவர்த்தனைத் தேடி வந்தான்.

" அசோக் உன்னை மாணிக்கவாசகன் அழைத்துவரச்சொன்னார்"

" மக்களுக்காக போராடி உண்ணாவிரதமிருந்து தன்னுயிரை ஈத்த மகானா, அவரை இங்கே காண நான் பாக்கியம் செய்திருக்கவேண்டும். வா போவோம்"

அவ்வுருவம் மிதந்து சென்ற பாதையில் அசோகும் மிதக்க ஆரம்பித்தான். மாணிக்கவாசகனை வணங்க கைகளற்ற தனது தன்மை அவனை வெட்கங்கொள்ளச்செய்தது.

" அசோக் நீ இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற அறிஞன். உனக்காகத்தான் இந்த இரண்டாம் பூமி இவ்வளவுநாள் காத்திருந்தது. அதிகாரத்தின் வேர்கள் முளைவிட ஆரம்பித்துவிட்டது. நீ அதை அறிந்தாயா என்று தெரியவில்லை கெப்தாமிக்கு முகம் வந்துவிட்டது. அவர்கள் மகிழ்ச்சிக்களிப்பில் இருக்கிறார்கள். இங்கே சமத்துவம் அழியப்போகிறது. இதுவும் இன்னொரு பூமியாகப்போகிறது. இதை நீதான் காப்பாற்ற வேண்டும். உண்மையில் அதிகாரம்தான் வாதை அசோக். இதைவிடப் பலமடங்கு துன்பம். வெறுமனே இருத்தல் எவ்வளவு இன்பம்.சுவாமி சொல்வதைப் பின்பற்றி மனமற்றும் போய்விட்டால் இன்பந்தவிர இங்கு வேறொன்றுமில்லை"

" நான் அதற்கு என்ன செய்யமுடியும் ஐயா?"

" இந்தப் பெருவெளியின் ஒருபகுதியில் காலச்சக்கரம் ஒன்று இருப்பதை நம் சுவாமி கண்டறிந்திருக்கிறார்.அதனை முன்னோக்கி பத்து ஆண்டு திருப்பினால் கெப்தாமியின் வாழ்வியல் சுழற்சி நின்றுவிடும். அவன் சிந்தனைகளை இழந்து முதலாம் பூமியில் புதிதாய்ப் பிறப்பான்."

" அதை நீங்களே செய்யலாமே"

"அது முடியாது அசோக்.காலசக்கரத்தைத் திறக்க முதலாம் பூமி மற்றும் இரண்டாம் பூமி சார்ந்து காலசக்கரம் கேட்கும் ஆறுகேள்விகளுக்கு சரியாய் பதில் சொல்லவேண்டும். அது உன்னைப்போன்ற பெரும் அறிவாற்றல் உடைய ஒருவனாலே முடியும்.

" அதற்கென்ன ஐயா செய்துவிடலாம்"

" நான் முன்னரே ஒருமுறை உனக்கு இணையாக அறிவில் வைக்கதக்க உன் குரு பாபு சந்திராவை அங்கு அனுப்பினேன். ஆனால் ஒரு கேள்விக்கு தவறான பதில் சொன்னதால் அவர் மிதக்கும் சக்தி இழந்து அங்கேயே இறவாமல் , சுழற்சியற்றிருக்கும் சாபத்தை அடைந்துவிட்டார். அந்த சிக்கலில் நீயும் மாட்டிக்கொண்டால் இங்கு நடப்பதை எவனும் நிறுத்த இயலாது.நீண்டகாலத்திற்கு பிறகு தோன்றிய பெரும் அறிஞன் நீ. இனி உன்னைப்போல் ஒருவன் எப்போது வருவானென்று சொல்லமுடியாது. அவர்கள் வெல்லும் காலம் வெகு அருகில் வந்துவிட்டது"

" முடிவிலா சுழற்சியில் திரும்பத் திரும்பப் பிறத்தலும் கொடுமைதான் இல்லையா? நான் மதிக்கும் ஒரு தலைவனுக்காக இதைச் செய்வேன். சமத்துவத்தின் வேர்களை இங்கு இறுகப் பற்ற வைப்பேன். இது உறுதி"

" வெற்றி உனதே வர்த்தா. ஆனால் ஒன்றை நினைவில்கொள். அந்த சக்கரத்தை உன் முடிவிலா வாழ்வியல் சுழற்சியில் ஒரே ஒருமுறை மட்டுமே பயன்படுத்த இயலும். "

" ஒரு சந்தேகம் ஐயா"

" கேள்"

" இந்த காலசக்கரத்தை பின்னோக்கித் திருப்பி அதிகார வர்க்கத்தினர் முதலாம் பூமியை அடையலாமே"

" நீ இரண்டாம் பூமியில் மாற்றும் காலம் முதலாம் பூமியில் எதிரொலிக்காது. காலத்தை பின்னோக்கி நகர்த்தி அதிகாரவர்க்கம் முதலாம் பூமி அடைந்தால் நிகழ்கால முதலாம்பூமி அதிகார வர்க்கம் இவர்களை அழித்து மறுபடியும் இங்கே அனுப்பிவிடும். அதனால்தான் அவர்கள் அதைச் செய்வதில்லை. அதுவுமில்லாமல் அவர்களிடம் காலசக்கரத்தை வெல்லும் அளவிற்கு ஆளும் இல்லை. உன்போன்ற இளைஞர்களை அவர்கள் அறியவும்மாட்டார்கள்"

காலச்சக்கரத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க மாணிக்கவாசகனும், சுவாமியும் அசோகவர்த்தனை அழைத்துசென்றார்கள்.

" இதற்குமேல் நாங்கள் வர இயலாது அசோகா. இந்த சுழலுக்குள் மிதந்துபோ. காலசக்கரத்தை அடைவாய்" என்றார் சுவாமி.
அசோக் மன உறுதியோடு சுழலினுள் மிதந்து காலசக்கரத்தை அடைந்தான்.
" இளைஞனாய் முதலாம் பூமியில் மரித்த நீதான் காலசக்கரத்திற்கு சவால் விடுகிறவனா? வேண்டாம் குழந்தையே" என்றது காலசக்கரத்தின் அசரீரி.

" சவால். உன்னை நான் வெல்வேன். கேள் உன் கேள்வியை" என்றான் அசோகவர்த்தன்.

" விதி வலியது மனிதா. இதோ உனக்கான முதல் கேள்வி. மனமற்றுப்போதலை எப்படிச் செய்வது?"

" மனமற்றுப்போதல் என்று ஒன்றில்லை. மனமற்றுப்போய்விட்டதாய் எண்ணிக்கொள்வதே மனத்தால்தான்"

கால சக்கரத்தின் முதல் கதவு திறந்தது.
" இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. உன் குருவும் இதேபோல் நான்கு பதில்களைச் சொல்லித்தான் இறவா சாபம் வாங்கிக் கிடக்கிறான். இரண்டாவது கேள்வி. முதலாம், இரண்டாம் புவியில் மகிழ்வான மனிதன் யார்?"

" எவன் எதுவொன்றையும் அறியவில்லையோ அவனே மகிழ்ச்சியானவன். அறிதலே துன்பத்திற்குக் காரணம்"

உருவான பெருஞ்சுழலில் சிக்கி மூன்றாம் சுற்றடைந்தான் அசோகவர்த்தன்.

" அருமை அருமை.அடுத்த கேள்வியைக் கேட்கிறேன். 2060ல் முதலாம் பூமியில் ஆசிய நாடுகளுக்குள் மூண்ட போரில் வென்றது யார்?  தோற்றது யார்?"

" வரலாறை எழுதியவனின் நாடுகள் வென்றது. மனிதம் தோற்றது"

நான்காம் சுற்று திறந்தது.

" புனைவு நல்லதுதானே தம்பி. சுவாரசியமாய் இருக்கும்.ஒரே கதையை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் புனைந்திருப்பார்களே. நான்காவது கேள்வியை கேட்பதற்குமுன் உனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தருகிறேன். இறவா சாபம் பெற்று மிதக்க இயலாமல் இருக்கும் உன் குருவை இப்போது நீ அழைத்துச்செல்லலாம். காலசக்கரம் உங்கள் இருவரையும் மன்னிக்கும். அடுத்த கேள்விக்கு தவறான பதில் சொன்னால் நீயும் அந்நிலை அடைவாய்"

" ஒரு மனிதனைவிட பல மனிதர்கள் எனக்கு முக்கியம். அடுத்த கேள்வி கேள்"

"சரி. கேட்கிறேன்.கேள்விகள் இவ்வளவு எளிதாக இருந்தும் எவனும் காலசக்கரம் நோக்கி வராதது ஏன்?"

" எளிமையான எதுவொன்றிற்குப் பின்னாலும் ஒரு பிம்பம் கட்டமைக்கப்படும். பெரும்பாலும் பயமுறுத்தும் பொய்யும் புரட்டும் காலம்காலமாய் அதைக் காப்பாற்றும்"

" மிகச் சரி, மிகச்சரி. தேடியவன் கண்டடைவான். நீ கண்டடைந்துவிட்டாய்.நீ வாதையை வென்றுவிட்டாய் அசோகவர்த்தா.எவன் இதை மன உறுதியோடு தேடி வருகிறானோ அவனே வாதையைக் கடந்து வாழ்வைக் காண்பான். காலசக்கரம் உனக்குத் தருவது ஆறு கேள்விகளல்ல நான்கே கேள்விகள். அதற்கு நீ உன் முதலாம் பூமி, இரண்டாம் பூமி அனுபவங்களினால் திருப்தி தரும் பதிலளித்துவிட்டாய். அறிதல் இன்பமென்பதை இனி நீ உணர்வாய். இனி உனக்கு பிறப்புமில்லை. இறப்புமில்லை. நீ விரும்பினால் சிறிதுநாள் இறக்கலாம் பின்பு மீண்டும் பிறக்கலாம். இனி மகிழ்ந்திருக்கலாம் எப்போதும். அதிகாரங்களற்ற ,உடலுள்ள பூமிக்கு உன்னை அன்போடு அழைக்கிறேன்."

பெரும்புயல்காற்றில் சிக்கி அவன் எங்கெங்கோ தூக்கி எறியப்பட்டான். கடைசியாய் அவன் சென்றடைந்த இடத்தில் மகிழ்ச்சியாய் சிரித்துக்கொண்டிருக்கும் அவனது குருவை அசோகவர்த்தன் கண்டான். அவனுக்கு கண்களும், காதுகளும், மூக்கும், வாயும், நாக்கும், மெய்யும் தோன்றின.

" மூன்றாம் பூமிக்கு உன்னை வரவேற்கிறேன் அசோகா" என்றார் பாபு சந்திரா.

அழகிய பெண்களும்,ஆண்களும்,விலங்குகளும், பறவைகளும், இயற்கைஎழில் கொஞ்சும் சோலைகளும் உடைய அந்த மூன்றாம்பூமியை அசோகவர்த்தன் கண்கள் விரிய வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.இந்த பூமிக்கு சம்யுக்தாவைக் கொண்டுவருவது எப்படியென்றும் யோசிக்க ஆரம்பித்தான்.