ஜனவரி 18, 2017

தமிழ் தேசியமும் போராட்டங்களும்

திராவிட அரசியலில் இருந்து தமிழ் தேசியம் நோக்கி இன்றைய இளைய தலைமுறை முன்னகர்வதின் துவக்கப்புள்ளியாக இந்தப் போராட்டத்தைப் பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக ஒரு இனம் வஞ்சிக்கப்படுவது மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்துவதன்மூலம் இன உணர்வைத் தூண்டிவிடுவதில் தமிழ் தேசியவாதிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். திராவிடமோ அல்லது தமிழ் தேசியமோ எதுவாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை தரும் ஆட்சிமுறை ஏற்படத்தான் அனைவரும் விரும்புவார்கள். தமிழ் தேசியம் எதிர்க்கவேண்டிய ஒன்று இல்லை என்றாலும் தமிழ் தேசியத்தை முன்னெடுப்பவர்கள் யார்? அவர்கள் கொள்கைகள் என்ன என்பதை சிந்திக்க வேண்டியிருக்கிறது.
இனம் சார்ந்த அரசியல் என்பது இனத்தின் நன்மைக்காக இருக்க வேண்டுமே ஒழிய இனப்பெருமையால் பிற இனங்களை வெறுப்பதாக இருக்கக்கூடாது. ஆனால் இன்றைக்கு இந்தப்போராட்டங்களின் பின்ணணியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் தேசியவாதி சீமான், வடுக வந்தேறிகள் என்று சிலபேரைக் குறிப்பிட்டு அவர்களிடமிருந்து அதிகாரங்களைப் பறிப்பதை, அவர்களை தமிழக நிலப்பரப்பிலிருந்து அகற்றுவதை தனது கொள்கையென்று கொண்டவர்.
இதே இன அரசியலைத்தான் ராஜபக்சே இலங்கையில் செய்தார். சிங்கள மண்ணிலிருந்து, சிங்களர்கள் தமிழர்களை விரட்டும் அரசியல். அதை எதிர்க்கும் சீமான் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார். ஆனால் அதே சீமான் தமிழகத்தில் முரணாக இனவாதத்தை முன்வைக்கிறார். சிங்களர்கள் தமிழர்களை விரட்டுவதற்கும், நாம் தமிழர்கள் வடுகர்களை விரட்டுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
பாரதிய ஜனதாவின் இன்னொரு முகம்போல, நாம் தமிழர் முருகன் எங்கள் முப்பாட்டன் என்று சொல்கிறபொழுது மதச்சார்பின்மைதான் அவர்கள் கொள்கையா என்னும் கேள்வி எழுகிறது.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டை தனியாகப் பிரித்துக்கொடுங்கள் என்கிற கோஷமும் எழுந்துள்ளது. அரசியல் புரிதலற்ற விளையாட்டான இளைஞர்களின் குரலாகத்தான் இதைப் பார்க்கவேண்டும். தமிழகத்திற்கு தேவையான வேலைவாய்ப்புகளை நம்மால் உருவாக்க முடியாத காரணத்தினால்தான் நமது இளைஞர்கள் பெங்களூரிலும், ஹைதராபாத்திலும் வேலைதேடிக்கொண்டிருக்கிறார்கள், வேலை பெற்றிருக்கிறார்கள். அவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்வோமா? நாட்டின் தென்கோடியில் இருப்பதால்தான் பெரிய அளவிலான தாக்குதல்கள் இங்கு நடப்பதில்லை. இது தனிநாடாகும் பட்சத்தில் பாதுகாப்பிற்காக செலவு செய்வதில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்தியா மிக எளிதாக நம்மைத் தாக்கிவிடும். எனவே தனிநாடு என்பதெல்லாம் எளிதில் நடந்தேற முடியா கற்பனைகள். நீண்டகால திட்டமிடுதல்கள் அதற்கு தேவை. ஒரு நாட்டை நிர்வகிப்பதென்பது ஒரு மாநிலத்தை நிர்வகிப்பது போன்றதல்ல. மாநில நிர்வாகமே எப்படி இருக்கிறதென நமக்குத் தெரியும்.
நமது இளைஞர்கள் திரைப்பட கதாநாயகர்கள் போல் ஒரே நாளில் எல்லாமே செய்துவிட முடியும் என நினைக்கிறார்கள். அதற்கு திரைப்படக் கதாநாயகர்களின் சந்தர்ப்பவாத ஆதரவையும் பெற்றிருக்கிறார்கள். இன உணர்வு ஏற்றப்பட்டு சில பேரின் அரசியல் லாபங்களுக்காக பகடைக்காய் ஆக்கப்படுகிறார்கள். ஒரு இளைஞனாக,  இளைஞர்களோடு தொடர்ந்து பழகும் எனக்கு அவர்களின் அரசியல் புரிதல்களும், சிந்தனைகளும் தெரியும். வெறுமனே உணர்ச்சிக் கொந்தளிப்பில் அரங்கேறிக்கொண்டிருக்கும் காட்சிகள் இவை. தங்களோடு பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அரசு அதிகாரிகளை 'நீங்க சொல்றது கேட்கல' என அவமதித்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தின் ருசியை சுவைத்து உண்டுகொண்டிருக்கிறார்கள்.  பேச்சுவார்த்தைக்கு அழைப்பவர்களைக் கிண்டல் செய்வதெல்லாம் எவ்வகையான போராட்டம்?  ஆனாலும் இரவு முழுவதும் அங்கேயே அமர்ந்து போராடிக்கொண்டிருக்கும் என் இளம் நண்பர்கள் பாராட்டுக்குரியவர்கள், பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் தங்கள் இனத்தின் பெருமைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் தங்கள் இனத்திற்குள்தான் தங்கள் வாழ்வியல் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை உணராதவர்களாக இருக்கிறார்கள்.