மே 13, 2017

சிந்தனைச் சமூகம்

" மொதல்ல கருணாநிதியும்,ஜெயலலிதாவும் ஒண்ணாதான் இருந்தாங்க. அப்பறம் ரெண்டு பேருக்கும் சண்ட வந்துருச்சு. ஜெயலலிதா தனியா வந்து அதிமுகவ ஆரம்பிச்சாங்க. அப்பறம் அதுல வந்து எம்.ஜி.ஆர் சேந்துகிட்டாரு"

இப்படியாக ஒரு நண்பன் அதிமுகவின் வரலாற்றைச் சொன்னான். நான் தலையாட்டிக் கேட்டுக்கொண்டேன். பொதுவாகவே இப்படிப்பட்டவர்களோடு நான் விவாதம் செய்வது கிடையாது. நம் சூழலில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் என்பதால் விவாதம் செய்பவன்தான் கடைசியில்  கேவலப்பட வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிற அத்தனை விஷயங்களையும் பற்றி இவர்களிடம் ஒரு கருத்து இருக்கும். தெரியாத விஷயமென்பதே கிடையாது. உண்மையிலேயே தாங்கள் சொல்வது தவறு என்பது இவர்களுக்குத் தெரியாதா? கண்டிப்பாகத் தெரியும். ஆனால் தனக்கு எதுவும் தெரியாது என்கிற தாழ்வுணர்ச்சியை மறைத்துக்கொள்ள, எல்லாமே தெரியும் என்கிற ஒரு பொய் பிம்பத்தைக் கட்டமைக்க வேண்டியிருக்கிறது. எப்பொழுதும் கற்பனைக் குதிரையை ஓடவிட வேண்டியிருக்கிறது.

தெரியாத விஷயத்தை 'தெரியாது' என்று சொல்ல நமக்கு யாரும் சொல்லித்தந்ததே கிடையாது. பள்ளியில் ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு தெரியாது என்று சொல்பவன் முட்டாள். " என்ன சும்மா தெரியாது தெரியாதுன்னுட்டு இருக்க? தெரிஞ்சத சொல்லு " என்பார் ஆசிரியர். அப்போது ஏதாவது ஒன்றை உளறவேண்டும். கல்லூரியில் நடைபெறும் தேர்வுகளில் உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்றால்கூட ஏதாவது ஒன்றை காகிதத்தில் நிரப்பலாம்.  ஒன்றுமே எழுதாமல் இருப்பதும், எல்லா கேள்விக்கும் தவறான விடையைக் கதை எழுதி வைப்பதும் ஒன்றுதான். ஆனால் கதை எழுதுவதன்மூலம் தேர்ச்சி பெற முடியும். ஆனால் எதையும் எழுதாமல் இருந்தால் தேர்ச்சிபெற முடியாது.  ஆக வாழ்வின் எல்லா சூழலிலும் தெரியாத விஷயங்களை செய்யாமல் இருப்பதற்கு பதிலாக, தெரியாது என்று ஒப்புக்கொள்வதற்கு பதிலாக எதையாவது ஒன்றை தவறாகவாவது செய்துகொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இது எல்லாவற்றிலும் முழுமையான புரிதல் ஏற்படுவதை தடை செய்து மேம்போக்கான புரிதலை ஏற்படுத்துகிறது.

அத்தோடு நமது சூழல் ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட ஆளுமை உருவாவதை முடிந்தளவுக்கு தடுக்கிறது. புத்தகங்களை மனப்பாடம் செய்து தேர்வில் அவற்றைக் கக்குவதை சிந்தனையாக, அறிவாக வரையறை செய்கிறது. இளமைப்பருவத்தின் பெரும்பாலான காலம் இதில்தான் கழிகிறது. இது கூட்டு மனப்பான்மையில் உழன்ற ஆட்டு மந்தை கூட்டம் உருவாவதை ஊக்குவிக்கிறது. சிந்தனை செய்வதற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது. ஆனால் இந்த படிப்பாளிக்கூட்டத்தை முற்றிலும் புறக்கணிக்கிற கூட்டம் ஒன்றும் உருவாகி வருகிறது. அது படிப்பை முற்றிலுமாக புறக்கணித்து பொழுதுபோக்குகளின் மீது முழு கவனத்தையும் செலுத்துகிறது. வாழ்வியல் வெற்றியாக சமூகம் கட்டமைத்திருக்கிறவைகளை எட்டி மிதிக்கும் இக்கூட்டம் பணக்கார தந்தை இருக்கும் பட்சத்தில் தொழிலதிபராகவும், இல்லாத பட்சத்தில் பாமரனாகவும் வாழ்க்கையைக் கழிக்கிறது. இந்த இரு பிரிவுகளையும் தவிர விதிவிலக்காக மிகச்சொற்ப அளவில்  சமூகத்தை, அரசியலை வாசிக்கிற, சிந்தனை செய்கிற பிரிவும் உருவாகிறது.

சிந்தனைப் பிரிவு முன்வைக்கிற கருத்தியல்களால் மற்ற இரு பிரிவும் கடுமையான மன உளைச்சலுக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் ஆளாகின்றன. நாம் அறிவில்லாதவர்களோ என்று அவர்கள் சுயம் கவலைப்படுகிறது.   இதனைப் போக்க வாய்க்கு வந்ததை எல்லாம் வரலாறாக மாற்றுகிறது பாமரர்கள் பிரிவு. மேம்போக்காக விஷயங்களை அறிந்திருக்கிற படிப்பாளிகள் பிரிவு அறிவார்ந்த விஷயம்போல் தோற்றமளிக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்களைத் தயாரிக்கிறது. படிப்பாளிகள் பிரிவில் சில பேருக்கு உண்மையிலேயே அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தாலும் மேம்படாத முதலாளித்துவ முறைகளால் பொருள் தேடுவது மட்டுமே அவர்களின் வாழ்க்கையாகிப் போகிறது.

சிந்தனை குறைவான சமூகத்தால் அரசியல், கல்வி, வாழ்வியல் என எல்லாத் துறைகளிலும் தவறான தேர்ந்தெடுப்புகளும், முன்னெடுப்புகளும் நிகழ்கிறது . இது இந்தியச் சூழல் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. தவறான கல்வி அமைப்பும், மேம்படாத முதலாளித்துவ முறைகளும் உடைய எல்லா நாடுகளின் கதியும் இதுதான். அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் ஜெயிப்பதும், தமிழகத்தில் திருமாவளவன், சுப. உதயகுமாரன் தோற்பதும், மணிப்பூரில் இரோம் ஷர்மிளா தோற்பதும் இதனாலே நிகழ்கிறது ( இவர்களின் அரசியல் கொள்கைகளில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட இவர்களோடு போட்டியிட்டவர்கள் ஒன்றும் பெரிய புனிதர்கள் கிடையாதே). ஆனால் மக்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற ரகசிய ஒப்பந்தம் அரசியல்வாதிகளுக்கும், முதலாளிகளுக்கும் இடையில் இருக்கிறதோ என்றும் சந்தேகிக்கவேண்டி இருக்கிறது.