ஜனவரி 03, 2017

ஜல்லிக்கட்டு

மனித வரலாற்றின் துவக்க காலங்களில் பெண் தனக்குப் பிடித்த ஆணை அவனது உடல்வலுவை பார்த்தும், வேட்டையாடும் திறனை பார்த்தும் தேர்ந்தெடுத்திருந்திருக்கிறாள்.    வேட்டையாடும் ஒரு இனத்திற்கு உடல்வலு என்பது மிகவும் இன்றியமையாதது. உடல் வலுவானவனின் விந்திலிருந்து பிறக்கும் இளம் மனித உயிர் அவன் தந்தையைப் போலவே வலுவானவானதாய் இருக்குமென்பது பெண் கணிப்பு.  ஆனால் காலப்போக்கில் மனிதப் பண்பாடு வளர்கிறபொழுது மனிதன் புதிய தொழில்களை அறிந்துகொண்டதன் பொருட்டு வேட்டையாடும் தேவைகள் குறைந்து , பெண் ஆணைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணிகள் கல்வி, தொழில், செல்வம் போன்றவையாக மாறுகின்றன. ஆனாலும் உடல்வலு பற்றிய சிந்தனைகளின் எச்சம் இன்றைக்கும் ஒரு பெண்ணிடம் மிஞ்சியிருக்கும் பொருட்டு சிக்ஸ்பேக் பையன்களுக்கும், உயரமான பையன்களுக்கும் கிராக்கி கூடுவதை நாம் பார்க்க முடிகிறது. தன்னைப் பாதுகாக்கிறவனாக ஒரு பெண் ஆணை நினைத்துக்கொள்ளுதல் பொருட்டு் அல்லது தனக்கானவன் உடல் குறித்து பிறரிடம் பெருமைபட்டுக்கொள்ளுதல் பொருட்டு இவ்வாறு நடக்கிறதென்று சொல்லலாம். இந்த உடல்வலுவோடு கல்வி, செல்வமும் சேருகிறபொழுது தவிர்க்கமுடியாத, தவிர்க்கக்கூடாத ஆணாக ஒருவன் மாறுகிறான். உடல் ஈர்ப்பு என்பதே காதல் அல்லது காமத்தின் முதல்படி எனலாம். அதற்குப் பிறகுதான் பிற காரணிகள் வருகின்றன.

ஜல்லிக்கட்டு களத்தில் மனித இனமும்,  காளை இனமும் மோதிக்கொள்கிறபொழுது இரண்டின் முதன்மை நோக்கமும் காமம்தான். காளையை அடக்குகிறவன் தன் உடல் வலிமையை நிரூபிக்கிற பொருட்டு அவன் தன் எதிர் பாலினமான பெண்ணைக் கவர முயற்சிக்கிறான். அவன் வீரமும் அதன் மூலம் கிடைக்கும் சமூக கவனிப்பும் பெண்ணை அவனை நோக்கிச் சாயச் செய்கிறது. காமத்தின் ( அல்லது காதலின்) இந்த முதல்கட்டம் முடிந்தபிறகுதான் இன்னபிற காரணிகள் நோக்கி பெண் மனம் நகர்கிறது. ஆனால் காளையைப் பொறுத்தவரை கல்வி, செல்வம் போன்றவற்றை நிரூபிக்கவேண்டிய அவசியம் அதற்குக் கிடையாது. அது தன் உடல்வலிமையை நிரூபித்தாலே இன்னொரு பசு மாட்டின் உடல் கிடைத்துவிடும்.

மனித வரலாறுகளின் துவக்கத்தில் மனித இனம் செய்துவந்த வேட்டையாடுதல் , அதன் திறன் பொறுத்துக் கிடைக்கும் பெண் உடல் கொண்டு காமத்தேவைகளை பூர்த்தி செய்தல், தனது சந்ததியைப் பரப்புதல் என்கிற வரிசையில்  வேட்டையாடுதலின் பண்பட்ட வடிவமே ஜல்லிக்கட்டு எனச் சொல்லலாம்.

ஒரு விளையாட்டு என்பது எப்போதும் விளையாட்டாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஜல்லிக்கட்டு சாதிய பூச்சுகள் உடைய, கவுரவப் பிரச்சனைகள் நிறைந்த ஒரு விழாவாக இருக்கிறதென்பதை பல்வேறு தளங்களில் வெளிவந்திருக்கிற கட்டுரைகளை படிக்கிறபொழுது அறிய முடிகிறது. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனும் அவரது நண்பர்களும் சேர்ந்து பல ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டை ஆவணப்படமாக்க செய்த முயற்சிகளைப் பற்றிய கட்டுரையில் தோற்றுப்போன மாடுகளை உரிமையாளர்கள் கண்டபடித் திட்டுவார்கள், உணவைக் குறைப்பார்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். தோற்கும் மனிதர்களின் நிலையையும் நம்மால் ஊகிக்க முடிகிறது. எனவே இது ஒரு கேளிக்கையான விழாவாக இல்லாமல் சமூகப்பெருமை, சாதிப்பெருமை, மாட்டுப்பெருமை பேசி பகை வளர்க்கும் விழாவாகத்தான் இருக்கிறது என்பதை மிகச் சுமாராக சிந்திக்கும் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியும்.

ஜல்லிக்கட்டைத் தடை செய்தால் நாட்டுமாடு அழியும் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு எதிராக மாடுகள் கொடுமைப்படுத்தப்படுவதாக விலங்குநல ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். காளை 'எங்கள் பிள்ளை ' என்கிறார்கள் ஜல்லிக்கட்டுக்காரர்கள். ' எங்கள் பிள்ளை ' என்ற வார்த்தையை மிகவும் நேர்மையாக அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வார்த்தை மிக முக்கியமானது.

சமீபத்தில் ஆமீர்கான் நடிப்பில் தங்கல் என்ற திரைப்படம் வெளிவந்திருக்கிறது. குத்துச்சண்டைக்காரன் ஆகமுடியாத அப்பா தன் மகள்களை குத்துச்சண்டை வீரன் ஆக்குகிறார், இதுதான் கதை. விளையாட்டு என்பது அடிப்படையில் எல்லாத் தொழில்களையும் போல ஒரு தொழில். இந்தியா என்ற பெயரை சூட்டிக்கொண்டு ஒன்றைச் செய்வதால் அது புனிதமாகிவிடுமா? ஒரு ஆசிரியர், விஞ்ஞானி, மென்பொருளாளன் என எல்லோரும் நாட்டின் வளர்ச்சிக்காகவும்தான் வேலை செய்கிறார்கள். அவர்களைவிட விளையாட்டுவீரன் என்ன செய்துவிட்டான்? ஒரு அப்பா பொறியாளர் ஆக நினைக்கிறார் . ஆனால் கைகூடவில்லை. அவர் மகனைப் பொறியாளன் ஆக்குகிறார். இதை ஒரு படமாக எடுத்தால் எவனாவது பார்ப்பானா? இங்கே பாதிப்பேரின் கதையே இதுதான்.

தங்கள் பிள்ளைகளை குத்துச்சண்டை சேரு, பாட்டு பாடு, டேன்ஸ் ஆடு, படி படி படிச்சுகிட்டே இரு, ஹாஸ்டல் சேரு, பசங்ககூட சேராத, விளையாடாத, வேலை வாங்கு, செட்டிலாகு, பக்கத்து வீட்டு பையன் எவ்ளோ சம்பாதிக்கறான் தெரியுமா என வெற்றுப்பெருமைகளுக்காக எப்படிக் கொடுமைப்படுத்துகிறார்களோ அப்படியேதான் மாடுகளையும் " ஜல்லிக்கட்டுல ஜெய்ச்சாதான் சோறு " எனக் கொடுமைப்படுத்துகிறார்கள். எப்படி காமத்தை தவறாகக் காட்டி முப்பது வயதில் முதலிரவிற்கு அனுப்புகிறார்களோ அப்படியேதான் காளைகளையும் செய்கிறார்கள். எனவே காளைகள் நிச்சயமாக அவர்கள் பிள்ளைகள்தான்.

எப்படி தங்கள் பிள்ளைகளை பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக ஒரு தேவை கருதி வளர்க்கிறார்களோ அதுபோலவே காளைகளையும் ஜல்லிக்கட்டுப் பெருமைக்கும், ஜெயிப்பதை இன விருத்திக்கும் பயன்படுத்துகிறார்கள். ஜல்லிக்கட்டு இல்லையென்றால் காளைகள் அழிந்துவிடும் என்றால் உங்கள் பிள்ளைகள் பயன்படாமல்போனால் கொன்றுவிடுவீர்களா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. அன்பு, அன்பு என்று காளைகளை கட்டித்தழுவி காட்டும் பாசாங்குகள் அபத்தமாக, அசிங்கமாக, ஆபாசமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு இல்லையென்றால் அறுத்து விற்றுவிடுவீர்களா?

இன உணர்வு என்பது தமிழன், மலையாளி, கன்னடன், தெலுங்கன் என எவரிடமும் இருப்பது. ஒவ்வொருவரும் தாங்களே சிறந்தவர்கள், தங்கள் மொழியே சிறந்தது எனச் சொல்லிக்கொள்கிறவர்கள்தான். ஆனால் இன உணர்வு ஒன்று சேர்ந்து எதிரொலிக்க வேண்டிய இடம் வெற்றுப்பெருமைகளின் கூடாரமான ஜல்லிக்கட்டு அல்ல. மாறாக விவசாயிகள் எலிக்கறி தின்கிற பொழுதும், மீனவர்களின் படகுகள் பிடுங்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்படும்பொழுதும் அது எழுந்துவரவேண்டும். உண்மையில் ஜல்லிக்கட்டு நல்ல கேளிக்கையான நிகழ்வே. ஆனால் சாதிய வேறுபாடு நிறைந்த, வெற்றுத் தற்பெருமைகள் நிறைந்த சமூகத்திற்கு அது ஏற்றதல்ல