மே 17, 2017

காதலாகி கசிந்துருகி

எனக்கு பிடித்த நடிகர்களில் சிம்புவும் ஒருவர். நமது பிம்பமாக இன்னொருவரை நாம் கருதும்போதுதான் அவரை நமக்கு ரொம்பவும் பிடித்துப்போகிறது.  ஒல்லியாக இருக்கிறவனை ஊரிலிருக்கறவன் எல்லாம் பொழுதுபோகாமல் " என்ன தம்பி, சாப்பிடவே மாட்டீங்களா? இப்படி இருந்தா எப்படி? " என்று பரிகாசம் செய்துகொண்டிருப்பார்கள். இப்படி கேவலப்பட்டு நொந்து நூடுல்ஸ் ஆனவனுக்கான ஆதர்சம்தான் தனுஷ். எவ்வளவு ஒல்லியா இருந்தா என்ன? சினிமாவில் ஹீரோ ஆகலாம். சிக்ஸ்பேக் ஹீரோக்களுக்கு மத்தியில் சட்டையைக் கழட்டி எலும்பைக் காட்டலாம் என்று தாழ்வு மனப்பான்மையின் வேர்களை தகர்த்தெறிந்தவர். இதேபோல் பத்தாம் வகுப்பில் ஃபெயில் ஆனவனுக்கு ரோல் மாடல் சச்சின் டென்டுல்கர். அதேமாதிரி எனக்கு சிம்புவைப் பிடிக்கக் காரணம் அவரது காதல்கள். சில நேரம் சிம்புவின் பரிதாப நிலைமையைப் பார்த்தால் நம்மையறியாமல் சிரிப்பு வந்துவிடும். ஏன்யா உனக்கு மட்டும் இந்த நிலைமை என்று தோன்றும். பார்க்கிற பெண் எல்லாம் கழட்டிவிட்டு பைத்தியக்கார மனநிலைக்கு போனவர் அவர். அதுதான் என்னத்துக்குடா லவ் பண்றோம், என்ன (Censored)குடா லவ் பண்றோம் என்று அவரை சொல்லத் தூண்டியது. பிறகு விரக்தி முற்றி நான் சாமியார் ஆகறன்டா நிலைமைக்கு கொண்டுபோய்விட்டது. இதே நிலைமைதான் எனக்கும் என்பதால்தான் எனக்கு சிம்புவை பிடித்திருக்கிறது.

ஆனால் என் காதலுக்கும், சிம்புவின் காதலுக்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று இருக்கிறது. சிம்பு காதலிக்கிற பெண்கள் சிம்புவின் காதலை முதலில் ஏற்றுக்கொள்வார்கள். கொஞ்சநாள் போனபின்புதான் கழட்டி விடுவார்கள். ஆனால் நான் என் காதலை சொன்ன அடுத்த செகண்டே Whatsapp, facebook, hike அத்தனையிலும் block செய்துவிடுவார்கள். மற்றவர்களோடு communicate செய்யப் பயன்படுகிற தளங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது Gmailதான். அது ஏன் பிடிக்குமென்றால் அதில் எப்படி block செய்வது என்று பெரும்பாலும் பெண்களுக்குத் தெரிவதில்லை. அதனால் எல்லாவற்றிலும் Block ஆனபிறகு Gmailக்கு சென்று 'அன்பே, நாமிருவரும் நண்பர்களாகத் தொடர்வோமா?' என்று மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டிருப்பேன். ஆனால் சமீபகாலமாக இப்படி மின்னஞ்சல் அனுப்புவதுகூட பெண்ணுக்குக் கொடுக்கப்படும் உளவியல் தொல்லைதான் என்று பெண்ணியவாதிகள் சொல்வதால் என்னை Gmailல் block செய்வது எப்படி என்று நானே அவர்களுக்கு வழிமுறைகளை சொல்லித்தரலாமா என்று யோசித்துகொண்டிருக்கிறேன்.

இப்படி மின்னஞ்சல் அனுப்பி நச்சரிப்பது, காதலை சொல்வதெல்லாம் அதீத பிரியம் உள்ள பெண்களிடத்தில் மட்டும்தான். மற்றபடி சொல்லாத காதல்கள் ஏராளம் உண்டு. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். அதாவது எல்லோரிடமும் ஏதாவதொரு uniqueness இருக்கிறது. அதனால் என் தோழிகள் எல்லோர் மீதும் எனக்கு காதல் இருக்கத்தான் செய்கிறது. அதுவெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் அதீத அன்பு வைத்திருக்கிற ஒருவர் Block செய்துவிடும்போது whatsapp dpயில் மட்டுமல்ல நம் வாழ்க்கையிலேயே ஒரு வெற்றிடம் வந்துவிடுகிறது. எல்லா சமூக தொடர்புத்தளங்களிலிருந்தும் ஒரு பெண் நம்மைத் துண்டிப்பது ஏறக்குறைய அவள் இறந்துவிட்டதற்கு சமம்தான். அவள் எங்கேயிருக்கிறாள்? என்ன செய்கிறாள்? ஒன்றும் தெரியாது. அவள் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறாள். வீட்டிலோ, அலுவலகத்திலோ, சினிமா தியேட்டரிலோ, பார்க்கிலோ என எங்கோ இருக்கிறாள்.  ஏன் Whatsappல் கூட இருக்கலாம். எனக்கு தெரியவா போகிறது? என் உலகத்தில் அவள் இறந்துவிட்டாள். அவளை தொடர்புகொள்ளவே முடியாது. பெரிய தண்டனையைத் தந்துவிட்டாள். அப்போதுதான் Simbu modeக்கு போகிறேன். 'லவ்வுன்றவன் நீ யாருடா? என் முன்னால வந்து நின்னுப் பாருடா. உன்ன நாலு வார்த்த நாக்கப் புடுங்க கேட்கணும்' என்று பைத்தியமாகிறேன்.

இந்தப் பதிவை எழுதவேண்டுமென்று சுமார் ஒரு வாரமாக திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு என்ற பாரதியின் வாக்குக்கு ஏற்ப காலையில் ஒரு நாவல் படித்துக்கொண்டிருந்தேன். பின்பு Smuleவில் பாடல் பாடிவிட்டு கேட்க சகிக்காமல் எனக்கு மட்டும் தெரிகிற மாதிரி வைத்துக்கொள்வேன். மாலை முழுவதும் தோழி ஒருத்தியோடு whatsappல் மொக்கை போட்டுக்கொண்டிருக்கிறேன். அந்த நாவலை படித்துமுடித்து விட்டதால் இப்போதுதான் நேரம் கிடைத்தது. இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். வாட்ஸ்அப் மொக்கையை கைவிட முடியவில்லை.

Whatsappல் chat செய்ய மிகச்சிறந்த நேரம் இரவுதான். பகல் சுத்த வேஸ்ட். இரவில்தான் மறந்துபோன அத்தனை பழைய நினைவுகளும் வருகின்றன. உணர்ச்சிகள் Extreme levelல் இருக்கின்றன. அதிலும் ஒரு பெண் நம்மோடு உரையாடும்போது அவளை விட்டுவிட்டு offline போக மனது ஒத்துக்கொள்வதே இல்லை. இந்த இரவு முடியவேகூடாதென்று இருக்கிறது. பகலே இல்லாமல் எப்போதும் இரவு வேண்டுமென்று தோன்றுகிறது. இரவு ஒரு திகட்டாத மது. அது அத்தனைபேருக்கும் இலவசமாகவே போதை தருகிறது. மிகச்சரியான நேரத்தில் அதிலிருந்து மீண்டு தூக்கத்துக்கு போகாவிட்டால் மது தரும் அதே தலைவலியைத்தான் காலையில் இரவும் தருகிறது. இரவில் மட்டும் சிலபேர் மீது காதல் வருகிறது. விடியலில் நாம்தான் இவ்வளவு ரொமான்டிக்காக பேசினோமா என்று சந்தேகமும் வருகிறது.

எதிர்பாலின உடல்மீதான ஆசை நாம் குழந்தையாக இருக்கும்போதே வந்துவிடுகிறது. ஆனால் அப்போது அறிந்துகொள்ளும் ஆர்வம் மட்டும்தான் இருக்கிறது. ரகசியமாக பாதுகாத்து வைத்திருக்கிறவற்றை திருட்டுத்தனமாக பார்த்துவிடுகிற ஆர்வம். அதில் காமம் இல்லை. குழந்தைகள் திருட்டுத்தனமாக இன்னொருவர் ஆடையை விலக்கி ஆணுக்கும், பெண்ணுக்குமான வேறுபாடுகளை பார்த்துக்கொள்கிறார்கள். குழந்தைகள் உலகில் நிர்வாணம் சாதாரணமானதாக இருக்கிறது. அது மிகச்சுலபமாகவும் கிடைத்துவிடுகிறது. அக்காமார்கள் ஆற்றங்கரைக்கு அழைத்துப்போய்  கூடசேர்ந்து குளிக்கிறார்கள்.தண்ணீர் வாரி மேலெங்கும் இறைக்கிறார்கள். மார்பில் கட்டியிருக்கும் பாவாடை கொஞ்சம் இறங்கினாலும் அவர்களுக்கு கவலையில்லை. ஆனால் அந்தக் குழந்தைக்கு அது தேவையேயில்லை. ஓ அப்படியா, சரி ஓகே என்று கடந்துவிடுகிறது. நிர்வாணத்தை வைத்து என்ன செய்வதென்றே ஒரு குழந்தைக்குத் தெரியாது. ஆனால் அதை வைத்து என்ன செய்வது என்று அறிந்தவனுக்கு  நிர்வாணமே கிடைக்காது. அவனை யாரும் ஆற்றங்கரைக்கோ, குளக்கரைக்கோ அழைத்துப்போவதில்லை. போனாலும் அடித்து அனுப்பிவிடுகிறார்கள்.

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் காதலின் முதல்கட்டம் என்பது இன்னொருவர் உடல்மீதே அல்லது உடலின் ஏதாவது ஒரு பகுதிமீதே. ஒருவனின் உதடு, மூக்கு எதுவும் ஒருவளை காதல் கொள்ள செய்யும். ஒருவனின் நீண்ட விரல்களைக் காதலித்த பெண்ணை நானறிவேன். ஒருத்தியின் ஆடும் கால் தசைகளை நான் காதலித்தேன். வெறும் தெத்துப்பல் அழகிற்காக ஒருத்தியைக் காதலித்தேன். அவள்பின்னாலே திரிந்தேன். பாத்ரூம் போனால்கூட விடாது பின்தொடர்ந்தேன். பையன்களிடம் அவள் போகும்போது என் பெயரை சொல்லிக் கத்தசொன்னேன். இதுதான் காதல் என்று உறுதியாக நம்பினேன். ஆனால் இன்றுதான் அது ஈவ்டீசிங் என்று தெரிகிறது. ஆனால் மனித காட்டுமிராண்டித்தனத்தின் எச்சம் அப்படித்தான் இருக்கக்கூடுமென்றும் தோன்றுகிறது.   அவள் அதை உள்ளூர ரசித்தாளா? அப்படி அவள் ரசித்திருந்தால் அது ஈவ்டீசிங் ஆகாதா?

உடலை அடைவதற்கான வெறிதானே காதல்? அல்லது உடலுக்கு சொந்தக்காரரை அடையும் வெறி. பிடித்த ஒன்றை எப்படியாவது அடைந்து சுயத்தை திருப்திப்படுத்தும் ஒரு முயற்சி. புதிய துடைப்பம் நன்றாகப் பெருக்கும் என்பதுபோல் எத்தனை நாளைக்கு ஒரு புத்தம் புதிய காதலின் ஆயுள்? உடலை அறிந்து, புணர்ந்து, புணர்ந்து ஒருநாள் சலித்துப்போகிறது காதல். அவ்ளோ அழகில்லையோ இவ என்று தோன்றுகிறது. அழகு மட்டும் இருந்தென்ன ஒரு knowledgeம் இல்லையே என்று தோன்றுகிறது.

இங்குதான் காதலின் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கிறது. ஏற்கனவே கல்யாணம் ஆயிருந்தால் இது கள்ளக்காதல் கட்டம். சராசரியான மனிதர்களுக்கு இன்னொரு புதிய உடல் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு அறிவுஜீவிக்கு உடல் மட்டும் போதாது. அவனுக்கு/அவளுக்கு அறிவுள்ள ஒருத்தி/ ஒருவன் தேவை. தனக்கு தெரிந்தவற்றை விவாதிக்க, புதிதாக தெரிந்துகொள்ள அறிவுள்ள ஒருவர் தேவை. உடல்பற்று கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து அறிவுப்பற்றாக மாறும் தருணம்.

உடலும், அறிவுமே காதலிக்கப்படுவதற்கான , காதலிப்பதற்கான காரணங்கள். உடல் அழகே இல்லாத, பெரிய அறிதல்கள் இல்லாத ஒரு மனிதனை யார் காதலிப்பார்? இரண்டில் ஏதாவது ஒன்று நிச்சயம் தேவை. கருணை மிகுந்த அன்னைத் தெரசாவை கையெடுத்து கும்பிடுவானே தவிர எவனாவது காதலிப்பானா?

காதல் என்பது இன்னொரு மனிதன் என்னிடமிருக்கிற அழகை, அறிவை உறிஞ்சுவது. நான் அவனிடம் என்ன இருக்கிறதோ அதை உறிஞ்சுவது. முற்றாக உறிஞ்சுவிடும்போது சலித்துவிடுகிறது. இப்போது தேவை புதிய மனிதர்கள். மீண்டும் அதே உறிஞ்சல். அந்தவகையில் காதல் ஒரு தேடல். தேடி, கண்டறிந்து, சலித்து, மறுபடி புதிதாகத் தேடும் முடிவிலாத் தேடல்.

காதல் என்பதும், நட்பு என்பதும் சுயநலம்கலந்த பரஸ்பர உதவி. இந்த வாழ்க்கையின் தாங்கொணா வெறுமையை மகிழ்வாக்கிக்கொள்ளப் பயன்படும் பொழுதுபோக்குகள் காதலும், நட்பும். காதலிலும், நட்பிலும் மனிதன் தன்னை தனித்தே உணர்ந்துகொண்டிருக்கிறான். அவனால் ஒரு கட்டத்துக்கு மேல் இன்னொரு உயிரை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. இருவருக்கும் சில தேவைகள் இருக்கிறது. உறவு தொடர்ந்துகொண்டிருக்கிறது.இந்த உண்மை அவனுக்கு எரிச்சலாக இருக்கிறது. மனிதனின் உண்மையான முகம் அவனுக்கு அருவருப்பு ஏற்படுத்துகிறது. காதலையும், நட்பையும் புனிதமாக்கி காவியம் இயற்றுகிறான். கதைகளில், கவிதைகளில், திரைப்படங்களில் காதலை, நட்பை போற்றுகிறான். புனிதப்படுத்துகிறான். குறைபாடுகளை மறைத்துக்கொண்டதாய் மகிழ்ச்சி அடைகிறான். ஏனென்றால் அவனால் சத்தியமாக தனியாக வாழ முடியாது. உறிஞ்சுவதும், உறிஞ்சக்கொடுப்பதுமே அவன் விதி.

எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் அவன் காதலித்துக்கொண்டுதான் இருப்பான். காதலிக்காமல் இருப்பது அவனுக்கு அதைவிடத் துன்பமாக இருக்கிறது. இதோ இந்த வாட்ஸ்அப் சாட் இன்றிரவோ, அடுத்த மாதமோ, அடுத்த வருடமோ, ஐந்து வருடங்கள் கழித்தோ என்றாவது ஒருநாள் இருந்த திசை தெரியாமல் போய்விடும். ஆனால் இந்த நொடியில் அது தருகிற இன்பம் அலாதியானது. வாழ்தலும், மகிழ்தலும் இந்த கணத்தில்தான் இருக்கிறது. முடிவில் என்ன இருக்கிறது என்பதில் இல்லை. உண்மையில் முடிவென்பதே இல்லை. வேறொரு காதலும், நட்பும், அன்பும் நமக்காக எப்போதும் காத்துக்கொண்டுதான் இருக்கிறது.
உறிஞ்சுவதற்கும்,உறிஞ்சப்படுவதற்கும், ஒப்புக்கொடுப்பதற்கும், அடிமையாவதற்கும், அழுவதற்கும் மனிதர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். மிகச்சரியாக சிக்கிக்கொள்ளும் மனிதர்களுக்காக அவர்கள் தங்கள் வலைகளை எப்பொழுதும் தயாராக வைத்திருக்கிறார்கள்.