ஜனவரி 05, 2017

காமத்தைக் கொண்டாடுதல்

பெங்களூரில் மிகப்பெரிய பாலியல் வன்முறை ஒன்று அரங்கேறியிருக்கிறது. பெண்கள் மிக மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். காவலர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். " நாங்களும் ஆண்களைப் போலத்தானே, எங்களுக்கும் புதுவருடத்தை மகிழ்வோடு கொண்டாட ஆசையிருக்காதா? " என அழுதுகொண்டே ஒரு பெண் கேட்கிறபொழுது அதற்கான பதிலேதுமின்றி தலைகுனிவதைத் தவிர ஒன்றையும் செய்ய முடியவில்லை. வழக்கம்போல பெற்றோரின் வளர்ப்பு சரியில்லை என்ற குரல்கள் எழத் துவங்கிவிட்டன( அவர்கள்தான் வளர்க்கவே இல்லையே. ஆறு வயதில் ரெசிடென்ஷியல் ஸ்கூலில் சேர்த்ததோடு அவர்கள் கடமை முடிந்துவிட்டது) . படித்த,  நாகரிகமான மனிதர்கள் வாழ்வதாக சொல்லப்படும் மென்பொருள் தலைநகரிலேயே இவ்வளவு பாலியல் வறட்சி நிலவுகிறபொழுது நாட்டின் பிற பகுதிகள் எவ்வாறிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

இப்போதைய நிலைக்கு மாறாக ,நமது கலைவடிவங்கள் எப்போதும் காமத்தை பேசி இருக்கின்றது. கவிதையில், கடவுள் சிற்பங்களில் காமம் இருந்திருக்கிறது. நிர்வாண சிலைகளற்ற கோவில் கோபுரங்கள் இங்குண்டா? அறநெறி நூலான திருக்குறள்கூட காமம் பேசியிருக்கிறது. நமது தாத்தாகளுக்கு இரண்டு மனைவிகள் என்பதெல்லாம் நாம் சர்வசாதாரணமாக கடந்துசெல்லும் விஷயங்கள். ஆனால் இன்றைக்கு காமத்தை உச்சரிப்பதே மிக மோசமான காரியமாக சித்தரிக்கப்படுகிறது.

மிகவும் அடித்தட்டு மக்கள் காமத்தையும், கெட்ட வார்த்தைகள் என்று வரையறுக்கப்பட்டவற்றையும் மிகச் சுலபமாக கையாள்பவர்களாக இருக்கிறார்கள். காமம் சார்ந்த பேச்சுகள் இயல்பாக பேச்சில் கரைபுரண்டோடுகிறது. மேல்தட்டு மக்கள் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகள் என்று வரையறுக்கப்பட்டவற்றை பேசுபவர்களாகவும், உடல் அரசியலில் இருந்து விடுபட்டு காமத்தை எளிதாக அணுகுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் கல்வியின் மூலமும், உலகமயமாதல் வாய்ப்புகள் மூலமும் இன்றைக்கு வேலைவாய்ப்புகள் பெற்றிருக்கிற இடைநிலை ஆட்கள்தான் காமத்தை பெரிய விஷயமாகப் பேசி இங்கே ஒழுக்கவியல் விதிகளை நீட்டி முழங்கிக்கொண்டிருக்கிறார்கள். மானம், மரியாதை என்று உயிரை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஊருக்கு தெரியாமல் செய்வதென்றால் எதையும் ஏற்பவர்களாகவும், ஊருக்குத் தெரிந்தால் அலறுபவர்களாகவும் ஒட்டுமொத்தத்தில் தனக்காக எப்போதும் வாழாதவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள்தான் இன்றைக்கு சூழலை அதிகமாக ஆக்கிரமித்திருக்கிறார்கள்( இது ஒரு பொதுமைப்படுத்தல் என்றாலும் பெரும்பான்மை அடிப்படையில் உண்மையென்று கொள்ளத்தக்கதே)

இப்போதைய சூழலில் இந்திய சமூகத்தை மேற்கத்திய வாழ்வியல் முறைகளை தனது உடையிலும், பாவனையிலும் கொண்டு , சிந்தனையில் பழமையான ஒழுக்கவியல் நெறிகளை கொண்டிருக்கும் ஒரு சமூகமென்று சொல்லலாம். மேற்கத்திய உடையை அணிகிற,  Fuck, bitch என்று கத்திக்கொண்டிருக்கிற என் தோழியிடம் சென்று " Will you sleep with me tonight?" என்று கேட்கிறபொழுது " செருப்பு பிஞ்சிரும்டா நாயே" என்று சொல்வாளேயானால் அது எப்படி மேற்கத்திய சிந்தனையாக இருக்க முடியும்? ஒன்று சரி என்று சொல்லவேண்டும் இல்லையேல் விருப்பமில்லை என்று சொல்லவேண்டும். அதுதானே மேற்கத்திய வாழ்வியல் முறையாக இருக்கமுடியும். காமத்தை விடுங்கள். ஒரு காதலை மிகச்சரியாக நிராகரிக்க அல்லது குழப்பமின்றி ஏற்றுக்கொள்ள எத்தனை பெண்களுக்குத் தெரியும்?

ஒருவருக்கு காதலி (அல்லது காதலன்) இல்லையென்றால் " உனக்கு ஆள் இல்லையா? வேஸ்ட் " என்று சொல்லி கெக்கபிக்கே என சிரித்துவிட்டு நகர்ந்துவிடுகிறோம். ஆனால் ஒரு ஆணிற்கு பெண்ணோ அல்லது பெண்ணிற்கு ஆணோ துணையாகக் கிடைக்கவில்லை என்பது எவ்வளவு பரிதாபகரமான விஷயம். ஏறக்குறைய பதிமூன்று வயதிலிருந்து ஏற்படும் உடல் மாறுபாடுகளினால் உருவாகும் உணர்ச்சிகளைத் தீர்த்துக்கொள்ள முப்பதை நெருங்கிவிட்ட பின்பும் எதிர்பாலினத்தின் உடல் கிடைக்கவில்லை என்பது எவ்வளவு கொடுமையான விஷயம். மன ரீதியாக, உடல் ரீதியாக ஒருவனை பாதித்து அவனை பாலியல் வெறி கொண்டவனாக மாற்றும் சூழல் அப்பொழுதுதானே உருவாகிறது. பெண் உடல் கண்டறியமுடியாத புதையலாக அவன் முன்னால் இருக்கிறபொழுது அதை எவ்வகையிலேனும் அடைந்துவிடவேண்டும் என்பதுதானே புத்தாண்டுக் கொண்டாடக் கூட்டத்தில் தெரியாத பெண்களின் மார்பகங்களை கசக்குவதாக மாறுவது? தன் குடும்ப உறுப்பினர்களையே பாலியல்கண் கொண்டு காணும் நிலைக்கு தள்ளுவது.

உடலை மிக இயல்பாக எடுத்துக்கொண்டு ஆணின் தேவைகளைப் பெண்ணும், பெண்ணின் தேவைகளை ஆணும் பரஸ்பர உதவிபோல் நிறைவேற்றுவது மேற்கத்திய வாழ்வியல் முறைகளைத் தரவிறக்கும் ஒரு சமூகத்திற்கு மிகவும் இன்றியமையாதது. Public nudity, beach nudity, nude cycle race என்று படுபயங்கரமாக வாழும் European வாழ்வியல் முறைகள் இருக்கும்பொழுது இங்கு பெண்ணுடன் ஆண் பேசுவதே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும்சூழலை மேற்கத்திய கலாச்சாரம் என்று சொல்வதே கேலிக்கூத்து. Sexuality பற்றியும், ஆண்- பெண் உடல் மாறுபாடுகள், உணர்வுகள் பற்றியும், உடல் தேவைகள் பற்றியும் ஆணும் பெண்ணும் தொடர்ந்து உரையாடுவதன் மூலமாக மட்டுமே இங்கு இயல்பாக எதிர்பாலின உடலைக் கருதும் போக்கு ஏற்படும். அதன்பிறகு பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதென்பது எளிதாகும்பொழுது பாலியல் வன்முறைகளும், வன்புணர்வுகளும் குறையும். இந்த மனமாற்றம் என்பது நம்மிடையே எழுந்துவர வேண்டியது. இதற்கு அரசாங்கம் எதுவும் செய்யவேண்டியதில்லை.

அதேநேரத்தில் காதல் கைகூடியவர்களாவது காமத்தைக் கொண்டாட முடிகிறதா என்றால் பார்க்கிலும், பீச்சிலும், தியேட்டரிலும் பயந்துகொண்டுதான் ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. அதற்குக்கூட நல்ல சூழல் இங்கில்லை என்பதைத்தவிர வேறு வெட்கக்கேடு ஒன்றுமில்லை. இதற்குத்தான் அரசாங்கம் ஏதாவது செய்யவேண்டும்.