டிசம்பர் 09, 2016

மாற்று அரசியல்

ஒரு அரசியல் கட்சியை உருவாக்க வேண்டுமென்றால் நம் பின்னால் குறிப்பிட்ட அளவில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். ஆனால் இந்தக் கூட்டத்தில் சேர்ந்து தீவிரமாகப் பணியாற்றுபவர்கள் யார்? தலைவன் என்று முன்னிறுத்தப்படுபவர்களின் செயல்பாடுகளால் கவரப்பட்டு அவர்கள் பின்னால் அணிதிரளும் மிகச்சாதாரண மனிதர்கள் முதல்வகை. ஏற்கனவே இருக்கும் பொருளாதாரத்தை இன்னும் மேம்படுத்திக் கொள்ள சேருபவர்கள் இரண்டாம் வகை. அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என நினைத்து இணைபவர்கள் மூன்றாம் வகை. இதில் முதல் வகையினர் அதிகார ஆசை உடையவர்கள் அல்ல, தங்கள் வாழ்வில் சிறு மாற்றமாவது வந்துவிடாதா என ஏங்குபவர்கள். அதற்காக ஒரு தலைவனைப் பின்பற்றுபவர்கள். அவர்கள் நினைக்கிற மாற்றமென்பது தற்கால அரசியலால் ஒருபோதும் அடைய முடியாத ஒன்று என்பதை அறியாமலே அவர்கள் இறந்துவிடுவார்கள். மூன்றாவது வகையினர் இறுதிவரை அதிகாரத்தைப் பெற மாட்டார்கள். காரணம் அதிகாரத்தைப் பெற செலவழிக்க வேண்டிய பணம் அவர்களிடம் இருக்காது. ஆக ஒட்டுமொத்தமாக அரசியல் அதிகாரம் என்பது பணம் இருக்கிற, கொள்கைகள் பற்றிய அறிவற்ற, சமூக அக்கறையற்ற, சுய நலனை மட்டும் முன்னிறுத்துகிறவர்களின் கைகளில் அகப்படுகிறது. அரசியல் கட்சிகளாலும் அவர்களைத்தான் முன்னிறுத்த முடியும். காரணம் ஒரு அரசியல் கட்சியின் செயல்பாடுகளுக்கு பணம் தேவைப்படுகிறது. பணத்தேவைக்கு பணம் உள்ளவனிடம் கையேந்தும் அரசியல் கட்சிகள் இறுதியில் அதற்கு கைம்மாறாக அரசியல் வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

இவ்வாறான அரசியல் செயல்பாடு என்பது ஒரு போதும் ஒரு சமூக மாற்றத்திற்கானதாக அமையாது. அரசியல் என்பது சமூக மாற்றத்திற்கான ஒட்டுமொத்த மனிதர்களின் பங்களிப்பு என்பதாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே சில பேரால் மட்டுமே முன்னெடுக்கப்பட்டு அவர்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் இடமாக இருக்கிறது. நம் அரசியலில் ஒட்டுமொத்த சமூக பங்களிப்பு என்பதே இல்லை. இங்கே செய்ய வேண்டிய மாற்றமென்பது அரசியல் கட்சிகளின் அமைப்பில் செய்யப்பட வேண்டியது. முழுநேர அரசியல் கட்சிகளும், முழுநேர அரசியல்வாதிகளும் சூழலிலிருந்து நீக்கப்பட வேண்டும். முழுநேரத் தொழிலாக அரசியல் செய்வது தடை செய்யப்பட வேண்டும். வாழ்வாதாரத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கும் வெவ்வேறு கருத்துடைய பொது மக்கள் திரள் ஒவ்வொன்றும் தங்கள் கருத்திற்கேற்ப ஒவ்வொரு குழுவாக இணைந்து தேர்தலின்போது மட்டும் போட்டியிட வேண்டும். அதில் வெற்றி பெறுபவர் மக்களுக்காக பணியாற்ற வேண்டும். தோல்வி அடைபவர்களை நிறுவனங்கள் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் வெற்றிபெறும் அனைவரும் இணைந்து தங்களுக்கு அறிவுள்ள துறை ஒன்றிற்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர்களில் மிகச்சிறப்பானவர்கள் மக்களால் வாக்களிக்கப்பட்டு அமைச்சர்களாக்கப்பட வேண்டும்.    மக்களுக்கான திட்டங்கள் மக்களின் ஒப்புதலோடு செய்யப்பட வேண்டும்.  இவ்வாறான ஒரு மாற்றம் உருவாகி வருகிறபொழுது பல்வேறு துறைகளின் அறிவார்ந்த மனிதர்கள் அரசியல் நோக்கி வருவார்கள். அவர்கள் அரசியலில் தோல்வியுற்றால்கூட பணிக்கு திரும்பச் செல்லமுடிவதால் பணிப் பாதுகாப்பும் இருக்கும். மக்களுக்கான திட்டங்கள் மக்கள் ஒப்புதலோடு செய்யப்படுவதால் போராட்டங்கள் என்பது குறைவுதான். இன்றைக்கும்கூட மக்கள் போராட்டங்கள் மக்களால் முன்னெடுக்கப்படுபவைதான், அரசியல் கட்சிகள் மக்களைத்தான் பயன்படுத்திக்கொள்கின்றன. cashless economyவை விட இன்றைக்கு முக்கியமானது cashless politicsதான்.

இது மிகவும் விசித்திரமான எண்ணமாகத் தோன்றினாலும் இது ஒரு மிகப்பெரும் கனவு. இதை அடைய முடியாது என்பதெல்லாம் இல்லை. ஒரு சமூகம் அறிவார்ந்த சூழலை நோக்கி முன்னகரும்போது இவை நடக்கும். என்னதான் இந்தத் தலைமுறையில் முட்டாள்கள் நிரம்பியிருந்தாலும் ஒப்பீட்டளவில் முந்தைய தலைமுறையை விட இந்தத் தலைமுறை அறிவுடையதுதான். எனவே இவ்வாறான சிறு அறிதல்கள் ஒன்றிணைந்து பெரும் அறிதலாக நல்லதொரு சமூகம் ஒருநாள் மலரும். அப்போது நாமெல்லாம் உயிரோடு இருக்க மாட்டோம் என்பது உண்மைதான். ஆனால் இங்கே செய்யப்படுபவையும், சொல்லப்படுபவையும் நமக்கானது மட்டும் அல்ல இனிவரும் பல்லாயிரம் ஆண்டுக்களுக்கான உயிர்களுக்கானது.