டிசம்பர் 06, 2016

அஞ்சலி: ஜெயலலிதா

மிகவும் கடுமையானவர்கள் என்று  சொல்லப்படுகின்ற சில பெண்களை நெருங்கி அறிகிறபொழுது பெரும்பாலும் அன்பிற்காக ஏங்குகிறவர்களாக ,அவர்கள்மேல் ஏற்றிவைக்கப்பட்டிருக்கிற பிம்பங்களுக்கு நேர் எதிரானவர்களாக இருப்பார்கள். ஜெயலலிதா பல்வேறு சூழல்களில் அவரது வார்த்தைகளில் அவரைப் பற்றி வெளிப்படுத்தி இருப்பதிலிருந்தே அவரும் அவ்வாறான ஒரு பெண் என நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இரண்டு வயதில் தந்தையை இழந்தபிறகு, நடிகையான தாயைப் பற்றி சக பள்ளி நண்பர்கள் கிண்டல் செய்கிறபொழுது, பரிகாசிக்கிறபொழுது,  எழுந்து வரும் தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிய வேறொரு விதத்தில் அவரை முன்னிறுத்த வேண்டிய தேவை அவருக்கு ஏற்படுகிறது. நன்றாகப் படிக்கிற பெண்ணாக அவர் தன்னை உருவாக்கியெடுத்து தன் நண்பர்களின் வாயை அடைக்கிறார். மாநிலத்தில் முதலிடம் பெறுகிறார். அது தாழ்வு மனப்பான்மையை தோற்கடிக்கும் வெறி. வாழ்நாள் முழுக்கவே இவ்வாறாக பலபேரின் வாயை அடைக்கவேண்டித்தான் அவர் ஒரு சர்வாதிகார பிம்பமாக தன்னை உருமாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இருந்தது.

இருபதுகளில் தாயை இழந்துவிட்ட முதிராத அவரது மனம் அன்பிற்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது. அப்போது அவர்மீது செலுத்தப்பட்ட ஆண் ஆதிக்கத்தை அவர் விரும்பியே ஏற்றுக்கொள்கிறார். அவர் பெரும் இலட்சியங்கள் உடைய பெண்ணல்ல, அவர் எல்லா மனிதர்களையும்போலவே அன்பை,காதலை விரும்பியவர். அன்பிற்கும், காதலுக்காகவும் ஏங்கி அதற்கு தன்னை ஒப்புக்கொடுத்தவர். சிலபேரின் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டவர். தமிழக அரசியல் இன்றைக்கு  ஏற்படுத்தியிருக்கிற வாழ்வாதாரத்திற்கான தீர்வுகளை முன்வைத்து யோசிக்கிறபொழுது அவர் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட நிகழ்வென்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது.

முதிராத பெண்ணாக இருந்தபொழுது அரசியலில் பெரும் வாய்ப்புகள் வழங்கப்பட்ட அவர் சாதாரணப் பெண்கள்போல நகை, பணம் என்று பொருளாதாரத்திற்கான வாய்ப்பாக அரசியலைப் பயன்படுத்தினார். ஆனால் பின்னாளில் அதற்காக வருந்தியிருப்பார் என நிச்சயமாய்ச் சொல்லலாம். ஒரு பெண்ணாக பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழலில் ,அரசியலில் அவர் அடைந்திருக்கிற இடத்திற்கு நிச்சயமாக மாற்று இல்லை .ஒரு கட்சியை நிர்வகித்து நடத்தியிருக்கிற அவர் திறனென்பது மிகப்பெரிய பாராட்டுகளுக்குரியது. அதனை ஒற்றைத்தலைமையாக மாற்றிய இடத்தில் அவர் வெற்றிபெற்றிருந்தாலும் நீண்டகால தமிழக அரசியலில் அதிமுக இல்லாமல் போவதற்கான சாத்தியக்கூறுகளில் ஒன்றாக அது மாறிவிட்ட இடத்தில் அவர் தோற்றுவிட்டார்.

அவர் தன்னை சுற்றியிருந்தவர்களிடத்தில் சர்வாதிகாரியாக காட்டிக்கொண்ட பொருட்டு இன்றைக்கு அவரது மறைவில் மிகச்சிறு உணர்ச்சியைக்கூட சக அரசியல்வாதிகளிடம் காணமுடியாத வகைக்கு அவர் தோற்றுவிட்டாலும், உண்மையான அரசியல் விளையாட்டுகள் தெரியாத மிகச் சாதாரண பெரும் ஜனத்திரளிடம் அவர் வென்றிருக்கிறார். ஆனால் ஒருவரின் மறைவென்பது மனிதனின் இயல்புகள்படி மறைந்தவரை புனிதராக்குவதாக அமைந்துவிடுவது தவிர்க்கமுடியாததாக இச்சூழலில் மாறிவிட்டது தவறானது. அவர்களின் உண்மையான இயல்புகள்தான் வரலாற்றில் பேசப்படவேண்டும். பிம்ப உருவாக்க அரசியலுக்கு எதிராகவும் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக ஜெயலலிதாவின் வாழ்வை மிக ஆழமாக உற்றுநோக்குகிறபொழுது அது பரிதாபத்திற்குரியது என்பதை மறுக்கமுடியவில்லை. அவர் விரும்பியதை கடைசிவரை அடையாமல் ,கிடைத்தவைகளை ஏற்றுக்கொண்டு அதில் வென்றவர். அவர் இப்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக ஏதாவதொரு உலகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பார் என நம்புவோமாக. தமிழகத்தின் 'அம்மா' வாக வாழ்ந்த அந்த ஆளுமைக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்.