ஜனவரி 13, 2017

பஷீரின் பால்யகால சகி

பால்யகால சகிகளைப் பொறுத்தவரை நான் கொடுத்துவைத்தவன்தான். சுற்றிலும் பெண்கள் சூழ கிருஷ்ண பரமாத்மா போல வாழ்ந்திருகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக  பால்யகாலத்திலிருந்து வெளியேறும்போதே சகிகளும் போய்விடுகிறார்கள். பிறகு வேறொருநாள் சகிகளைச் சந்திக்கும்பொழுது வாழ்க்கை வேறுவிதமாக மாறிவிடுகிறது. ரசனைகள் மாறிவிடுகிறது ,அந்த ஈர்ப்பு இல்லாமலாகிவிடுகிறது. முகம் முழுக்க மஞ்சளை அரைத்துத் தேய்த்து தன் கருநிற முகத்தை மஞ்சளாக்கிக் கொண்ட ஒரு சகியின் அழகு என்னை பால்யத்தில் பலநாட்கள் தூங்கவிடாமல் செய்தது. ஆனால் இன்றைக்கு கருநிற முகத்தில் மஞ்சளிட்ட ஒருத்தி எனக்குப் பிடித்தவளல்ல. உண்மையில் பால்யத்தில் நமக்கு எல்லோரையும் பிடிக்குமோ? பெஞ்சில்லாத வகுப்பறையின் மதிய உணவு இடைவேளையில் டீச்சர்  தூங்குவதற்காக எங்கள் எல்லோரையும் தூங்க சொன்னபொழுது கீழே படுத்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு  நீலநிறப் பாவாடை கொஞ்சம் மேலேறி தன் கால்களின் தசையை அசைத்து அசைத்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை நான் காதலித்தேன் என்பது இன்றும் எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. நானும் என் கால் தசைகளை அவ்வாறே அசைத்துப் பார்த்தேன். அவளை போல கால்களை ரசிக்கவோ, அசைக்கவோ என்னால் இயலவில்லை.ஆண்டுகளுக்குப் பிறகு அவளையே என்னால் ரசிக்க முடியவில்லை. பால்யத்தில் அழகின்மை என்ற ஒன்றே இல்லையென்று தோன்றுகிறது. அழகின் வரையறையாக பால்யம் உலகம் என்று வைத்துக்கொள்வதால்தான்  பால்யம் அவ்வளவு அழகாக இருக்கிறது.

பஷீரின் மஜீதும், சுஹ்ராவும் உயர்ந்த மலைமேல் கிராமத்தையே முழுதாய் ரசித்துப்பார்க்கும் அளவிற்கு மன மாளிகை கட்டுகிறார்கள். ராஜகுமாரியும், ராஜகுமாரனுமாய் வாழ்கிறார்கள். ஆனால் காலம் அந்த பால்யத்தின் மாளிகைகளை தகர்த்துவிடுகிறது.மாளிகையை தகர்த்த காலம், காதலர்களின் ஒன்றுகூடுதலையும் தடுக்கிறது ஆனால் காதலைத் தகர்க்கவில்லை.

பால்யத்தின் காதல் நிச்சயமாக காலக்கெடு உடையதுதான். ஆனால் சுஹ்ரா- மஜீத் விஷயத்தில் அது நடக்கவில்லை. அவர்கள் காதல் என்றைக்கும் இருக்கிறது. காரணம் அவர்கள் அருகருகே வசிப்பவர்கள். தினந்தோறும் உரையாடிக்கொள்பவர்கள். காதலைத் தினமும் புதிப்பித்துக்கொள்கிறவர்கள். பரிசுத்தமான காதலின் வழியே வாழ்வின் சோக கணங்களை பேசும் இப்புனைவு கொஞ்சம் கமர்ஷியல் தன்மையுடையது என்பதை மறுப்பதற்கில்லை.

பால்யத்தின் காதல் காலக்கெடு உடையதென்றாலும் காதல் என்பது உண்மையிலேயே இருக்கும் காலமாக பால்யம்தான் இருந்தது. எனக்கொரு சிநேகிதி, சிநேகிதி தென்றல் மாதிரி என்று விஜய்யும் சிம்ரனும் திரையில் ஆடிக்கொண்டிருந்தபொழுது நானும் அந்த கால்தசை அழகியும் என் மனதில் ஆடிக்கொண்டிருந்தோம். அன்றைக்கு அவளுக்கு எவ்வளவு சொத்து இருந்தது, அவள் என்ன சாதி எதுவும் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லாது இருந்தது.  அவள் வேலையும், சம்பளமும் எனக்கு பிரச்சனையில்லை. வேலைக்குப் போவது சமூகக்கடமை என்றே எனக்குத் தெரியாது. உண்மையில் இந்த யோசனைகள் ஏதுமின்றி உலகையே தனதாய்க்கொண்டுதானே மனிதன் வாழ்ந்திருக்கவேண்டும்? அப்போது இளமையும், முதுமையும் எல்லாம் பால்மாயிருக்கக்கூடும். மனிதன் காதலற்றுப்போனதால்தானே பிரிவினைகளே ஆரம்பமானது.

கொப்புளத்தால் கால் வீங்கியிருக்கும் வேளையில் மஜீதின் கால்பாதத்தில் முத்தமிடுகிறது சுஹ்ராவின் உதடு. காதல் அப்போது காமமாய் விரிகிறது. உதடு, நெற்றி, கன்னம் எங்கும் முத்தம்.  அந்தப் பரவசம் அவன் கால் கொப்புளத்தை உடைத்து வாழ்வை வலியில்லாமல் செய்துவிடுகிறது.   அப்போது எனக்கு பதிமூன்று வயதில் என் பின்புறத்தில் ஊசி போடுவதாய் சொல்லிக் கிள்ளி வைத்த ஷர்மியின் நினைவுகள் வந்தது. அந்த ஸ்பரிசத்தில்தான் என்னில் காமம் புகுந்தது. எனக்கு கொஞ்சமும் வலிக்காமல் கூச்சமூட்டிய ஒரே ஊசி அதுதான்.

காலவோட்டத்தில் மீண்டும் மஜீதிற்கு வலிகளும், வேதனைகளும் வருகிறது. ஆனால் சுஹ்ரா இல்லை. உண்மையில் அவனுக்கு யாருமே இல்லை. அவன் தனியனாய் உலகம் சுற்றுகிறான். வாழ்க்கையின் வலிகளை தனியனாய் தாங்குவது எப்படியென்று அறிகிறான். மறுபுறத்தில் சுஹ்ராவும் பால்யத்திலிருந்து வெளியேறி வாழ்க்கையை அறிந்துகொண்டிருக்கிறாள்.

மீண்டும் வீடு, மீண்டும் வேலை. சாமானியனின் வாழ்க்கை சிக்கல்கள் அவனை அலைகழிக்கிறது. இறுதியில் அவன் வீடற்றவனும், சுஹ்ரா அற்றவனுமாய் ஆகிறான். அந்தக் கணத்தில் அவன் வாழ்க்கையை வெறுமனே நோக்கிக்கொண்டு நிற்கிறான். மாம்பழங்கள் பறித்து பகிர்ந்துண்டு,  செடிகள் நட்டு, செம்பருத்திப் பூச்சூடி, மன மாளிகை கட்டி வாழ்ந்த வாழ்க்கை, காலிழந்து, காதலிழந்து போன யதார்த்தத்தின்முன் கைக்கட்டி வேடிக்கை பார்க்கிறான். ஒன்றும், ஒன்றும் எத்தனை என்ற வாத்தியாரின் கேள்விக்கு இரண்டும் ஒவ்வொன்றாய் வந்து இறுதியில் ஒன்றாய் இணைந்து பெரிய ஒன்றாகிய ஆறுகளை மனதில் வைத்து பெரிய ஒன்று என்று சொன்ன பால்யத்தை எண்ணிச் சிரிக்கிறான். அந்தப் பெரிய ஒன்றாகத்தான் அவன் சுஹ்ராவோடு இணைய நினைத்தான்.

இசுலாமிய சமுதாயத்தின் உடை, ஆபரண சம்பிரதாயங்களை ஒரே ஒரு இடத்தில் இந்த நாவல் கேள்வி கேட்கிறது.அது எல்லா சமுதாயங்களுக்கும் பொருந்திவரக்கூடியதுதான்.மற்றபடி பால்யம் முதல் கதை சொல்லும் இக்குறுநாவல் பால்யம் முடிந்தபிறகு எங்கும் சோகம் விதைக்கிறது. தாங்கொணா பாரமொன்றை, கண்ணீரை இறுதியில் இட்டுச்சென்றாலும் அதுதவிர்த்து மிகச்சிறந்த கதைகளில் ஒன்று என இதைச் சொல்வதற்கில்லை. ஒரு சிறுகதை சொல்லல்முறையில் வெகுவேகமாக செல்லும் இப்புனைவு நிச்சயம் படிக்க வேண்டிய ஒன்றென்றும் சொல்வதற்கில்லை. துவக்கநிலை வாசகனுக்கான கதை, இலக்கிய வெறியர்களுக்கு ஏற்றதல்ல. பால்யகாலத்தின் நினைவுகளில் மீண்டும் வாழ்ந்து பார்ப்பதற்கு ஒருமுறை படிக்கலாம்.