டிசம்பர் 20, 2017

அரசியல்படுத்துதல்

நான் பத்தாம் வகுப்பு படித்தபொழுது மாநில அரசின் பாடத்திட்டத்தில் எம்.ஜி.ஆரைக் குறித்த ஒரு பாடம் இருந்தது. வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க, உந்தன் வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க,  அந்த வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக்கூட நம்பிவிடாதே, நீ வீட்டுக்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே ,திருடாதே பாப்பா திருடாதே, தூங்காதே தம்பி தூங்காதே, என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்றெல்லாம் பாடி சமூகத்தின் பலவித பிரச்சனைகளைத் தீர்த்துவைத்தவர் எம்.ஜி.ஆர் என்று அந்தப் பாடத்தின் வரிகள் இருக்கும். அந்தப் பாடத்தைப் படித்தபிறகு எனக்கு எம்.ஜி.ஆரின் மீது பெருமதிப்பு ஏற்பட்டது. அவரை ஒரு சிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதி என்று கருதினேன். ஆனால் இன்று எனக்கு அதை எழுதியவர் எம்.ஜி.ஆர் அல்ல என்று தெளிவாகத் தெரிகிறது. ஏன் பாடியவர்கூட எம்.ஜி.ஆர் அல்ல என்று உணர்கிறேன். நெருக்கடி நிலையை ஆதரித்து மத்தியில் செயல்படும் அரசாங்கத்தின் கைப்பாவையாக மாறிப்போன ஒரு எம்.ஜி.ஆரை இன்று நான் படிக்கிறேன். ஆனால் அன்று பதினைந்து, பதினாறு வயதில் எம்.ஜி.ஆரின் சமூக சீர்திருத்தத்தைப் புகழ்பாடிய அந்தப் பாடத்தைப் படித்த எல்லா சிறுவனும் இன்று எம்.ஜி.ஆரின் இன்னொரு தரப்பை அறிந்திருப்பார்களா? அந்த அரசியல்படுத்துதல் இங்கே கிடையாது. இப்போதிருக்கும் சூழலில் ஒவ்வொருவரையும் அரசியல்படுத்துதல் என்பதே சாத்தியப்படாதது.

தொண்ணூறுகளுக்குப் பிறகு தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தைத் தொடுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் செய்தித் தொலைக்காட்சிகள், இணைய செய்தி சேவைகள் உச்சத்தைத் தொடுகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு செய்திகள் வாசிக்கப்படுகின்றன. ஆனாலும் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரின் நினைவிடத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கிறது. தனது அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சொத்து சேர்த்தவர் அவரென்று மக்களுக்குத் தெரியாதா? ஏன் அவர்களுக்கு முழுமையான புரிதல்களை ஏற்படுத்த முடியவில்லை? இனிவரும் காலங்களில் அறமின்மைகளும், அதிகார துஷ்பிரயோகங்களும் பெரிய பிரச்சனைகள் இல்லையோ என்று தோன்றுகிறது. கொள்ளை அடித்ததில் ஒரு பங்குதான் மக்களுக்கும் தேவைப்படுகிறது. நாளை அவர் வாழ்ந்த தவ வாழ்க்கையைப் பற்றிய ஒரு பாடத்தை நம் குழந்தைகள் படிக்கலாம். அவருக்கென்று ஒரு பிம்பம் உருவாக்கப்படலாம். அப்போதும் ஒரு முழுச் சமூகத்தை நம்மால் அரசியல் படுத்த முடியாது.

1965ல் இந்தித் திணிப்புக்கு எதிராக இங்கே பெரும் போராட்டம் நிகழ்ந்தது. ஆனால் இன்று இந்தி படிப்பது நல்லதுதானே என்று பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தி வல்லாதிக்கத்தின் நுண் அரசியலைப் புரிந்துகொள்ளும் வகையில் மக்களை அரசியல் படுத்த முடியவில்லையே? சாதிகள் ஒழியவேண்டும் என்கிறார் சீமான். ஆனால் நீங்கள் வீட்டில் தமிழ் பேசினால் கூடத் தமிழரில்லை என்கிறார். வீட்டில் தமிழ் பேசும் நான் தமிழனில்லை என்பதை சாதியைத் தவிர வேறு எதை வைத்து அடையாளம் காண்பீர்கள்? பிறகு எப்படி சாதியை ஒழிப்பீர்கள்? இந்த நுண்அரசியலை புரிந்துகொள்ளாதவர்களை மூளைச்சலவை செய்கிறீர்கள்.

இந்தத் தனியார்மய காலகட்டத்தில் ஒருவன் பத்து மணி நேரம் வேலைசெய்து விட்டு வீட்டிற்கு வந்து இங்கே செயல்படும் நுண் அரசியல்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒருவர் கட்டாயப்படுத்த முடியாது. கிடைக்கும் சிறிது நேரத்தில் அவன் தன் காதலியுடனோ, மனைவியுடனோ, குழந்தையுடனோ பொழுதுபோக்கத்தான் செய்வான். பிறகு ஒருபக்க சார்புடைய மேம்போக்கான சில அரசியல் செய்திகளையும், சினிமா செய்திகளையும், கிரிக்கெட் செய்திகளையும்தான் படிப்பான். இப்படிப்பட்ட ஒருவனுக்கு நுண் அரசியல் தெரியவில்லையென்று ஒருவர் கொச்சைபடுத்த முடியாது. அதை அவனைத் தெரிந்துகொள்ள விடாமல் செய்யும் பெரு முதலாளிகளைத்தான் குறை சொல்ல முடியும். முறைபடுத்தப்படாத தனியார்மயக் கொள்கைகளைத்தான் காறி துப்ப முடியும். அரசியல்வாதிகளின் பச்சோந்தித்தனத்துக்கு, தனிமனித நலத்துக்கு,  அரசியல் என்ற துறையையே அழித்ததற்கு மக்களை எப்படிக் குறைசொல்ல முடியும்?

மேம்போக்கான அரசியல் கருத்துகள், தலைவர்களின் அதிநாயக பிம்பங்கள் நம் ஆழ்மனதில் சென்று சேரும் இடமாக பள்ளிகள் இருக்கின்றன. வளர்ந்தபிறகு ஏற்படும் வேலை சார்ந்த சிக்கல்களைக் கருத்தில்கொண்டு பள்ளி அளவிலேயே அரசியல்படுத்த வேண்டியிருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதையும் இங்கே செய்ய முடியாது. ஒரு பாடத்திட்டத்தை மாற்ற கல்வி அதிகாரிகளால் முடியுமென்றாலும் கல்வி அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் இதை செய்யமுடியாது. தனது அரசியல் நன்மைகளுக்காக பாடத்திட்டத்தை வைத்திருக்கும் ஒரு அரசாங்கம் இதைச் செய்ய ஒப்புக்கொள்ளுமா? எனவே அரசியல் மாற்றம் ஏற்பட்டால்தான் கல்விமுறை மாற்றத்தின்வழி சமூக மாற்றம் என்றாகிறது. ஆனால் அரசியல் படுத்தப்படாத மக்களை வைத்துக்கொண்டு எப்படி அரசியல் மாற்றம் அடைய முடியும்? அவர்கள் திரும்பவும் மேம்போக்கான அரசியல் புரிதலோடுதான் வாக்களிப்பார்கள். எனவே இந்த சிக்கல் சங்கிலித்தொடர் பிணைப்பாகத் தொடரும் ஒன்றாகத்தான் இருக்கிறது.

இதற்கு எந்தத் தீர்வையும் முன்வைக்க முடியவில்லை. ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி அறிவார்ந்த சிறு குழுவின் சர்வாதிகார ஆட்சியை அமைப்பது என்பதை ஒரு தீர்வாக வைக்கலாமென்றாலும் இனிவரும் காலங்களில் இங்கிருக்கும் வல்லரசுகளை எதிர்த்து செய்யும் ஆயுதப்போராட்டங்கள் வெற்றிபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அறவே இல்லைதான். இந்த நிலையில் தொடர்ச்சியாக உரையாடுதல், விவாதித்தல் என்பதைத் தவிர எந்த வழிகளும் இல்லை. சமூக வலைதளங்களில் நிகழ்ந்து வரும் உரையாடல்களுக்கும், யதார்த்தத்திற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அனிதா மரணமோ, சங்கர் சாதிவெறிக்கொலையோ சமூக வலைதளங்கள் தவிர்த்து நமது குடும்பங்களில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. மக்கள்நலக்கூட்டணிக்கு ஃபேஸ்புக் ஓட்டுப் போட்டபொழுது மக்கள் அண்ணா திமுகவுக்கு ஏன் ஓட்டு போட்டார்கள் என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. தங்களுக்குப் பிடித்த குழுக்களோடு மட்டும் உரையாடி எதிர்த்தரப்பை புறக்கணிக்கிறவர்களாக நன்கு படித்த, அறிவுள்ள சமூக வலைதள மக்கள் மாறிவிட்டார்களா என்று தங்களைத் தாங்களே அவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் தவிர்த்து நமது பள்ளிகளில், கல்லூரிகளில் ஆசிரியர்கள் பாடதிட்டத்தைத் தாண்டி அரசியல் பேசினால் சில மாற்றங்கள் நிகழும். பொறியாளர்களைவிட அதிக ஆசிரியர்களை உருவாக்கவேண்டியிருக்கிறது. எந்தப் படிப்புக்கும் இடம் கிடைக்கதவனுக்குத்தான் ஆசிரியப்பணி என்கிற சமூக மனநிலையை மாற்றவேண்டியிருக்கிறது.
தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று முதற்பக்கத்தில் எழுதப்பட்ட பாடநூலைக் கற்பிக்கும் ஆசிரியரே தாழ்த்தப்பட்டவர்கள் பள்ளிக்கு வராததற்கு காரணமாய் அமைவார் எனில் நாம் எவரைத்தான் அரசியல்படுத்த முடியும்?