ஜனவரி 15, 2017

ஜல்லிக்கட்டு சில கட்டுரைகள்

நான் இன்றைய நிலையில் தமிழில் மூன்று பேரை முக்கிய சிந்தனையாளர்களாகக் கருதுகிறேன். அவர்களின் கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கவும் செய்கிறேன். அவர்கள் ஜெயமோகன், சமஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் கணபதி. மூன்று பேரும் ஜல்லிக்கட்டு குறித்து எழுதியிருக்கிறார்கள்.

மூன்று பேரின் கட்டுரைகளிலும் பொதுவான கருத்தென்பது ஜல்லிக்கட்டிற்கான எதிர்ப்பும், தடையும் நம் சூழலில் இருந்து வெளிவரவேண்டுமே தவிர PETAவிலிருந்து வரக்கூடாதென்பதாகும். இது மிக முக்கியமான பார்வையும் ஏற்றுக்கொள்ளத்தக்கதும் ஆகும். ஆனால் பெருமிதங்களில் ஊறித்திளைக்கும் எந்த சமூகமாவது தனது  வெற்றுப் பெருமிதத்தைத் தானாகவே தடை செய்யுமா எனும் கேள்வி எழுகிறது. அதனைத் தவிர்த்து பார்க்கும்பொழுது PETAவின் மூலம் செய்யப்படும் சதிகள் நிச்சயமாக முறியடிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்திருக்க முடியாது.

ஜல்லிக்கட்டு நடத்தப்படாவிட்டால் நாட்டு மாடுகள் எவ்வாறு அழியும் என்ற கேள்விக்கு சமஸ்  ' மனிதர்கள் மாட்டைச் சுரண்டத்தான் செய்கிறார்கள். ஆனால் அந்த சுரண்டலின் மூலம்தான் மாடும் மனிதனும் உயிர்வாழ முடியும் ' என்று சொல்கிறார். இதைத்தான் நானும் சொல்கிறேன். மாடுகள் மீது எங்களுக்குப் பாசம் என்கிற பொய்களை நாம் புறந்தள்ள வேண்டியிருக்கிறது. மாடுகளை மனிதன் பயன்படுத்துகிறான். அதில் பாசம் இல்லை. மனித இருத்தலுக்கான செயல்பாடு அது. அது பயன்படாதபட்சத்தில் அதை அடிமாடாக அனுப்புகிறான்.  காளைகளை உண்மையிலேயே நீங்கள் நேசிப்பதாக இருந்தால் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லையென்றாலும் அவை வளர்த்தப்படத்தானே வேண்டும்? காளைகள் அழியுமேயானால் PETAவைக் குற்றஞ்சாட்டவேண்டுமா இல்லை தேவைகளுக்காக மட்டுமே ஒன்றைப் பயன்படுத்துகிற மனிதர்களைக் குற்றஞ்சாட்ட வேண்டுமா என்பதே கேள்வி.

கார்ல் மார்க்ஸ் பதிவில் Mayilan G Chinnappan அவர்களின் பின்னூட்டம் முக்கியமானது. ஜல்லிக்கட்டு என்ற வெற்றுப்பெருமையின் மூலம் விரைப்பைகளை இழந்த, உயிரை இழந்த, வாழ்வை இழந்த மனிதர்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்கு யார் பதில் சொல்லப்போகிறார்கள் என்று அவர் எழுப்பியுள்ள கேள்வியை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

PETAவிற்கு எதிரான போராட்டம் என்பது நாட்டு மாடுகளை வளர்த்திக் காட்டுவதில்தான் இருக்கிறதே தவிர ஜல்லிக்கட்டு நடத்துவதில் இல்லையென்றே நினைக்கிறேன்.

ஜல்லிக்கட்டுக்கு இளைஞர்கள் எழுச்சியடைந்து போராட்டம் நடத்துவதாகத் தெரிகிறது. இதற்குமுன்பு இதே போன்றதொரு போராட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நடந்தது. இந்த இரண்டு பிரச்சனைகளிலும் போராட்டம் என்பது தமிழக அரசிற்கு எதிரானது இல்லை என்பதைப் பார்க்கவேண்டியிருக்கிறது. இரண்டு போராட்டங்களிலும் தமிழக அரசின் ஆதரவு நேரடியாகவோ, மறைமுகமாகவோ இருக்கிறது. பலபேரின் இனம் சார்ந்த தூண்டுதல்கள் இளைஞர்களை மூளைச்சலவை செய்துள்ளது. தனது வாழ்வியல் பிரச்சனைகளுக்காக ஒரு இளைஞனாவது தமிழக அரசை எதிர்த்து தமிழகத்தில் இவ்வளவு எழுச்சியை பெற்றுவிட முடியுமா என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.