ஜனவரி 10, 2017

காமத்தைக் கொண்டாடுதல்- ஒரு எதிர்வினை

காமத்தைக் கொண்டாடுதல் என்ற பதிவிற்கு அருண்மொழிவர்மன் என்பவர் ஒரு எதிர்வினையாற்றியிருக்கிறார். பெண்களை வெறும் பண்டங்களாக நான் கருதிவிட்டதாகவும் இது கண்டித்தக்கது என்றும் கூறியிருக்கிறார். அவருடைய எதிர்வினையை இங்கே படிக்கலாம்

https://arunmozhivarman.com/2017/01/07/violence-against-women/

வலுவான எதிர்வினைகள் ஒருவரின் சிந்தனையில் மாற்றம் ஏற்படுத்த வாய்ப்புள்ளவை. அவ்வாறான ஒரு எதிர்வினையை என் சிந்தனைக்கு எதிராக ஒருவர் வைப்பாரேயானால் நான் அவருக்கு மிகவும் நன்றிக்குரியவன். அவர் எனக்கு ஒரு புதிய சிந்தனையை உருவாக்கிக்கொடுத்த குரு. ஆனால் அருண்மொழிவர்மனின் மிகச் சுமாரான, வலுவற்ற எதிர்வினைக்கு எதிராக நாம் ஏன் எழுதவேண்டும் என யோசித்துக்கொண்டிருந்தேன். எந்தவொரு நிரூபித்தலுக்கும் என்னை ஆட்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது எனும்போது எதிர்வினைக்கு ஒரு எதிர்வினை என்பது முற்றிலும் தேவையற்றது. பிறகு ஏன் இதை எழுதவேண்டும்? வேலைவெட்டி இல்லாமல் வெறுமனே உட்கார்ந்திருக்கும்பொழுது கையை வைத்துக்கொண்டு நம்மால் சும்மா இருக்க முடியாதல்லவா, அதனால்தான். யாரையாவது வம்பிழுக்கலாம் எனும்போது Volunteer ஆக வண்டியில் ஏறுபவர்களை விட்டுவிட முடியுமா? நாங்கல்லாம் எவ்ளோ பெரிய அப்பாடாக்கரு எனக் காட்ட வேண்டாமா? இதையெல்லாம் தாண்டி பெண்களைப் பண்டமாக நினைப்பவன் என்றெண்ணி என் தோழிகள் என்னை Divorce செய்துவிட்டால் மொக்கை போடுவதற்கு நான் என்ன செய்வேன்?

அந்தப் பதிவைப் பொறுத்தவரை ஆண் என்ற இடத்தில் பெண் என்றும், பெண் என்ற இடத்தில் ஆணென்றும் மாற்றி மாற்றிப் போட்டு படித்துக்கொள்ளலாம். நம் தாத்தாக்களுக்கு இரண்டு மனைவி என்கிறீர்கள், நம் பாட்டிகள் நிலை என்ன என்று கேட்கிறார் அவர். ஆணாதிக்க சமூகமாக தொடர்ந்து இருந்துவரும் இச்சமூகத்தில் இன்றைக்கு நம் அப்பாவிற்கு இரண்டு பொண்டாட்டி என்பதை,  நம் தாத்தாவிற்கு இரண்டு என்பதைப்போல கடந்து செல்ல முடியவில்லை எனும்போது ஆணாதிக்க சமூகத்தில் இன்றைக்கு ஆணுக்குக்கூட காமம் சார்ந்த தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதைத்தான் அவ்வரிகள் குறிக்கிறது. அதாவது ஆணின் காமம் மீதான சமூக அணுகுமுறைகள் மாறி அதன் பரப்பு சுருங்குவதையும்,  பெண் தரப்பு முன்பைவிட முழுமையாகச் சுருங்கி இல்லாமலாகிவிடுவதையும்தான் அவ்வரிகள் குறிக்கிறது ( இருதார மணத்தை அங்கீகரிப்பதற்கான வரிகள் அல்ல அவை. ஒரு சூழல் எவ்வாறாக தனது கருத்தியல்களை காமம் சார்ந்து மாற்றி அமைத்துக்கொண்டே இருக்கிறது என்பதைக் காட்டுவதற்கான வரி. இருதார மணம் என்பதை மறுமணம் என்பதாகக்கூட இன்றைய சூழலுக்கு வைத்துப் பார்க்கலாம். மறுமணம் செய்வதற்கு குழந்தைகளின் நலன் என்ற வெளிப்பூச்சு பூசி உடல் தேவைகளை தீர்த்துக்கொள்கிற தேவையை சமூகத்தின் மனம் ஏற்படுத்திவிட்டதைக்கூட அப்போது நாம் சிந்தித்துப் பார்க்கலாம். மறுமணத்தின் அவசியங்களை சமூகம் உணர்ந்திருக்கிறதா என எண்ணிப் பார்க்கலாம்).

மேற்கத்திய பாணியில் உடையணிந்த பெண்ணை படுக்கைக்கு அழைப்பது என்பது பொதுவெளியில் இயங்கவந்த பெண்களை அவமானப்படுத்துவது என பெண்ணியக்காவலராய் பொங்கியிருக்கிறார் அருண்மொழி வர்மன். நான் முன்னரே குறிப்பிட்டிருப்பதுபோல் அந்தப் பதிவில் ஆண் எனும் இடத்தில் பெண் எனவும், பெண் எனும் இடத்தில் ஆண் எனவும் போட்டுக்கொள்ளலாம். ஒரு பெண் ஆணிடத்தில் அவளது உடல்தேவையை சொல்கிறபொழுது அவன் அதை எவ்வாறு எதிர்கொள்கிறான் என்றும் அதைப் படிக்கலாம். அவ்வாறு சொல்லப்படுகிறதா? இல்லை என்றால் ஏன் அவ்வாறு சொல்லப்படுவதில்லை என்கிற கேள்விகளும் இதனூடாக எழுந்துவர வேண்டியவை. பெண் தன் உடல்தேவையை வெளிப்படையாக சொல்லுமளவிற்கு நாம் அனுமதித்திருக்கிறோமா? பெண் ஒழுக்கம் என்பது பெண் இயல்பா அல்லது அடக்குமுறையினால்  உணர்வுகளை கட்டுப்படுத்த பயன்படும் வார்த்தை ஜாலமா எனவும் சிந்தித்துப் பார்க்கலாம். ஒரு பெண் யாரையும் வன்புணர்வு செய்யமாட்டாளா? ஏன் செய்வதில்லை ? ஒருவேளை ஆணாதிக்கம் இல்லையென்றால் ஒரு பெண் ஆணை வன்புணர்தலும் நடந்திருக்கும்தானே  என்பதையும் சிந்தித்துப் பார்க்கலாம்.

பழமையான உடைச்சிந்தனை உடைய சமூகச் சூழலை எதிர்த்து மேற்கத்திய உடை தரிக்கிற பெண் , காமம் சார்ந்த பழமையான போக்குகளுக்கும் எதிரானவளாக இருக்கவேண்டும், அதனை இயல்பாக எதிர்கொள்ள வேண்டும் என்பதே அவ்வரிகளில் நான் சொல்லும் செய்தி. கூப்பிட்ட உடனே படுக்க வேண்டும் என்பதல்ல , விருப்பமில்லை என்பதை இயல்பாக எவ்வாறு சொல்வது என்பதையே அவ்வரி வலியுறுத்துகிறது. இதில் பெண்களுக்கெதிரான விஷயம் என்னவென்று உண்மையிலேயே புரியவில்லை.மேற்கத்திய அணுகுமுறை கூட இவ்வாறு இல்லை என்கிறார் அருள்மொழி. எனவே இந்தியச்சூழல் குறித்த என் சிந்தனைகள் , மேற்கத்திய சூழலுக்கும் பொருந்துமளவிற்கு மாறிவிட்டதாகத்தான் தோன்றுகிறது. அந்தப் பதிவை மொழிபெயர்த்து தன் மேற்கத்திய தோழிகளுக்குக் கொடுத்து அவர்களின் சிந்தனைப்போக்கையும் மாற்ற அருள்மொழி அவர்கள் முயலலாம். இதன்மூலம் உலகளாவிய சிந்தனையாளனாக நான் மாறப்போவதில் எனக்குப் பெருமையே.  

' பெண்' என்ற புனிதப்படுத்தலின் மூலம் மீண்டும் பெண்களை உள ரீதியாக, உடல் ரீதியாக கட்டுப்படுத்துவதையே அருள்மொழிவர்மன் செய்ய விரும்புகிறார் என்பது தெளிவு. அதுதான் பேசனா மட்டும் போதும் உடலுறவெல்லாம் தேவை இல்லை என அவரைச் சொல்ல வைப்பது. அந்தவகையில் யார் பெண்களுக்கு எதிரானவர் என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

Free sex என்பதை நான் ஒரு தீர்வாக முன்வைக்கவில்லை. நீங்கள் உடலுறவு வைத்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ளுங்கள். கலாச்சாரத்தைக் காப்பாற்றுங்கள். அது அவரவர் விருப்பம். அடுத்தவனின் உடல்தேவையை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள், அதற்கு காது கொடுங்கள் முடிந்தால் உடலைக் கொடுங்கள் அது ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் என்பதே நான் சொல்வது.

எல்லாப் பதிவுகளிலும் ஒவ்வொரு வார்த்தைகளையும் எடுத்துக்கொண்டு ஆராய்வதைவிட அதன் சாரத்தை அறிந்து அதைச் சிந்தனை செய்வதே சிறப்பானதாகும். ஒருவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் எந்தவொரு பதிவிலும் தலைதூக்கிப் பார்க்குமென்றாலும் இறுதியாக அது சொல்லும் விஷயம் நேர்மையானதா, தேவையானதா என்பதே நாம் பார்க்கவேண்டியது. அதிலிருந்துதான் புதிய சிந்தனையையும், நமக்கான ஆளுமையையும் அமைத்துக்கொள்ள முடியும்.

இறுதியாக, காமத்தைக் கொண்டாடுவது என்பது ஒரு விழா என்று நினைத்துக்கொண்டார் போல. காமத்தை இயல்பாக அணுகுதலே காமத்தைக் கொண்டாடுவதாகும். மற்றபடி " எங்க ஊர்ல காமத்திருவிழா. எல்லாரும் ஊருக்கு வாங்க ஜாலியா இருக்கலாம்" என்பதல்ல.