ஏப்ரல் 28, 2017

சென்னை எனும் பிம்பம்

கடந்த இரண்டு வாரங்கள் எனக்கு கடுமையான சோதனைக் காலம்.  நைட் ஷிப்டு ஆரம்பித்ததுமுதல் கால்வலியும் சேர்ந்துகொண்டது. இரண்டு நாட்களில் கால்வலியோடு காய்ச்சலும் வந்துசேர்ந்தது. சாதாரண காய்ச்சல்தான் என்று பக்கத்தில் இருந்த கிளினிக்குக்குப் போய் மருத்துவரைப் பார்த்துவிட்டு விடுமுறை எடுத்துக்கொண்டேன். அடுத்தநாள் அலுவலகம் போனால் மறுபடியும் தொந்தரவுகள் ஆரம்பமாகிவிட்டன. ஹே விளம்பி விடுமுறைக்கு அத்தனைபேரும் ஊருக்குப் போய்விட்டதால் அறையிலும் தனிமை. தனிமை என்பது எப்போதுமே எனக்கு ஒரு பிரச்சனையல்ல . சென்னையில் குறைவான வாடகையில் அறை கிடைத்தால் நிச்சயம் தனியாகத்தான் தங்குவேன். ஆனால் தனியாக அறை எடுக்கப்போனால் சாதாரண மேன்ஷனிலே ஏழாயிரம்வரைக் கேட்கிறார்கள். அதனால் ' நட்புன்னா சும்மாவா? உலகத்துலேயே உண்மையான உறவுடா' என்று என்னை நானே நம்பவைத்து கூட்டத்தோடு கோவிந்தா போட்டுக்கொண்டிருக்கிறேன். ஊரில் இருக்கும்பொழுதே நான் புத்தகம் படிப்பது குறைவுதான், இங்கு வந்து நண்பர்களோடு ஐக்கியமாகிவிட்டபின்பு இருந்த கொஞ்சநஞ்ச வாசிப்பும் இல்லாமல் போய்விட்டது. சீட்டுக்கட்டு விளையாடி பொழுதை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

அதனால் தனிமை கிடைத்தால் இன்னும் கொஞ்சம் 'சுதந்திரமாக' இருக்கலாமே, புத்தகம் படித்து அறிவை விசாலமாக்கலாமே என்ற எண்ணமும் இல்லாமல் இல்லை. ஆனால் உடல்நலக்குறைவு வரும்போது தனிமை ரொம்பவும் கொடுமையானதுதான். இந்த நேரத்தில் நம்மை கவனித்துக்கொள்ள நம்மேல் அலாதியான அன்பும், அக்கறையும் உள்ள ஒரு உள்ளம் கண்டிப்பாக தேவை.செக்ஸ் ஒரு பெரிய விஷயமல்ல. அதை காசு கொடுத்துக்கூட அனுபவித்துக்கொள்ளலாம். ஆனால் அத்தனை அன்பையும் நமக்காக அர்ப்பணிக்கிற ஒரு உயிரை (கொஞ்ச காலத்திற்கு அல்லது இருவருக்கும் சலித்துப்போய்விடுகிறவரைதான் என்றாலும்கூட) தேடிக்கண்டுபிடிக்கவேண்டியதன் அவசியத்தை இந்தமாதிரி தருணங்களில்தான் உணர்கிறேன்.

அறையில் அன்றைக்கு சாப்பாடு வாங்கிவரக்கூட ஆள் இல்லை. நாங்கள் தங்கியிருப்பது வேறு மூன்றாவது மாடியில். படுக்கையில் படுத்தபிறகு எழவே மனம் வரவில்லை. கொஞ்சநேரம் தூங்கியபிறகு மதியம் ஒரு மணிக்கு எழுந்தேன். கஷ்டப்பட்டு படி இறங்கி ஒரு ஆரஞ்ச் ஜூஸ் குடித்துவிட்டு, பிரிஞ்சி சாதம் வாங்கிவந்தேன். சாப்பாடை வாய்க்கு அருகில் கொண்டுபோன அடுத்தநொடி குமட்டல் வந்துவிட்டது. இதற்குமேல் முடியாது, ஊருக்குக் கிளம்பலாம் என்று முடிவு எடுத்தேன். ஆனால் எழ முடியவில்லை. மறுபடியும் தூங்க ஆரம்பித்தேன். மாலையில் எழுந்தால் எதுவுமே சாப்பிடாததால் தலைசுற்றலும் ஆரம்பமாகிவிட்டது. கைக்கு கிடைத்த துணியை எடுத்து பையில் திணித்தேன். ஒருவழியாய் படி இறங்கி சாத்துக்குடி ஜூஸ் ஒன்றைக் குடித்துவிட்டு சென்ட்ரலுக்கு பஸ் ஏறினேன்.

இந்தப் பைத்தியக்கார ஊரில் என்றைக்குத்தான் பஸ்ஸில் நிம்மதியாகப் போகமுடிந்திருக்கிறது? கூட்டத்தில் இரண்டு பக்கமும் என்னை நெருக்கிக்கொண்டு ஆள் நின்றதால் கம்பியைப் பிடிக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போனது.Bagஐக் கழட்டு என்று இரண்டுபேர் கத்திக்கொண்டிருந்தார்கள். யாரையோ சொல்வதுபோல் பாவ்லா காட்டிக்கொண்டிருந்தேன். படிவரைக்கும் தொங்கிய கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் பஸ்ஸின் கதவுகளை மூடி , டிரைவர் பொறுப்புணர்ச்சியைக் காட்டிக்கொண்டிருந்தார். இதற்கு இடையில் சில்மிஷம் செய்து ஒருவன்  லோக்கலாக திட்டுவாங்கிக்கொண்டிருந்தான். சில்மிஷ விஷயத்தில் சென்னை எவ்வளவோ பரவாயில்லை. இதுபோன்ற சம்பவங்கள் அரிதிலும் அரிது. கோயமுத்தூர் பக்கம் லேசாக உரசினாலே பெண்டை கழட்டிவிடுவார்கள். இத்தனைக்கும் அங்கே யார்மீதும் தவறு இருக்காது. சடன் பிரேக்கில் ஒரு பெண் மீது லேசாக ஒருவன் மோதியிருப்பான். அந்தப் பெண்ணே நிலைமையைப் புரிந்துகொண்டு எதுவும் சொல்லாமல் விட்டுவிடுவாள். ஆனால் ஓரக்கண்ணால் இதைப் பார்க்கும் கிழவிக்கு பொறுக்காது. வண்டியைப் போலிஸ் ஸ்டேஷனுக்கு திருப்புகிற அளவிற்கு பிரச்சனை போய்விடும்.

சென்ட்ரலில் இறங்கி ஜெனரல் கம்பார்ட்மெண்ட் டிக்கெட் எடுக்கப்போனால் அங்கு வழக்கம்போல கூட்டம். நிற்க முடியாமல் தள்ளாடிக்கொண்டிருந்தேன். ஒரு பதினைந்து நிமிடத்தில் டிக்கெட் கவுன்டரை அடைந்தேன். எங்கிருந்தோ ஓடிவந்த இளைஞன் ஒருவன் "டிரெயினுக்கு லேட் ஆயிடுச்சு, ஆலுவாவுக்கு ஒரு டிக்கெட் எடுத்துக்குடுங்க பிளீஸ்"  என்று ஐந்நூறு ரூபாயை நீட்டினான். சரி,போய்த்தொலையுது என்று அதையும் வாங்கி வைத்துக்கொண்டேன். 'ஐந்நூறு ரூபாயத் தூக்கிட்டு வந்துட்டான்' என்று டிக்கெட் கவுன்டரில் இருந்தவரிடம் திட்டுவாங்கி அவனுக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்துவிட்டு பிளாட்பார்முக்கு வந்தேன். மணி ஏழுதான் ஆகியிருந்தது. டிரெயின் பத்து நாற்பதுக்கு. கொஞ்ச நேரம் அங்கிருந்த சேரில் உட்கார்ந்தேன். உடல் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. அப்படியே பிளாட்பார்மிலே படுத்து தூங்கிவிட்டேன். தூக்கம் கலைந்தபோது மணி ஒன்பது நாற்பது ஆகியிருந்தது. பக்கத்தில் படுத்துக்கிடந்தவன் என்னைப் பார்த்து " என்ன தம்பி தெளிஞ்சிருச்சா?" என்றான். ( பனமரத்துக் கீழ நின்னு பாலக் குடிச்சாலும் moment) . அவனைப் புறக்கணித்துவிட்டு ஏற்காடு எக்ஸ்பிரஸில் ஏறி உட்கார்ந்துகொண்டேன். ஊருக்கு வந்து செக் செய்து பார்த்ததில் மலேரியா, டெங்கு என எல்லாமும் ஒன்றாக வந்து தாக்கியிருக்கிறது. ஐந்து நாள் ஆஸ்பத்திரியில் அட்மிட்.

உறவுகளை விட்டுவிட்டு இதுபோன்ற ஒரு பெருநகரத்தில் வந்து ஏன்தான் சிக்கிக்கொள்ளவேண்டும்? முழுக்க  பொருளியல் சார்ந்த வாழ்வில் உறவுகள் என்று ஏதாவது இருக்கிறதா?  இப்போதெல்லாம் ஒரு குழந்தை ஐந்து வயதில் ஏதாவது ஒரு ரெசிடென்ஷியல் பள்ளியில் சேர்ந்துவிட்டால் பிறகு எப்போதும் அது அன்பைத்தேடி ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. அது அப்பா/ அம்மா/ புருஷன்/ பொண்டாட்டி யாரிடமும் கிடைக்காது.அந்த வகையில் என்னுடைய தலைமுறையே கொஞ்சம் பரவாயில்லைதான். பெரும்பாலும் ஒரு பிளஸ் டூ வாக்கில்தான் ஹாஸ்டலில் சேர்த்துவிடுவார்கள். எனக்கு அந்தக் கொடுமையும் நேர்ந்தது இல்லை. என் தங்கையும், நானும் பேசிக்கொள்வதையே அவள் கல்லூரி நண்பர்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். கேட்டால் எங்கள் வீடுகளிலெல்லாம் நாங்கள் பேசிக்கவே மாட்டோம் என்கிறார்கள். இப்படித்தான் இருக்கிறது நம் உறவுமுறைகளின் லட்சணம். பேஸ்புக், வாட்ஸ்அப்பில் ஒரு விர்ச்சுவல் நண்பனை நம்புகிற அளவிற்குக்கூட ஒருவன் அவன் பெற்றோரை, சகோதரனை, சகோதரியை நம்பமாட்டான் என என்னால் உறுதியாக சொல்லமுடியும். இதெல்லாம் ஏன் என்று கொஞ்சமாவது யோசிக்கவேண்டும்.

நோய் வரும்பொழுது படும் கஷ்டங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பெருநகரங்களில் ஒரு பெரிய சுதந்திரம் கிடைக்கிறது. யாரையும் கேட்காமல் சுயமாக முடிவெடுத்து இஷ்டத்துக்கு வாழ முடிகிறது. பெரும்பாலான பெண்களுக்கு அவள் வாழ்நாளின் மிகப்பெரிய சுதந்திரமே இந்த காலகட்டத்தில்தான் கிடைக்கும். ஆனால் எப்பொழுதுமே ஒரு பெண்ணை சுதந்திரமாக செயல்படவிடாத சூழல் எப்படி பெருநகரங்களுக்கு மட்டும் அவளை வேலை செய்ய அனுப்பிவைக்கிறது, எப்படி அவளுக்கு எல்லா சுதந்திரத்தையும் அளிக்கிறது? ஏனென்றால் பணம் கிடைக்கிறது. பணம் என்று வரும்போது ஏற்கனவே வரையறுக்கப்பட்ட ஒழுக்கத்தின் வாயில்கள் எந்த கேள்வியும் கேட்காமல் அடைக்கப்படுகிறது. அப்படியானால் இந்தப் பெற்றோர்களின் மனநிலைதான் என்ன?

இவ்வளவு பெரிய மக்கள்திரளை ஏன் சென்னைக்கு வரவழைக்கவேண்டும்? மன மகிழ்ச்சியின்றி, மனிதர்களுடன் பேசாமல், ஹெட் செட்களில் வாழும் சமூகத்தை எதற்கு உருவாக்கவேண்டும்? உறவுகளை நினைத்து ஏன் ஏங்கி சாக வேண்டும்? படித்து முடித்தவுடன் மூட்டை கட்டு, சென்னை வா, வேலை தேடு... ஏன்? எதற்கு? அத்தனை வாய்ப்புகளும் சென்னையிலேயே அடைத்துவைக்கப்படுவது எதற்காக? திருச்சிக்கோ, மதுரைக்கோ, கோவைக்கோ ஏன் அவ்வளவு வாய்ப்புகள் இல்லை? என்னுடைய ஊரில் நான் வாழ்வதற்கான வாய்ப்புகளை அமைத்துக்கொடுத்தால் நான் எதற்கு சென்னை வரவேண்டும்? எதற்கெடுத்தாலும் நான் சென்னைக்குதான் வரவேண்டும் என்பது என்மீது செலுத்தப்படும் உளவியல் வன்முறை. மற்ற நகரங்கள் மீதான திட்டமிட்ட புறக்கணிப்பு.  சென்னையை புனிதப்படுத்திக்காட்டுவதற்காக, சென்னையை பெருமைப்படுத்தி சென்னை சிட்டி கேங்ஸ்டர் என்றெல்லாம் பாடல் எழுதி, அங்கே இருப்பவர்களுக்குள் ஒரு வெற்றுப்பெருமிதத்தை விதைப்பது எல்லாம் என்னவொரு கருமாந்திரமான செய்கை. ஐடி கம்பனிகளையும், மால்களையும், தியேட்டர்களையும் கட்டிவிட்டால் எல்லா ஊரும் சென்னைதான். இதெல்லாம் ஒரு பெருமையா? ஆனால் சென்னை வெள்ளத்தின்போது வெளிவந்த அறிக்கைகள் சென்னை எந்தத் திட்டமும் இல்லாமல், கட்டத்தெரியாமல் கட்டிவைக்கப்பட்டுள்ளது என்று அதிகார வர்க்கத்தின்மீது காறி துப்பியபொழுது ,  தயவுசெய்து எங்க ஊரு பக்கம் வந்துடாதீங்க, சென்னையை நாசமாக்கனது போதும் என்றும் சொல்லத்தோன்றுகிறது.