டிசம்பர் 09, 2016

எழுத்தெனப்படுவது

கல்லூரியின் ஆண்டுவிழாவில் ஒரு பாடலுக்கு ஆடிய ஒருவன் தன்னை ' டேன்சர்' என்று அறிமுகப்படுத்திக் கொள்ளமுடியும். ஒரே ஒரு குறும்படம் எடுத்தவன் தன்னை 'டைரக்டர்' என்று சொல்லிக்கொள்ள முடியும். அவை ஆச்சரியத்தோடு வாய்பிளந்து கேட்டுக்கொள்ளப்படும். இன்னொரு நண்பனுக்கு அறிமுகமாகும்பொழுது அவர்கள் டேன்சராக, டைரக்டராக அறிமுகம் ஆவார்கள். ஆனால் ஒருபோதும் எவனும் எழுதுகிறவன் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது. அப்படி அடையாளப்படுத்திக்கொண்டாலும் இழிவாகத்தான் நம்மைப் பார்ப்பார்கள். இரண்டாயிரத்து பதிமூன்றில் தமிழில் ஓரிரு வார்த்தைகள் எழுத ஆரம்பித்ததில் இருந்து இன்றைக்கு சிற்றிதழ், இணைய இதழ்களில் கதை எழுதுவது,வலைப்பூவில் மிக முக்கியமான பத்திகள் எழுதுவதுவரை விமர்சனங்கள்தான் கிடைத்திருக்கின்றன. எழுதுவதை என்னவென்றே அறியாத பொதுச் சமூகத்தில், நண்பர்களிடத்தில் 'தமிழ்ப்புலவர், தமிழய்யா' போன்ற அடைமொழிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறு பையனின் நிலையை எண்ணிப்பாருங்கள். இங்கே நான் எழுதுவதை என்னவென்றே தெரியாமல் பரிகசித்துக்கொண்டிருக்கும் நண்பர்களைப் பார்த்தால் உண்மையிலேயே பரிதாபமாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலைத் தாண்டித்தான் எழுத வேண்டியிருக்கிறது.

டேன்சரும், சிங்கரும், டைரக்டரும் தங்கள் வாழ்விற்கான துறைகளாக,  பொருளாதார தேவைக்கான துறைகளாக அவர்களின் கலை வடிவங்களையே வைத்துக்கொள்ள முடியும். எழுத்தெனும் கலையை வாழ்வியலுக்கானதாக ஆக்கிக்கொள்ள முடியாது, அதற்கான வாய்ப்புகள் இங்கில்லை. எழுதும் ஆர்வமுள்ள ஒருவன் தனக்கொரு வேலை தேடிக்கொண்டு அதில் பலமணிநேரம் உழைத்துவிட்டு பின்னர் வந்துதான் அவன் எண்ணங்களை எழுத முடியும். எழுத்தின் மூலம் பெரும் புகழ், பணம் எதுவும் கிடைக்காது.

பிறகு ஏன்தான் எழுத வேண்டும்? யாருமே படிக்காத சிறுகதைகளை, கவிதையை, பத்தியை ஏன் வெளியிட வேண்டும்? இரண்டே பதில்கள்தான் இதற்கு உண்டு. ஒன்று மனத்திருப்திக்காக. பெருகும் வெறுமையை அகற்ற நிறைவை மனதில் இட்டு நிரப்பும் செயல்பாடு எழுத்து. பல நாட்களுக்குப் முன்பு நான் எழுதியதை நானே படித்துப் பார்ப்பேன். அப்பொழுது இதை நாம்தான் எழுதினோமா என்று ஆச்சரியமாய் இருக்கும். அப்பொழுது ஏற்படும் மனத்தன்னிறைவு என்பது விவரிக்க இயலாதது.

பலநாட்களுக்குப் பிறகு டைரியை புரட்டிப்பார்க்கும்பொழுது கலவையான எண்ணங்கள் நம்மை வந்து ஆனந்தத்தில், கண்ணீரில் ஆழ்த்துமே அப்படிப்பட்ட உணர்வு அது. என் வலைப்பூவை நான் எல்லோருக்கும் படிக்கக்கொடுத்த என்னுடைய டைரியாகத்தான் நினைக்கிறேன். நாற்பது வருடங்களுக்குப் பிறகு நான் இருபது வயதில் எழுதியதை எடுத்துப் பார்க்கும்பொழுது எப்படியான உணர்வுகள் ஏற்படும் என்று இப்பொழுதே அவ்வளவு ஆர்வமாக இருக்கிறது. இது வாசிக்கிற,சிந்திக்கிற எல்லோருமே செய்துபார்க்க வேண்டியது என்று சொல்வேன். யாருமில்லா முதுமையில் நான் எழுதியவை எனது தனிமையைப் போக்க எனக்கே உதவும் என்கிற சிந்தனையே என்னை ஆச்சரியப்படுத்துகிறது.

இரண்டாவதாக எழுத்தெனப்படுவது மானிட சிந்தனையை இன்னொருவனின் அனுபவங்களை அறிவது வழியாக அசைத்துப் பார்க்கும் நிகழ்வு. ஒரு தலித் அடைகிற கொடுமையை தலித்தாக மாறித்தான் ஒருவன் எழுதுகிறான். ஒரு பெண்மீது செலுத்தப்படும் அடக்குமுறையை பெண்ணாக மாறித்தான் ஒரு ஆண் எழுதுகிறான். உண்மையில் சாதாரண மனிதனாக , சமூகத்தின் போக்குக்கு எதிராக ஒன்றும் செய்யமுடியாத கையாலாகாத்தனத்தால் விளையும் கோபத்தைத்தான் ஒருவன் எழுதுகிறான். தன் சோகத்தை, வலியை, தோல்வியைத்தான் எழுதுகிறான். அது மானிட சிந்தனையைக் கொஞ்சமேனும் அசைத்துப்பார்க்கும் எனும் நம்பிக்கை அவனுக்கு உண்டு. அது அடுத்த நொடியே நிகழ்ந்துவிடும் என்பதில்லை. தான் வாழும் சமூகத்தின் நன்மைக்கான பெருங்கனவு தன் வாழ்நாளை தாண்டிப்போனாலும் என்றாவது நடக்கவேண்டும் என்று பெருங்கனவு உடையவன்தான் எழுத்தாளன். வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள்தான் உங்கள் டேன்சரும், டைரக்டரும். அந்த நட்சத்திரங்களை பார்த்து சிரித்துக்கொண்டே , உங்கள் வாழ்வை, வாசனையை முகர்ந்துகொண்டு உங்கள் மடியில் அமர்ந்து நீங்கள்தரும் நிலாச்சோறை உண்ணுகிறவன்தான் எழுத்தாளன்.