ஜனவரி 27, 2017

அடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம்

மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன். சில எலிகள். எலிகள் சகோதரனின் உடலை, ஆடைகளைப் பதம் பார்க்க எலிப்பொறி வைத்து எலிகள் பிடிக்கப்பட்டு குளத்தில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. ஆனால் இந்த சகோதரிகளும் ஒரு எலிப்பொறியில் மாட்டிக்கொண்டவர்கள்தான். அந்த எலிபிடிப்பானில் இருந்து ஒவ்வொருவரும் விடுபட்டுச் செல்லுதலே எலிப்பத்தாயத்தின் கதை.

இந்தத் திரைப்படத்தின் பல காட்சிகள் ஒருவித குற்றவுணர்வை எனக்கு ஏற்படுத்தியது. இன்றைக்கு நிலைமை மேம்பட்டு வந்தாலும் ஆண்டாண்டுகாலமாக நம் அம்மாக்கள் சமையலறையில் அடைபட்டுத்தான் கிடக்கிறார்கள். கணவனும், பிள்ளைகளும் அவளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் அம்மாக்களே இதை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள் அல்லது வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டு பிறகு விரும்பிவிட்டார்கள் என்று சொல்லலாம். அம்மாக்கள் தங்கள் வாழ்வியலாக, அவர்கள் உலகமாக, பிள்ளைகளையும், கணவனையும், சமையலறையையும் வைத்துக்கொண்டார்கள். நான் என் அம்மாவிடம் ஏதாவது உதவி செய்யட்டுமா என்று எப்போதாவது கேட்பேன். அம்மா சரி என்று சொல்லி நான் அதைச் செய்தால்கூட அம்மாவிற்கு மனத்திருப்தி கிடைப்பதில்லை. நான் கழுவிய பாத்திரத்தையோ, துவைத்த துணியையோ இன்னொருமுறை அவர்களே கழுவினாலோ, துவைத்தாலோதான் ஒரு மனத்திருப்தி ஏற்படுகிறது. " இப்போதான் அழுக்கு நல்லாப் போச்சு" என்பார்கள். அவர்கள் உலகத்தில் யாரும் தலையிடுவதையே அவர்கள் விரும்புவதில்லை என்று நினைத்துக்கொள்வேன்.

எலிப்பத்தாயத்தில் இப்படி வேலையே கதியாகக் கிடக்கிறாள் நாயகனின் இரண்டாம் சகோதரி. உடலை சிறிதும் அசைக்காமல் உட்கார்ந்திருக்கிறான் நாயகன். ஒரு பசு வீட்டின் முன் வளர்ந்து நிற்கும் செடியொன்றை தின்றுகொண்டிருக்கிறது. அதை திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் நாயகன் சில அடிகள் நடந்து சென்று அதை விரட்டும் சோம்பேறித்தனத்தில் சமையலறையில் இருக்கும் தன் சகோதரியை அழைக்கிறான். அவள் ஓடிவந்து பசுவை விரட்டுகிறாள். இன்னொரு காட்சியில் இரண்டாம் சகோதரி நோய்வாய்ப்பட்டு விட , தினமும் சுடுநீரில் குளிக்கும் நாயகன் இளைய சகோதரி, மூத்த சகோதரி என ஒவ்வொருவரையும் சுடுநீர் வைக்கச் சொல்லி அணுகுகிறான். தானே சுடுநீர் வைப்பதை ஒரு அவமானமாகவே கருதுகிறான்.

மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வதையே தன் வாழ்வியலாகக் கொண்டு வாழ்பவன்தான் நாயகன். நிலவுடமையாளனான அவன் விவசாயத்திற்கு ஆட்களைப் பயன்படுத்திக் கொள்கிறான், தன் தேவைகளுக்கு சகோதரிகளைப் பயன்படுத்திக்கொள்கிறான். ஆனால் அவர்களுக்கு தேவையானதை ஒருபோதும் செய்வதில்லை. இதை மூன்று சகோதரிகளும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் எலிப்பத்தாயத்தின் கதை.

ஆண் ஆதிக்க சமூகத்தின் நடைமுறைகளை இத்திரைப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது. இது ஒரு புரட்சித் திரைப்படம்போல ஆதிக்கத்துக்கு எதிரான தீர்வுகளை முன்வைக்கவில்லை. இலக்கியம்போல யதார்த்தத்தை பதிவு செய்கிறது. அந்த வாழ்வியல் பதிவுகளின் மூலம் மறைமுகமாகத் தீர்வுகளைத்தான் முன்வைக்கிறது என்பதை நாம் கண்டுகொள்ள முடியும்.

இந்தத் திரைப்படத்தைப் பார்த்த பிறகு அடூர் கோபாலகிருஷ்ணனின் இத்திரைப்படம் சார்ந்த பேட்டியொன்றைப் பார்க்க முடிந்தது. அது இந்தத் திரைப்படம் பற்றிய பல புதிய தகவல்களை, பார்வைகளைத் தந்தது. முதல் சகோதரி சூழலை அறிவுபூர்வமாகக் கையாண்டு சூழலிலே வாழ்வதால் அவளுக்கு பச்சைநிற உடை(practical) படம் முழுக்கத் தந்திருப்பதாய் அடூர் கோபாலகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். இதேபோல் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் சகோதரிக்கு நீல நிற உடையும்(submissive) எதையும் ஏற்றுக்கொள்ளாத சகோதரிக்கு சிவப்பும்(bold) படம் முழுக்கத் தரப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபொழுது இது இந்தியச் சூழலுக்கான படம் என தான் சொன்னதாகவும் அதற்கு மறுமொழியாக லண்டன்வாசிகள், நவீன வாழ்க்கை முறைக்குச் சென்றுவிட்டாலும் தங்கள் நிலைமையும் இதுதான் எனச் சொன்னதாகவும் கோபாலகிருஷ்ணன் சொல்கிறார். ஆண்கள் பலரும் தங்களையே நாயகன் பாத்திரத்தில் உணர்ந்ததாக சொன்னதாகவும் சொல்கிறார். மொழிகளும், நில அமைப்பும் வேறுபட்டாலும் மனிதர்கள் எல்லாவிடங்களிலும் மனிதர்கள்தான் என்ற அவருடைய வார்த்தைகள்தான் எவ்வளவு சத்தியமானவை.

இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் முக்கியமானது, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணநலன்களையும் ஒவ்வொரு காட்சியிலிருந்தும் எடுத்துக்கொள்ள முடியும். திருமணத்திற்கு செல்லும் நாயகன் வழியில் சேறைப் பார்த்ததும் திரும்பி வருவது ஏன், நாயகன் அவன் சகோதரிக்கு திருமணம் செய்து வைக்காதது ஏன் என ஒவ்வொரு காட்சியிலும் சிந்தித்து அறிய பல விஷயங்கள் உள்ளன. எலிப்பொறியில் தேங்காய் துண்டை வைத்து விட்டு எலியைப் போல் கைகளைக் கொண்டுச் செல்லும் இளஞ்சிவப்பு உடையணிந்த சகோதரி எலிப்பொறியில் மாட்டிக்கொள்வதில்லை என்பது ஒரு குறியீடு.

வீட்டில் படுக்கையில் வெறுமனே படுத்துக்கிடக்கும் பொழுது கொஞ்சம் உஷ்ணமாக இருப்பதுபோல் உணர்வோம். கைக்கெட்டும் தூரத்தில் ஃபேன் ஸ்விட்ச் இருக்கும். ஆனால் போட மாட்டோம். ஏதாவது வேலை செய்துகொண்டிருக்கும் அம்மாவை அழைத்து " அம்மா. ஃபேன் போடு" என்போம். ஆனால் எல்லோரும் ஊருக்குப் போய்விட்ட நாளில் அம்மாவை அழைக்க முடியாதென்பதால் நாமே போட்டுக்கொள்வோம். உஷ்ணத்தில் வெந்து சாகமாட்டோம். இதுவே இப்படம் சொல்லும் செய்தி.