பிப்ரவரி 12, 2017

பின்நவீன அரசியல்

கடந்த குடியரசு தினத்தன்று ,சமீபத்தில் அறிமுகமான பெண் ஒருவர் Whatsappல் ஒரு வீடியோ அனுப்பியிருந்தார். பொதுவாகவே நமக்கு பெண்கள் வீடியோ அனுப்பும் பழக்கம் கிடையாதே என்று ஆவலோடு தரவிறக்கம் செய்தேன். ஒரு குடும்பத்தில் கை, கால் செயல்படாத தாத்தா சக்கர நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார்.அவரது மகன் எங்கோ செல்வதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார். மருமகள் அவர்கள் குழந்தைக்கு உணவூட்டிக் கொண்டிருக்கிறார். தீடீரென தொலைக்காட்சியில் தேசிய கீதம் ஒளிபரப்பப்படுகிறது. மகனும், அவர் மனைவியும் அதைக் கண்டுகொள்ளவில்லை. உடல் செயலிழந்த தாத்தாவின் உடலில் வெறி ஏறுகிறது, கை, கால்கள்  நடுங்குகிறது. உடல் செயல்பட ஆரம்பித்து உணர்ச்சி மேலிட எழுந்து நின்று சல்யூட் செய்கிறார். அதைப் பார்த்து வெட்கித் தலைகுனியும் மகனும், மனைவியும் அவர்களும் எழுந்து நின்று சல்யூட் அடிக்கிறார்கள். இதைப்பார்த்து எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. பெண்கள் வீடியோ அனுப்புவதே அபூர்வம் எனும்போது,  அனுப்பப்பட்ட வீடியோவிற்கும் செம காமெடி என்று பதில் கொடுத்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். இந்த Valentines dayவிற்கும் நான் சிங்கிளாக இருப்பதன் காரணம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமென்று நம்புகிறேன்.

இவ்வாறெல்லாம் நாட்டு வெறியை,இன வெறியை,மத வெறியை ஊட்டி அதன்மூலம் அரசியல் செய்து மக்களை இனியும் எவ்வளவு காலம் முட்டாளாக்கப் போகிறார்கள்? நிர்வாக வசதிகளுக்காக நிலப்பரப்புகளை பிரித்து நாடென்றும்,மாநிலமென்றும் அரசியல் செய்வது என்பது தவிர்க்க இயலாததே. ஆனால் நல்ல வாழ்வியலுக்கான வாய்ப்புகளையே வழங்காமல் தொடர்ந்து தமிழன்டா, இந்தியன்டா என்று வெற்றுப் பெருமைசார் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு செய்யும் அரசியல் என்பது பின்நவீன காலத்திற்கான அரசியல் அல்ல.

நான் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய பதிவில் ஊட்டப்படும் நாட்டுவெறி குறித்து எழுதியிருக்கிறேன். நாடுகள் தங்கள் பெருமைகளை பறைசாற்றிக்கொண்டு, தங்களில் யார் பெரியவன் என்று காட்டிக்கொள்வதைத் தவிர ஒலிம்பிக்கினால் என்ன பயன் இருக்கிறது? தங்கமோ,வெள்ளியோ நீங்கள் வாங்கி வருவீர்கள். எங்களுக்கு வெண்கலக் கிண்ணமாவது கிடைக்கிறதா? ஜூவாலா கட்டாவும், பங்கஜ் அத்வானியும் தங்களுக்கு ஏன் பத்ம விருதுகள் தரவில்லை எனக் கேட்கிறார்கள். உங்களுக்கு ஏன் தரவேண்டும்? நாடு என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு ஒரு பூப்பந்தை தட்டினால், ஒரு குச்சியை வைத்து நான்கு பந்துகளை தட்டினால் உங்களுக்கு பத்ம விருதுகள் தந்துவிட வேண்டுமா? வெயிலில் சாகிற பாமரர்களுக்கு என்ன விருதுகள் தருகிறார்கள்? முதலாளித்துவத்தால் சாகிற தொழிலாளர்களுக்கு நாடு என்ன விருது தருகிறது? நான் விளையாட்டை எதிர்க்கவில்லை, வெறுக்கவும் இல்லை. அதை வாழ்வியலுக்கான ஒரு வழியாக, ஒரு தொழிலாகப் பார்க்கிறேன். அதை நான் பார்த்து ரசிக்கவும் செய்வேன். ஆனால் ஏன் அதற்கு மட்டும் சலுகைகள் என்றுதான் கேட்கிறேன். விளையாட்டு வீரன் என்று அழைக்கிறீர்கள். ஒரு கட்டையை வைத்து பந்தை அடிப்பதில் என்ன வீரம் இருக்கிறது? உலகத்தில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வாரியம் BCCI. இது எப்படி நிகழ்ந்தது? தொடர்ந்து நாட்டுவெறியை ஊட்டி இந்தியன்டா என்று எங்களை கத்த வைத்து டிக்கெட் வாங்க வைக்கிறீர்கள் ,அதனால் சம்பாதிக்கிறீர்கள்.

நான் எல்லா வெறியையும் எதிர்க்கிறேன். தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்கிறீர்கள். எனக்குத் தெரிந்ததே தமிழ் மட்டும்தான் என்றால் அதனை எப்படி மற்ற மொழிகள் எதனோடும் ஒப்பிடாமல் இனிமையானது என்று ஒப்புக்கொள்ள முடியும்? நாடும், மொழியும், மதமும், சாதியும் நான் தேர்ந்தெடுத்துக்கொண்டதல்ல. அது பிறப்பில் என்னோடு ஒட்டிக்கொண்டது. அதற்காக வக்காலத்து வாங்கி, அதன் பெருமைகளுக்காக மட்டுமே அரசியல் செய்து அழிவதென்பதை எவ்வளவு நாள் ஏற்றுக்கொள்வது?

பின்நவீன அரசியல் என்பது நிர்ணயிக்கப்பட்ட கொள்கைகள் அற்றது. பின் நவீன அரசியல் என்பது தமிழ் தேசியமோ, இந்திய தேசியமோ, திராவிடமோ, கம்யூனிசமோ, கேப்பிட்டலிசமோ அல்ல. எல்லாக் கொள்கைகளின் கலவையான , முன்கூட்டியே தீர்மானித்த  கொள்கைகள் இல்லாத அரசியலே  பின்நவீன அரசியல். அது மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை சூழலுக்கேற்ப முன்வைப்பது,  மக்களின் நன்மைகளை மட்டுமே முன்னிறுத்துவது, கொள்கைகளை சொல்லி ஏமாற்றுவதல்ல.