ஜூன் 22, 2017

ஒரு இறகின் கதை

என் வாழ்வில் உன் இருத்தலுக்கான நேரம் முடிந்துவிட்டது என்று அவள் சொன்னபொழுது அவன் அதிர்ந்துவிடவில்லை. உறவுகளின் முடிவுகளை அறிந்தபடியே நேசிக்கிறவன் அவன் என்பதால் அது அவனை ஆச்சரியப்படுத்தவில்லை . ஆனால் இவ்வளவு சீக்கிரம் அவனுக்கான நேரம் முடிந்துவிடுமென்று அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதற்கான சமிக்ஞைகள் முன்னரே கொடுக்கப்பட்டிருக்குமேயானால் அவன் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக தயார்படுத்திக்கொண்டிருந்திருப்பான். ஆனால்  ஒரு உறவின் நேரம் எப்போது முடியுமென்று யார்தான் அவ்வளவு துல்லியமாக சொல்லமுடியும்? அவனுக்கு ஏதாவது சொல்லவேண்டுமென்று தோன்றியது. ஆனால் பரபரப்பாக எழுதிக்கொண்டிருக்கும் தேர்வொன்றின் நேரம் இரண்டு நிமிடங்களில் முடியப்போகும்போது விடுபட்ட கேள்விகளில் இனி எந்த கேள்விக்கு விடை  அளிப்பது என்று ஒருவனுக்குத் தெரியாது. உண்மையில் ஒரு கேள்விக்கும் அப்போது விடை அளிக்க முடியாது. வரப்போவது தோல்விதான் என்று தெளிவாகத் தெரிந்தாலும் பதில் அளித்தவைகளாவது சரிதானா என்றுதான் பார்க்க முடியும். அவனும் அவன் செய்தவைகளைத் திரும்பிப் பார்த்தான். இது ஒரு நீண்டகால உறவு என்று இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவன் சொல்லியிருந்தான். உன்னை ஒருநாளும் கைவிடமாட்டேன் என்று இரண்டு வாரங்களுக்கு முன்னால்தான் அவள் சொல்லியிருந்தாள். கடைசியாக அவளுக்குச் சொல்ல ஒரு நன்றி மட்டுமே அவனிடமிருந்தது. அவளுக்கு அதற்கு பதிலாக ஒரு புன்னகை இருந்தது.

'என்னிடமிருந்து கொஞ்சம் விலகி இரு' என்று ஒரு பெண் சொல்லும்பொழுது அவளது குரல் அவ்வளவு தெளிவாக இருக்கிறது. அதில் கொஞ்சமும் நடுக்கமோ, தயக்கமோ இருப்பதில்லை.அதற்கு முன் அவளிடமிருந்த விசும்பலோ, கேவலோ, கொஞ்சலோ, கெஞ்சலோ எங்கே மறைந்ததென்று அவன் அதிசயத்தோடு பார்க்கிறான். ஒருவனைக் கைவிடும்போது,  என்றுமில்லாத ஒரு மன உறுதி ஒரு பெண்ணுக்கு வந்துவிடுகிறது.  அவ்வளவு தீர்க்கமாக அவள் அதை சொல்கிறாள். கடந்தகாலத்தின் நினைவுகள் கடுகளவேனும் அவளைத் தீண்டுவதில்லை. பெண்ணின் வலிமை என்னவென்பதை அவள் அப்பொழுது புரியவைத்துவிடுகிறாள்.  அதை ஏற்றுக்கொள்ளுதலைத் தவிர அவனுக்கு வேறு வழிகள் இருப்பதில்லை. அப்போது சொல்லப்படும் எந்தவொரு வார்த்தையும் பொருளற்றுதான் போகும்.

அவள் சொன்னதைப் பின்பற்றி ஒரு மரத்தின் பழுத்த இலையென அவன் உதிர்கிறான். ஒரு பறவையின் சிறகிலிருந்து விடுபட்டு தனித்த இறகென அவன் பறக்கிறான். அந்த பெரு மரத்துக்கு ஆயிரமாயிரம் இலைகள் உண்டு. ஒரு பழுத்த இலையின் முடிவு அதை என்ன செய்துவிடமுடியும்? உதிர்ந்து விழும் இறகு,  மீண்டும் பறவையை அடைந்துவிட எம்பி எம்பிக் குதிக்கிறது. ஆனால் ஒரு பறவையைப்போல் பறந்துவிட முடியாதென அதற்குத் தெரியாதா? பறவை செல்வதற்கு பரந்த வானமும் நிறைய தூரமும் இருக்கிறது. உதிர்ந்துவிட்ட இறகுக்கு ஒரு பறவை நிறைய நேரம் ஒதுக்கிக்கொண்டிருக்க முடியாது என்பதை உணரும் தருணத்தில் அந்த இறகு மண்ணில் சரணடைகிறது. இனி எட்டிவிட முடியாத வானத்தை, கண்டுவிட முடியாத பறவையை ஏக்கத்தோடு பார்க்கிறது. பின்பு பல பேருக்கு காது குடையவும் சில பேருக்கு கிச்சுகிச்சு மூட்டவும் உதவுகிறது. அவர்களிடம் இறகு, பறவையைக் காதலித்த கதையை சொல்லி சிரிக்கிறது, அழுகிறது.  அப்பொழுது அவர்கள் அந்த இறகைக் காதலித்து அதனோடே மண்ணில் வீழ்ந்த இன்னொரு இறகைக் காட்டுகிறார்கள். அதைத் தனக்கு தெரியவே தெரியாது என்பதுபோல் நடிக்கிறது அந்த இறகு. அந்த நொடியில் அது ஒரு மனிதனாக உருமாறியது. நாம் ஒரு பறவைக்காக எத்தனை இறகுகளின் காதலைப் புறக்கணிக்கிறோம் என நினைத்தான் அந்த மனிதன்.

மனித சுயநலங்களை, அகங்காரங்களை, அடைதலின் வெறியை அவன் பக்கம் பக்கமாக எழுதினான். பிறகு அவனே அவற்றோடு வாழ்ந்தான். எழுதப்படுபவைகள் யாருக்காக என்று கேட்டுக்கொண்டான். அவை ஒரு ஆறுதலுக்காக, காட்டிக்கொள்ளுதலுக்காக, நிரூபித்தலுக்காக என்று சொல்லிக்கொண்டான். ஒருவனின் வாழ்வின் சரியையும், தவறையும் இன்னொருவன் சொல்லிவிட முடியாது என்ற அறிந்த நாளில் அவன் மற்றவர்களை குறைசொல்வதை விட்டுவிட்டான். அவனவனைத் தவிர எவனையும் ஒருவன் முழுமையாகப் புரிந்துகொள்வதில்லை என்பதை அறிந்தநாளில் அவன் புலம்பல்களை விட்டு மௌனமானான். அப்பொழுது அவன் வேறு மாதிரி வாழ ஆரம்பித்தான். அந்த வாழ்க்கையும் அவ்வளவு அழகாய் இல்லைதான். ஆனால் அதைத் தவிர அவன் வேறு என்னதான் செய்யமுடியும் என்று யோசித்த நாளில் ஒரு தேவதையைக் காதலிக்க ஆரம்பித்தான். ஒருவனை அழிக்க முடிந்த காதலால் புத்தம் புதியதாய் ஒருவனை உருவாக்கியும் எடுக்க முடியுமென அந்த தேவதைதான் அவனுக்குக் கற்பித்தாள். அழகு தேவதை அல்ல அவள். தேவதைகளின் அழகே அவள்தான்.