ஜனவரி 12, 2017

சாதிகளின் தோற்றம்- அம்பேத்கரின் சிந்தனைகள்

ஒரு கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்ற அடுத்தநாள் தோனி வீட்டிலோ அல்லது கோஹ்லி வீட்டிலோ கல்லெறியப்படும்.   தன்னை இந்தியனாக உணரும் ஒவ்வொருவரும் " காசு வாங்கிட்டு விளையாடறதப் பாரு, அப்படித்தாண்டா உங்க வீட்டக் கல்லால அடிக்கணும், இந்தியன்டா" என்று கூவுவார்கள். அடுத்தமாதம் காவிரி பிரச்சனையில் தமிழகப் பேருந்தைக் கொழுத்தி " கன்னடன்டா" என்று ஒரு பிரிவும்,  கர்நாடகப் பேருந்தைக் கொழுத்தி " தமிழன்டா" என்று இன்னொரு பிரிவும் கத்திக்கொண்டிருப்பார்கள். அதற்குப் பிறகு வெகு விரைவில் சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் பாராலிம்பிக்கில் தங்கம் வென்றார் என்று செய்தி வரும்போது தமிழனை ஓரங்கட்டிவிட்டு " சேலம்டா" என்று கத்துவார்கள்.

ஒருவேளை ஜல்லிக்கட்டு மும்பையில் நடக்கும் நிகழ்வாக இருந்திருந்தால் தமிழர்கள் அத்தனைபேரும் எதிர்த்திருப்பார்கள். இதன்பின்னுள்ள உளவியலில் வெற்றுப்பெருமிதம்தான் முதன்மை என்றாலும் மனிதர்கள் தனித்து விடப்படுதல் குறித்து அச்சுமுறுகிறார்கள் என்பதாலேயே தங்களைக் குழுவாக இணைத்துக்கொள்வதோடு,  அக்குழுவிற்கு உண்மையாக இருப்பதற்காக கடுமையாக முயல்கிறார்கள் என்று சொல்லலாம். இனத்தோடு அணுக்கமாய் இருப்பது தனிமனித இருத்தலை நீட்டிக்கிற பாதுகாப்பான உணர்வென்பதாலே மனிதன் அதோடு பிணைக்கப்பட்டிருக்கிறான். நாகரிகமான வாழ்வியலை நாம் எட்டிவிட்டதாக சொல்லப்பட்டாலும் மனிதன் என்கிற விலங்கு இன்னொரு பரிச்சயமற்ற மனித விலங்கை( அல்லது இன்னொரு இனக்குழுவை) ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாமையைத்தான் இந்தப் பிரச்சனைகளின் மையக்கரு.

ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தனித்தே உணருகிறான் என்றாலும் தனித்துவிடப்படலால் ஏற்படும் தனது இருத்தலின் மீதான பயம் அவனைச் சூழ்கிறபொழுது, தான் பிறப்பால் இணைந்திருக்கும் இனக்குழுவிற்கு உண்மையாக இருப்பதுபோல் நடிக்கிறான். அவன் தான் எதுவொன்றினுடைய அங்கமும் இல்லை என்று உணரும் தருணங்கள் உண்டென்றாலும் எதுவொன்றினுடைய அங்கமும் ஆகாமல் ஒருவனால் வாழ முடியாது என்கிற சிக்கலையும்,இன்னொரு இனக்குழு அவனை அங்கீகரிக்காது என்ற சிக்கலையும் அவன் உணரும்போது தான் சார்ந்த இனக்குழுவை போற்றுதலைச் செய்ய ஆரம்பிக்கிறான். தான் சார்ந்த இனக்குழுவை அவன் எதிர்ப்பானேயானால் அவன் அவனுடைய இனக்குழுவைத் தவிர எல்லா இடங்களிலும் கதவுகள் அடைக்கப்பட்டவன். எனவே இருக்கும் ஒரே வழி என்பது இனக்குழுவை எதிர்ப்பவர்கள் ஒன்று சேர்வது. அப்படி ஒன்றுசேர்ந்தால் அதுவும் ஒரு குழுதான். ஆக தனித்த ஒருவனாக மனிதன் இருப்பதென்பது எப்போதுமே இயலாத காரியம்தான்.

சாதியும் இப்படி மனிதர்கள் தங்களது அறிவு, தொழில் அல்லது பிற காரணிகள் சார்ந்து குழுக்களாக அல்லது வர்க்கங்களாக பிரிந்ததில் இருந்து துவங்கியிருக்கலாம் என அம்பேத்கர் சொல்கிறார். ( எப்படி எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள் என சமூகம் பல குழுக்களாகப் பிரிகிறதோ அப்படி). ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தோடு தொடர்புகொள்வதிலோ அல்லது வர்க்கம்(class) மாறிக்கொள்வதிலோ எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை என்கிறார் அம்பேத்கர். ஆனால் காலவோட்டத்தில் பிராமணர்களின் குழு தங்களைத் தனித்துணர்ந்த பொருட்டு வர்க்கம் என்பதிலிருந்து விலகி பிறரை பிறப்பாலன்றி வேறு வகையில் சேர்த்துக்கொள்ளாத சாதியாக மாறுவதாகக் குறிப்பிடுகிறார்.

பிராமணர்கள் தங்களை சாதியாகக் கருதிக்கொண்டாலும் மற்ற வர்க்கங்கள் தங்களை அவ்வாறு கருதிக்கொள்ளவில்லை எனும்போது சாதி எவ்வாறு தன்னை எல்லாவிடங்களிலும் விரிவாக்கிக்கொள்ள முடியும் என்கிற கேள்வி எழுகிறபொழுது அதற்கு விடையாக அன்றைய சூழலில் கடவுளுக்கு ஊழியம் செய்கிற , அறிவார்ந்த கூட்டமாக இருக்கிற பிராமணர்கள் தங்களை சாதியாக உருமாற்றிக்கொள்கிறபொழுது அதைப்பார்த்து அப்படியே மற்ற வர்க்கங்களும் அதைப் பின்பற்றுவதாகக் குறிப்பிடுகிறார்.

ஆக இவ்வாறு சாதி உருவாகி வந்தபிறகு அதனை என்றும் அழிந்துவிடாததாய் காப்பாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு அந்த சாதி சார்ந்த மக்களைப் பெருக்க வேண்டும். ஆனால் சாதியில் பிறப்பாலின்றி வேறு வகையில் உறுப்பினர் சேர்க்கை இல்லை என்பதால் அந்த சாதிக்குள்ளேயே திருமணம் செய்து சாதித்தொகையை பெருக்க வேண்டியிருக்கிறது.( ஒரே சாதியில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைகள் அதன் பெற்றோரின் சாதி சார்ந்த பண்புகளைக் கடத்துவார்கள் எனும் தவறான உளவியல் இதன்பின்னுள்ளது என்கிறார் அம்பேத்கர்). வேதங்கள் சொல்லியிருக்கிற ஒருவனுக்கு ஒருத்தி என்ற அறிவுரையோடு இதனைச் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே தன்னை சாதியாக மாற்ற நினைக்கும் வர்க்கக்குழு திருமணம் செய்வதற்கான வயதுள்ள ஆணையும், பெண்ணையும் சம எண்ணிக்கையில் வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஆனால் திருமணத்திற்குப் பின்பு திடீரென்று யாராவது இறந்துவிட்டால் , ஆண்- பெண் எண்ணிக்கையில் மாறுபாடு ஏற்பட்டு தனித்து விடப்படும் ஆணோ, பெண்ணோ உருவாகிறார்கள். எனவே மனித இயல்புப்படி அவர்கள் சாதியின் மதில்களைத் தாண்டி இன்னொரு சாதியுடன் இணைந்துவிடும் வாய்ப்பிருக்கிறது. எனவே இந்த நிலையில் தனித்து விடப்படும் பெண்ணின் பிரச்சனையை சமாளிக்க சாதி இரண்டு முறைகளைக் கையாள்வதாக அம்பேத்கர் சொல்கிறார்.

முதலாவதாக கணவனே கண்கண்ட தெய்வம், திருமணமான ஆணும், பெண்ணும் ஓருடலே, ஒருவரே போன்ற கருத்தியல்கள் முன்வைக்கப்பட்டு கணவனின் பிணம் வேகும் தீயில் மனைவியும் உயிரோடு எரிக்கப்படுகிறாள். இதன்மூலம் ஆண்- பெண் எண்ணிக்கை சமநிலையை அடைகிறது. ஆனால் எல்லா நேரங்களிலும் இவ்வாறான முறைகளைக் கையாள்வதிலுள்ள சிக்கல்களைக் கருத்தில்கொண்டு இரண்டாவது முறையாக பெண்ணை விதவை என்று அழைக்கும் பழக்கம் ஏற்படுத்தப்படுகிறது. விதவையின் தோற்றம் யாரையும் கவராதபடிக்கு அழகற்றதாக மாற்றப்படுகிறது. இதன்மூலம் ஆண்-பெண் எண்ணிக்கை வேறுபாடுகள் களையப்படுகிறது என்கிறார் அம்பேத்கர்.

ஆனால் மனைவி இறந்துவிட்ட ஒரு ஆணை அவன் ஆண் என்பதாலேயே ஆணாதிக்க சமூகத்தால் தீயில் தள்ளவியலாத நிலை ஏற்படுகிறது. எனவே பெண் விதவையாவது போல ஆண் பிரம்மச்சரியம் அனுஷ்டிக்க ஆரம்பிக்க ஆரம்பிக்கிறான்( இது ஆணின் சுய விருப்பத்தின் அடிப்படையில் அமைகிற பிரம்மச்சரியம். பெண்ணை கட்டாயப்படுத்தி விதவையாக்குவதைப் போன்றதல்ல என்பது நாம் கவனிக்க வேண்டியது). எனவே எல்லா ஆண்களும் இதை ஏற்றுக்கொள்வதில்லை எனும்போது மணமாகும் ஆண்- பெண் எண்ணிக்கை குறைவில்லாமல் தனித்து விடப்பட்ட ஆணிற்கு மறுமணம் செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. அந்த நிலையில் மண வயதை எட்டாத சிறுமியை,  தனித்து விடப்பட்ட ஆணிற்கு மணமுடிப்பதாய் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

தங்களுக்குள்ளேயே திருமணம் செய்வதிலிருந்து சாதிகள் விடுபடும்போதுதான் சாதியின் அழிவு ஏற்படுமென்றாலும் , சாதியின் தீட்டு குறித்தான அடிப்படைகள் வேதங்களில் இருப்பதால், வேதங்கள் இந்து மதத்தில் இருப்பதால், வேதங்களின் வாக்கியங்களைக் காரணம்காட்டி மனிதன் பாவங்களுக்கு அஞ்சி ஒருபோதும் கலப்புமணம் செய்யமாட்டான் என்பதால் இந்து மதத்தின் அழிவுதான் அல்லது மறு உருவாக்கம்தான் சாதியின் அழிவிற்கு வழிவகுக்கும் என்கிறார் அம்பேத்கர்.

சமூகத்தின் அறிவார்ந்த தளங்களில் உள்ள பிராமணர்கள் சாதியின் கொடுமையை, தவறை சிந்தித்து தாங்கள் உருவாக்கியவற்றை தாங்களே சீர்திருத்தாவிட்டாலொழிய சாதி அழியாது என்றாலும் சாதி ஒழிப்பின் மூலம் பிராமணர்கள் தங்கள் பெருமிதங்களை, அதிகாரத்தை அவர்களே ஒழிக்கிறார்கள் எனும்போது அதற்கு ஒருபோதும் அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது அம்பேத்கரின் வாதம்.

சாதியின் தோற்றம் பற்றி அம்பேத்கர் சொல்பவை இறுதியானவை அல்ல என அவரே சொல்லியிருக்கிறார். எனவே இவ்வாறுதான் சாதி தோன்றியது என உறுதியாகச் சொல்வதற்கில்லை என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

புராணங்களில், வேதங்களில் எழுதப்பட்டுள்ள சாதி சார்ந்த குற்றங்களை, அதற்கான பிராயச்சித்தங்களை ஒருபோதும் பிராமணர்கள் அழித்துவிடப்போவதில்லை என்பது நாம் அறிந்ததே. இன்றைக்கு பிராமணன் சாதியை அழிக்க விரும்பவில்லை எனும் குற்றச்சாட்டு வருகிறபொழுது தலித்களோ அல்லது இடைநிலைசாதிகளோ தங்கள் சாதிகளை அழிக்க விரும்புகிறார்களா எனும் கேள்வி எழுகிறது. உண்மையில் யாருமே சாதியை ஒழிக்க விரும்பவில்லை. இங்கே யார் அரியணையை எட்டுவது என்று போட்டி நடந்துகொண்டிருக்கிறது. பழிவாங்கும் படலங்கள் நடந்துகொண்டிருக்கிறது. அரசியல் அதிகாரம் பெறுவதற்கான தனிமனிதர்களின் போட்டியில் சாதி மையக்கருவாக்கப்பட்டு சாமானியர்கள் பைத்தியக்காரர்கள் ஆக்கப்படுகிறார்கள். ஆனால் சாமானியர்களே விரும்பினாலும் வெளிவரமுடியாத தளையால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை சாதியும், நாடும் ஒன்றுதான். சாதி ஒரு சிறிய நாடு. நாடு அழியவேண்டுமா என்று கேட்டால் நாட்டின் அழிவு , என் வாழ்வின் அழிவாகத் தோன்றுகிறது. நாடு தோற்கடிக்கப்பட்டால் நான் என் வாழ்வியலை இழப்பேன். சில பேருக்கு சாதியும் அப்படித்தான். உலகமயமாதல், நகரமயமாதல், நல்ல கல்வி போன்றவை இவற்றின் தாக்கங்களைக் குறைக்கலாமே ஒழிய ஒழிக்காது. ஆனால் நல்ல கல்விக்கான வாய்ப்பு மனிதர்களை முட்டாளாக்கி அதிகாரம் பெறத்துடிக்கும் அரசியல் இருக்கிறவரை நடக்காது என்பது தெளிவு. கலப்புத் திருமணத்தில் பிறந்த குழந்தை தன் அப்பாவின் சாதியைப் பின்னால் போட்டுக்கொள்ளுமென்றால் சாதி எப்படி அழியும்? நாடு எப்படி இன்னொரு நாட்டின்மீது ஆதிக்கம் செலுத்துவதை பிற நாடுகள் எதிர்க்கின்றனவோ அல்லது ஐநா எதிர்க்கிறதோ அவ்வாறு ஒரு சாதி இன்னொரு சாதியின் மீது ஆதிக்கம் செலுத்தும்போது பிற சாதிகள் எதிர்க்க வேண்டும் அல்லது ஐக்கிய சாதிகள் சபை என்பதுமாதிரி ஒன்று அமைக்கலாம்.

பிரிவினைகளின் அழிவு என்பது ஒருபோதும் சாத்தியமில்லை. கண்டம், நாடு, மாநிலம், மாவட்டம் போலத்தான் சாதிப் பிரிவினையும். நமக்குப் பிடித்த நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு குழுவாக இருப்போம். ஆனால் அந்தக் குழுவிற்குள்ளேயே ரொம்பவும் பிடித்தவர்களை வைத்து இன்னொரு சிறிய குழுவை அமைத்துக்கொள்வோம். அந்த சிறிய குழுவில் நமக்கு ரொம்பவும் நெருக்கமான ஒருவன் இருப்பான். அவனோடுதான் ரகசியங்கள் பகிர்ந்துகொள்வோம். காலப்போக்கில் குழு என்பதே வெறுப்பாகிவிடும். நெருங்கிய நண்பனையும் பிடிக்காது. நான் ஒரு தனியன் என்று தோன்றும்.  ஆனால் மனிதனால் அப்படி வாழமுடியாது. அவனுக்கு ஒரு குழு எப்போதும் தேவை. ஆனால் அந்தக்குழு ஒருபோதும் இன்னொரு குழுவின் வளர்ச்சியைத் தடுப்பதாகவோ, வாழ்வியலைக் கெடுப்பதாகவோ இருக்கக்கூடாது என்பதே நமக்குத் தெரிய வேண்டியது.

(Reference book: சாதியின் தோற்றம்- டாக்டர் அம்பேத்கர். எதிர் வெளியீடு)