ஏப்ரல் 13, 2017

ஏன் இங்கு காதல் இல்லை?

நம் சூழலில் ' காதல் ' என்ற வார்த்தையால் குறிப்பிடப்படுவது எதுவென்று அறிந்துகொள்ள முதலில் காதலற்றது எது என்று தெரிந்துகொள்ளவேண்டும். நான் என்னுடைய ஆண் நண்பனுடன் தினமும் பேசுகிறேன், விவாதிக்கிறேன். அவனுடன் உடல்உறவில் ஈடுபடுவதில்லை. இது காதல் என்று சொல்லப்படாமால் நட்பு எனப்படுகிறது. நான் என் தோழியோடு தினமும் பேசுகிறேன். ஆனால் அவள் உடல் எனக்குப் பொருட்டல்ல என்றால் அதுவும் நட்புதான். இதற்கு மாறாக நான் ஒரு பெண்ணுடன் தினமும்  பேசுகிறேன், அவள் தன்னுடைய உடலைத் தொட என்னை அனுமதிக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். இதுதான் இங்கு காதல்.

ஆக இங்கே கட்டமைக்கப்படும் காதல் முழுக்க முழுக்க உடல் சார்ந்ததுதான். நம் சூழலில் பரவியிருக்கும் பாலியல் வறட்சிக்கான தீர்வாகத்தான் காதல் முன்வைக்கப்படுகிறது. ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பழக வேண்டிய தேவை என்ன என்கிறபொழுது காமம் மட்டுமே முன்னால் துருத்திக்கொண்டு  நிற்கிறது. நான் காதலிக்கிற ஆணுக்கு/ பெண்ணுக்கு இந்தத் தன்மை இருக்கிறது, அது எனக்குப் பிடித்திருக்கிறது, எங்கள் சிந்தனைகள் ஒத்துப்போகிறது, எனக்கும் அவளுக்கும் சாப்டியா? என்ன சாப்ட என்ற கேள்வியைத் தவிர பேசுவதற்கு ஆயிரம் விஷயம் இருக்கிறது என்று காதலிக்கிற எத்தனைபேரால் சொல்லமுடியும்? பெண்ணின் உடலைத் தவிர எனக்கு தேவைப்படுகிற அத்தனையும் என் ஆண் நண்பனே தந்துவிடுவானென்றால் பெண்ணின் தேவை என்ன என்ற கேள்வி ஆணுக்கும், ஆணின் தேவை என்ன என்ற கேள்வி பெண்ணுக்கும் ஏற்படுகிறது. இந்தக் கேள்விக்கு ' எதிர் பாலினத்தின் உடல்' என்ற விடை இருபாலரிடமும்  தோன்றுகிறது. இதனால் பெண்ணை ஆணும், ஆணைப் பெண்ணும் காமப்பொருளாக மட்டுமே பார்க்கும் நிலைமை ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் இரண்டு பேருக்கும் காமம் சலித்துவிடுகிறது. இதற்குப் பிறகு என்ன செய்வது என்று இரண்டு பேருக்கும் தெரிவதில்லை. காதல் பண்புசார், அறிவுசார் தளங்களில் தோன்றாமல் உடல்சார்ந்து மட்டும் தோன்றுவதுதான் இதற்கு முக்கியக் காரணம். இந்த சலிப்பு திருமணத்துக்கு முன்னால் வந்தால் பிரேக்அப் ஆகிறது. திருணத்துக்கு பின்னால் வந்தால் விவாகரத்து ஆகிறது. பெண் அடக்குமுறையுள்ள குடும்பங்களில் ஒன்றும் நடக்காமல் மனதுக்குள்ளே பொருமுதல் நடக்கிறது.

காமம் சலித்த காலத்துக்குப் பிறகு நம் குடும்பங்களில் பெரும் அமைதி காணப்படுகிறது. ' கடைக்கு போய் காய்கறி வாங்கிட்டு வாங்க' என்பதாக பேச்சு சுருங்குகிறது. ஐபிஎல் லில் டிவில்லியர்ஸ் அடித்த ஷாட்டை சிலாகித்துப் பேச வேண்டுமென ஆணுக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் அவன் மனைவிக்கு/ காதலிக்கு கிரிக்கெட்டே பிடிக்காது. மனைவிக்குப் பிடித்த எம்ப்ராய்டரி வர்க் பற்றிய புரிதல் கணவனுக்கு இருக்காது.

காமம் கண்களை மறைத்துக்கொள்ளும்போது காதலனையோ/ காதலியையோ தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நிகழ்கிறது. கிடைத்தவரைக்கும் லாபம் என்பதாக ஆண்-பெண் உறவுமுறை மாறிப்போகிறது.உடல் ஆசைகள் மட்டுமுள்ள வெளிப்படைத்தன்மையற்ற உறவாக அது இருக்கிறது. எதிர்பாலினம் கையைவிட்டுப் போய்விடக்கூடாதென்கிற காரணத்தால் அக்கறை காட்டுவதுபோல் மனிதமனம் நடிக்கிறது.

காதல் என்கிற நீண்டகால உறவை நாம் சரியாக உணரவேண்டுமென்றால் அதை முழுமுற்றாக காமத்தோடு தொடர்புபடுத்துவதிலிருந்து வெளிவரவேண்டியிருக்கிறது. காமத்தை காதலின் ஒரு பகுதியாக மட்டும் கொள்ளவேண்டியிருக்கிறது. பெண்ணை ஆணும், ஆணைப் பெண்ணும் இயல்பாகப் புரிந்துகொள்ள முதலில் உடலைக் கடந்துவர வேண்டியிருக்கிறது. ஒரு உணர்வெழுச்சியில் ஒரு பெண்ணுடன் உடல்சேர்க்கையில் ஈடுபட்டேன் என்பதாலேயே அது காதலாகிவிடாது என்ற புரிதல் நமக்கு தேவைப்படுகிறது.  எதிர்பாலினத்தோடு தொடர்ந்து பழகவேண்டிய தேவை இருக்கிறது. காமத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை எளிதாக்கவேண்டியிருக்கிறது. காமத்தை இயல்பாக கடக்கும்பொழுதுதான் எதிர்பாலினம் sex toy மாதிரித் தெரியாமல் human being ஆகத் தெரியும். ஆனால் என்ன ஏதென்றே தெரியாமல் +2 படிக்கும்போதிலிருந்து காதலித்து இன்னமும் கழட்டிவிடாமல் இருப்பவர்களும், அரேஞ்ச்டு மேரேஜ் செய்துகொள்பவர்களும் துரதிர்ஷ்டக்காரர்கள்தான். அவர்கள் விதியை நொந்து அப்படியே வாழவேண்டியதுதான்.